போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் தனது குழந்தையை தாக்கியுள்ளார்.
இதன்போது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது உடம்பில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்ட போது அதை தடுக்கச் சென்ற வேளையில் அந்நபர் தீ வைத்துக் கொண்டு பொலிஸாரை கட்டிப்பிடித்துள்ளார்.
இச் சம்பவத்தில், தீக்காயங்களுக்குள்ளான நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் தீக்காயங்களுடன் கால் ஒன்று உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்