இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல் உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது. சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும். யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் யூதர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அப்போது அவர்கள் சிறு சிறு பழங்குடிகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இவர்கள்தான் முதன் முதலில் ஒரே கடவுள் (monotheism) என்ற கோட்பாடுடைய மதத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட பாலைவனம் போன்றிருந்தது. செழிப்பான நிலம் இல்லையாதலால் பலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
தண்ணீருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மீன் பிடிப்பவர்களாக தொழில் நடத்தினர். ரோம், எகிப்து, கிரீக் போன்ற நாட்டு மன்னர்கள் இவர்களை வென்றபோது யூதர்கள் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கின்றனர். ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
ஒரு காலத்தில் எகிப்தின் அரசர்களான ஃபேரோக்களின் அடிமைகளாக யூதர்கள் வாழ்ந்தனர் என்றும் ஃபேரோவின் கொடுமைக்கு இலக்காகி இவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த போது இவர்களின் தலைவரான மோசஸ் இறைவன் இவருக்குக் கட்டளையிட்டபடி இவர்களை இப்போதைய இஸ்ரேல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் கதை உண்டு.
Ten Commandments என்னும் ஆங்கிலப் படத்தின் கதை இதுதான். இஸ்ரேல் அவர்களுக்குக் கடவுள் அருளிய இடமாகக் கருதப்பட்டது. அன்றிலிருந்து அதைத் தங்கள் புனித பூமியாக (Holy Land) யூதர்கள் கருதுகின்றனர்.
யூதர்களைப் புனித பூமிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மோசஸ் இறந்துவிட்டார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கனான் என்று அப்போது அழைக்கப்பட்ட, இப்போது இஸ்ரேல் இருக்கும், இடத்தை யூதர்கள் அடைந்தனர்.
இயேசு பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்ததாகக் கூறப்பட்டாலும் இதற்குச் சரித்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியதில் யூதர்களின் உழைப்பு எந்த விதத்திலும் இல்லை என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள். ஆனால் மேலே கூறிய படத்தில் இவை உண்மை என்று சித்தரிக்கப்படுகிறது.
யூதர்களின் மூதாதையர் ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் என்றும் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வாரிசுகள்தான் யூதர்கள் என்றும் பழைய ஏற்பாடு பைபிள் (Old Testament) சொல்கிறது.
(இந்த ஆபிரகாம்தான் தங்களுடைய மூதாதையர் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் கூறுகிறார்கள்.) ஆபிரகாமின் சந்ததியினர் என்று கருதப்படும் யூதர்கள் இப்போதைய ஜெருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.
இவர்களுடைய மன்னர்களில் டேவிட் அரசரும் அவருடைய மகன் சாலமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள். ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் ஆகிய அந்நியர்களின் படையெடுப்பால் பல முறை அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர்.
சாலமன் காலத்தில் ஜெருசலேமில் கட்டப்பட்ட யூதர்கள் கட்டிய முதல் கோவில் கி.மு. 587-இல் அவர்களுடைய பகைவர்களால் அழிக்கப்பட்டது. அதன் பிறகு கட்டிய இரண்டாவது கோவில் கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது. அதனுடைய கிழக்குப் பகுதியில் இருந்த ஒரு வெளிச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இப்போது இருக்கிறது.
கிறிஸ்துவர்கள் கடவுளின் குமாரர் என்று கருதும் இயேசு, யூத சமுதாயத்தில் ஒரு யூதராகப் பிறந்தார். அவர் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் இரண்டாவது கோவிலில் மதகுருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளையும் எளியவர்களையும் தங்கள் நலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதையும் அவர்களைச் சுரண்டிப் பிழைத்ததையும் கண்டித்தார்.
அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தார். இவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். அப்போதைய யூத சமூகத்தில் இருந்த குறைகளைக் களைந்து அதை நேர் வழியில் திருப்ப முயன்றார்.
இவருடைய சீர்திருத்தங்களினால் தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று எண்ணிய செல்வந்தர்கள் மற்றும் சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் இவரைச் சதிசெய்து ரோமானிய அரசன் பிலாத்துவின் உதவியோடு சிலுவையில் அறைந்தனர்.
அந்தக் காலத்தில் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வதுதான் பழக்கமாக இருந்தது. சமூக சீர்திருத்தவாதியான இயேசு ஒரு சமூக விரோதியாகக் கருதப்பட்டார்.
அதனால் அப்போதைய யூத சமூகம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது. இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள் கிறிஸ்துவ மதத்தை நிறுவினர்.
இயேசு கடவுளின் உண்மையான தூதர் என்றும் இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையென்றும் நம்பினர்.
தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றித் தங்களில் நல்லவர்கள் எல்லோரையும் ஒரு நாள் இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தூதர் இயேசு என்பதையோ, இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையோ நம்பத் தயாராக இல்லை.
இயேசு ஒருவரை மட்டும் கடவுள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழவைத்தார் என்று இயேசுவின் ஆதரவாளர்கள் கூறியது அவர்களுக்கு வினோதமாக இருந்தது. நல்லவர்கள் எல்லோரையும் இறைவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
ஆனால் இயேசுவைப் பின்பற்றிய யூதர்கள் கடவுளின் தூதர் இயேசுதான் என்றும் அவர் வருவார் என்று வேதங்களில் இருப்பதாகவும் கூறினர்.
தங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டபோதிலும், ரோமானியர்களோடு யூதர்களின் உறவு நலிந்துகொண்டே போனது. தங்கள் சுதந்திரத்திற்காக இவர்கள் ரோமானியப் பேரரசிற்கு எதிராகப் போராடிய போதெல்லாம் நசுக்கப்பட்டனர்.
கடைசியாக கி.பி. 132-இலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குடியேறினர். இவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நேர்ந்த போதும், அவர்களுடைய இரண்டாவது கோவில் ரோமானியர்களால் கி.பி. 70-இல் இடிக்கப்பட்ட போதும் இயேசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் கடவுள் இவர்களைத் தண்டித்தார் என்று பின்னால் வந்த சில கிறிஸ்துவ போதகர்கள் எழுதினர்.
கடவுளால் அனுப்பப்பட்ட அவருடைய தூதரைக் கொன்றதன் மூலம் யூதர்கள் மிகுந்த பாவத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள் என்றும் அவர்களுடைய மதமும் வேதங்களும் உண்மையானவை அல்ல என்றும் அவர்களோடு கிறிஸ்துவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கிறிஸ்துவ மத போதகர்கள் கூற ஆரம்பித்தனர்.
இதைத்தான் யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்கிறார்கள். இது உலக சரித்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது. அமெரிக்காவில் கூட இது இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம்.
கிறிஸ்துவிற்குப் பிறகு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு கிறிஸ்துவ மதம் தழைக்கவில்லை. அது மட்டுமல்ல கிறிஸ்துவர்கள் மற்றக் குடிமக்களாலும் மன்னர்களாலும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
மூன்றாம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாயினர். ஆனால் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டினின் தாய்க்குக் கனவில் ஒரு சிலுவை காட்சி அளித்ததோடு இறைவன் அவளிடம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும்படியும் அதைப் பரப்பும்படியும் கட்டளையிட்ட பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் போனதோடு அது வேகமாகவும் பரவியது.
கான்ஸ்ட்டாண்டின் தன்னுடைய கடைசிக் காலத்தில் கிறிஸ்துவனாக மாறினான். அவனுக்குப் பின் வந்த முதல் தியோடிசியஸ் கிறிஸ்துவ மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ மதமாக அறிவித்தது யூதர்களின் சரித்திரத்தில் பெரிய மாற்றமாக அமைந்தது.
கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியது. தியோடிசியஸ் யூதர்களின் குடியுரிமைகளுக்குப் பங்கம் எதுவும் விளைவிக்கவில்லை என்றாலும் கிறிஸ்துவ குருமார்கள் யூதர்களையும் அவர்களுடைய மதத்தையும் தீவிரமாக விமர்சித்தனர்.
இருப்பினும் கிறிஸ்துவிற்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகளாக ரோமானியர்களின் பல கடவுள்களைக் கொண்ட பேகன் மதம்தான் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் பொது எதிரியாக விளங்கியது. பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த அவர்களுக்கிடையே சிற்சில சச்சரவுகள் தோன்றினாலும், யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படாமலேயே இருந்தன.
முதல் கிரிகிரி என்னும் போப் காலத்தில் யூதர்களை வற்புறுத்திக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதை அவர் கண்டித்தார். ஆயினும் யூதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை.
ஹிரக்லியஸ் என்னும் ரோமானிய அரசன் பாரசீகர்களோடு நடத்திய யுத்தத்தில் ஜெருசலேமை இழந்த பிறகு அந்த இழப்பிற்கு யூதர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து செய்த சதிதான் காரணம் என்று நினத்ததால் யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தினான்.
அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. அதே சமயம் பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் யூதர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஸ்பெயினில் 694-இல் யூதர்களுக்குக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
பின்னால் பல நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்கள், அந்நியர் வெறுப்பு, தங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களைப் பலிகடா ஆக்குவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களுடைய இறைவனின் தூதரான இயேசுவைக் கொன்றவர்கள் என்ற காரணத்தால் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுத்ததுதான் முதன்மைக் காரணம்.
வரலாற்றின் இடைக் காலமான 600-1500-இல் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல கிறிஸ்துவ போப்கள் அவர்கள் மீது பல அவதூறுகளைக் கிளப்பினர்.
பல யூதர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினர். வியாதிகள் மனிதர்கள் செய்த தவறுகளால் வருபவை, மத குருமார்களிடம் சென்றுதான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் யூத மருத்துவர்களிடம் வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் கிறிஸ்தவ போப்புகள் மக்களிடம் கூறினர்.
யூதர்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர். அதிலிருந்தும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டதால் யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தனர். அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்னும் குற்றமும் யூதர்கள் மேல் சுமத்தப்பட்டது. (அதிக வட்டி வாங்கும் பழக்கம் யூதர்களிடம் இருந்ததால் இயேசு அவர்களைக் கண்டித்திருக்கிறார்.)
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி, இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பிறகு முஸ்லீம் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர். அவர்களை வென்று பாலஸ்தீனத்தை மீட்கச்சென்ற, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சிலுவைப் போராளிகள் (crusaders) (கிறிஸ்துவ மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்) வழியில் பல யூதர்களுக்கும் நிறைய தீமைகள் விளைவித்தனர்.
முஸ்லீம் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஸ்பெயின் அரசு யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அதிக வரி விதித்தது என்றாலும் யூதர்களை பலவந்தமாக மதம் மாறச் சொல்லவில்லை.
ஆனால் மறுபடி கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் ஆட்சியைப் பிடித்த பிறகு யூதர்கள் மீது 1265-இல் மத விசாரணையை (Inquisition) ஆரம்பித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்களின் வாரிசுகளில் பலர் மத போதகர்களாக, துறவிகளாக மாறிய போதிலும் விசாரணை அவர்களையும் விட்டு வைக்கவில்லை;
அவர்கள் உண்மையிலேயே மதம் மாறிவிட்டார்களா என்று பரிசோதித்தனர். 1492-இல் போப் வெளியிட்ட ஆணை, கிறிஸ்தவர்கள் அல்லாத முஸ்லீம்களும் யூதர்களும் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலொழிய நாட்டை விட்டுக் கடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.
(இதே போப்தான் ஸ்பெயின் அரசியால் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்ட கொலம்பஸ் செல்லும் இடங்களில் கிறிஸ்துவரல்லாதவர்களைச் சந்தித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்தார். இப்படி போப்பின் ‘ஆசீர்வாதத்தைப்’ பெற்ற கொலம்பஸும் அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் அமெரிக்கக் கண்டங்களில் பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர்.)
பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியிலும் யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர். இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கப் பலர் போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.
போலந்தில் யூதர்களின் வணிகத் திறமையைக் கற்றுக்கொள்வதற்காக பல செல்வந்தர்கள் இவர்களை ஆதரித்தனர். யூதர்கள் அங்கு அவர்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவினர். ஆனால் மறுபடி பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால் யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.
ரஷ்யப் பேரரசி கேத்தரின் பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில் குடியேற அனுமதித்தார். அரசி இவர்களுக்கு ஆதரவு அளித்தாலும் அவர்களை மண்ணில் பாடுபடும் விவசாயிகளாகவே அனுமதித்திருந்தார்.
யூதர்களைத் தொழில்களில் அனுமதிக்கவில்லை. இவருக்குப் பின் வந்த முதலாம் அலெக்ஸாண்டர், முதலாம் நிக்கலஸ் காலத்தில் யூதப் பையன்கள் பன்னிரெண்டு முதல் இருபத்தைந்து வயது வரை ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.
யூதர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் இருந்ததால் பெரிய வெள்ளி போன்ற நாட்களில் (அன்றுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கிறிஸ்துவர்கள் நினைவுகூருவார்கள்) யூதர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர், சில கிறிஸ்துவர்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால்.
பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த, புராடஸ்டெண்ட் கிறிஸ்துவப் பிரிவைத் தோற்றுவித்த மார்ட்டின் லூத்தர் யூதர்களைப் பற்றிப் படித்திருந்ததால் ‘இயேசு ஒரு யூதராகப் பிறந்தார்’ என்னும் நூலை எழுதி யூதர்களை கிறிஸ்துவ மதத்திற்கு இழுக்கலாம் என்று நினைத்தார்.
ஆனால் அப்படி நடக்காததால் யூதர்களையும் அவர்கள் மதத்தையும் தூற்ற ஆரம்பித்ததோடு வங்கித் தொழில், வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து யூதர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், முடிவாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல் ஜெர்மனியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.
பல நாடுகளில் யூதர்கள் தங்கள் திறமையினால் செல்வந்தர்களாகவும் அரசியலில் அதிகாரம் உள்ளவர்களாகவும் விளங்கினாலும் அவர்களுடைய இந்த வாழ்க்கை வெற்றியே மற்றவர்களுக்கு அவர்கள் மேல் பொறாமையையும் வெறுப்பையும் உண்டாக்கியது.
மேலும் யூதர்கள் தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தையும் எப்போதும் கொண்டிருந்தனர். பல நாடுகளில் மற்றவர்களிடமிருந்து தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.
குடியேறிய எல்லா இடங்களிலும் அந்தந்தச் சமுதாயங்களோடு அவர்களால் இணைய முடியவில்லை. இதனாலோ என்னவோ அந்தச் சமுதாய மக்களும் இவர்களைச் சரியாக நடத்தவில்லை.
தங்கள் யூத மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் இவர்களுடைய மதத்தலைவர்கள் தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள். குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மதச் சடங்குகளில் தங்கள் மொழியான ஹீப்ருவைத் தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில்தான் யூதர்களின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இருந்தது. இங்கு ஜெர்மன் மொழியிலிருந்து உருவாகிய யிட்டிஷ் (Yiddish) மொழியைப் பேசினர்.
ரஷ்யா, போலந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளிலும் யூதர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்த ஹிட்லர் இவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது ஐரோப்பாவில் இருந்த யூத எதிர்ப்பின் உச்சக் கட்டம் எனலாம்.
டிசம்பர் ஆறாம் தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல் ஹோலகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும், ஹிட்லர் நடத்திய, யூதர்களின் படுகொலையைத் தொடர்ந்து தப்பிய யூதர்கள் ஜெர்மனியை விட்டு அகதிகளாக ஓடிவராமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே உருவாகியிருக்காது.
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களுடைய நலன்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று நினைக்க ஆரம்பித்த யூதர்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
யூதர்கள் முதலிலிருந்தே – அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே – தங்கள் எல்லோரையும் தங்களுடைய பழைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் ஒன்று சேர்க்கக் கடவுளின் தூதர் ஒருவர் வருவார் என்று காத்திருந்தார்கள்.
இருந்தாலும் ஐரோப்பாவில் நிலவிய யூத எதிர்ப்பு கடவுளின் தூதர் வருவதற்காகக் காத்திருப்பதை விட தாங்களாக முயன்று தங்களுக்கென்று தனி நாடு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களிடம் தோற்றுவித்தது.
மேலும் அந்த நாடு அவர்களின் பழைய புண்ணிய ஸ்தலமான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர். இவர்கள் அங்கு வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அங்கு இப்போது வேறு இன மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும் துரதிருஷ்டவசமாக (தங்களின் வசதிக்காக) அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.
இவர்களின் இந்த ஆசையின் (பேராசை என்று கூடச் சொல்லலாம்) விளைவே இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம். (இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையென்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமிக்கு மறுபடி வந்து உலகம் பூராவையும் தன் ஒரே குடையின் கீழ் பாரபட்ச முறையில் ஆள்வார் என்றும் அப்போது உலகில் நேர்மை, நியாயம் கோலோச்சும் என்றும் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதாம்.
காஷ்மீர் பிரச்சினை போல் இப்போதைக்குத் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இந்த இரண்டு பிரச்சினைகளும் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்படவை என்று கூறினால் அது மிகையாகாது. இந்தப் பிரச்சினை உருவான கதையைப் பின்னால் பார்ப்போம்.)
(தொடரும்)
நாகேஸ்வரி அண்ணாமலை -முனைவர்