காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு நிராகரித்திருக்கிறது.

சிகிச்சையின் போது இடிந்து விழுந்த மேற்கூரை

செவ்வாய் இரவு (அக்டோபர் 17) அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. ரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

‘எல்லை கடந்த மருத்துவர்கள்’ என்ற மனிதாபிமான உதவி செய்யும் அமைப்பைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு-சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், “தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார்.

இந்தச் சம்பவத்தை “ஒரு படுகொலை” என்று அவர் விவரித்தார்.

தாக்குதலுக்கு பின் மருத்துவமனையின் நிலை எப்படி உள்ளது?

காஸா மருத்துவமனை தாக்குதலில் 471 பேர் கொல்லப்பட்டதாகவும், 314 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காசாவில் தாக்குதலுக்குள்ளான அல்-அஹ்லி மருத்துவமனையைச் சுற்றி காணப்படும் நிலைமை “இதுவரை பார்த்ததில்லை, விவரிக்க முடியாது” என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாக்டர் அஷ்ரப் அல்-குத்ரா வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவமனையின் தரையிலும், தாழ்வாரங்களிலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

சில இடங்களில், மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். பலர் தங்கள் முறை அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன.” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்த குண்டுவெடிப்பில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சிலருக்கு “உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்” அளவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன, பல காயங்களுக்கு “இங்குள்ள திறன் இல்லாத வரையறுக்கப்பட்ட மருத்துவக் குழுக்களால்” சிகிச்சை அளிக்கப்படுகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

‘தாக்குதலை நேரில் பார்த்தேன்’

சம்பவத்தின்போது அருகில் இருந்த பிரிட்டிஷ்-பாலத்தீன கட்டுமானப் பொறியாளரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜாஹர் குஹைல் பிபிசியிடம் கூறுகையில், தான் கண்டது ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரம்’ என்றார்.

“எஃப்-16 அல்லது எஃப்-35 ரக போர் விமானங்களில் இருந்து வந்த இரண்டு ராக்கெட்டுகள் மக்களை இரக்கமின்றி கொன்றதைப் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.

வெடிப்பில் ஏற்பட்ட தீயினால் பலர் உயிரிழந்ததாகவும், முதலில் வந்த மீட்புப் பணியளர்களிடம் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்குத் தேவையான உபகரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பு இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டி, இதை ஒரு ‘கொடூரமான படுகொலை’ என்று வர்ணித்தது.

மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றி இஸ்ரேல் கூறுவது என்ன?

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இருதரப்புமே பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றி இஸ்ரேலிய இராணுவத்தின் டேனியல் ஹகாரி விரிவாகப் பேசினார்.

நேற்று உள்ளூர் நேரப்படி 18:59 மணிக்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் என்ற போராளிக் குழுவால் “சுமார் 10 ராக்கெட்டுகளின் சரமாரியாக” ஏவப்பட்டதாக ஹகாரி கூறினார்
அதே நேரத்தில் மருத்துவமனையில் வெடிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் வான்வழி காட்சி பகுப்பாய்வு, “தவறான” இஸ்லாமிய ஜிஹாத் ராக்கெட்டால் வெடிப்பு ஏற்பட்டது என்பதை “முழுமையான உறுதியுடன்” காட்டுகிறது, இது மருத்துவமனைக்கு அருகிலுள்ள கல்லறையில் இருந்து ஏவப்பட்டது.

“சேதமடைந்த ஒரே இடம்” மருத்துவமனைக்கு வெளியே “எரியும் அறிகுறிகளைக் காணக்கூடிய ஒரு கார் நிறுத்துமிடம்” என்று ஹகாரி கூறினார்.

இஸ்ரேலிய தாக்குதல்கள் “பள்ளங்கள் மற்றும் கட்டமைப்பு சேதம்” போன்ற மிகவும் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் வாதிட்டார்.

ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஹகாரி கூறுகையில், “ஹமாஸ் தங்களுக்குத் தெரியும் என்று கூறியது போல் விரைவாக என்ன நடந்தது என்பதை அறிய இயலாது” என்றார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் வாதத்தை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று ஒரு நிருபர் கேட்டபோது, இஸ்ரேல் கடந்த காலத்தில் “முடிவெடுப்பதில் விரைந்து செயல்பட்டது” என்று ஒப்புக்கொண்டார், ஆனால் அவர்கள் “இரட்டை சரிபார்ப்பதற்கு” பல மணிநேரம் எடுத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார். அவர்களின் உளவுத்துறையும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்:

ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தி, “காசாவிற்குள் இருந்து” ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் கண்காணித்தது. அவை அருகிலுள்ள கல்லறையிலிருந்து ஏவப்பட்டதைக் காட்டும் பாதையுடன் ராக்கெட் தவறான பாதையில் செல்வது குறித்து அவர்கள் தகவல் பரிமாறிக் கொண்ட ஆதாரமும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு மறுத்துள்ளது.

ஹமாஸ் – பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் வேறுபாடு என்ன?

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேலிய இராணுவம் குற்றம்சாட்டும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் காசா பகுதியில் இரண்டாவது பெரிய போராளிக் குழுவாகும். இது ஈரானால் ஆதரிக்கப்படுகிறது.

இது ஹமாஸைப் போன்ற இஸ்லாமிய சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் அரசின் அழிவிலும் அது உறுதியாக உள்ளது. இது பொதுவாக ஹமாஸை விட தீவிரமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில், ஹமாஸின் நடவடிக்கைகள் ஆளும் சக்தியாக பொறுப்புகளைக் கொண்டிருப்பதால், அதன் செயல்பாடுகள் தணிந்ததாகத் தோன்றியது.

இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸிடமிருந்து வேறுபட்டு தனித்து இயங்குகிறது. ஆனால் பெரிய குழுவால் பொதுவாக தேவைப்படும்போது அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது.

இஸ்லாமிய ஜிஹாத் அதன் சொந்த போராளிப் பிரிவு, அல் குத்ஸ் படை மற்றும் அதன் சொந்த ராக்கெட் ஆயுத கையிருப்பைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே, இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸ் நடவடிக்கையில் இணைவதாகக் கூறியது.

Share.
Leave A Reply