உலகம் முழுவதும் பிரசித்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின்‌ நிறுவனரான பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவின் காரணமாக இன்று மாலை ஐந்து மணி அளவில் காலமானார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களால் அன்புடன் ‘அம்மா’ என்று போற்றப்பட்டவர் பங்காரு அடிகளார்.

பெண்மணிகள் எந்த நாளிலும் கருவறைக்குச் சென்று பூஜைகளை செய்யலாம் என்று ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார்.

உலகம் முழுவதும் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கி ஆன்மீக பணிகளில் பெண்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுத்து வருபவர்.‌

இவரது ஆன்மீக சேவையை பாராட்டி இந்திய அரசு 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

82 வயதான இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இன்று மாலை 5 மணி அளவில் உயிரிழந்தார்.

1970 ஆம் ஆண்டு பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை உருவாக்கினார். அப்போது முதல் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்தார்.

1978 ஆம் ஆண்டு முதல் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தை தொடங்கி வைத்தார். இன்று உலக அளவில் 2,500 க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்கள் செயல்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அம்மா’ வை வணங்கி ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆன்மீகவாதிகளில் தனித்துவமான அடையாளத்துடன் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வந்த ‘பத்மஸ்ரீ’ பங்காரு அடிகளாரின் இழப்பு அவருடைய பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

Share.
Leave A Reply