சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று காலமான நிலையில், அவருக்கும் பெரும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பார்ப்போம்.

மேல்மருத்துவத்தூர் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஆதிபராசக்தி பீடமும், அதன் நிறுவனருமான பங்காரு அடிகளாரும்தான்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து வழிபட்டு செல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் இந்த இடம், 1980 க்கு முன் மிகவும் சிறிய இடமாக இருந்த ஆதிபராசக்தி பீடம் படிபடியாக வளரத் தொடங்கியது.

நாடு முழுவதும் பங்காரு அடிகளாரின் புகழ் பரவ பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி பெரும் பெரும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் இவரை தேடி வந்தனர்.

ஆதிபராசக்தி பீடமும், அதன் சொத்துக்களும் பன்மடங்கு பெருகின. ஏராளமான பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் இந்த பீடத்தின் கீழ் செயல்படத் தொடங்கின.

ஆதிபராசக்தி மடத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து அதற்கெனவே தனியார் ரயில் நிலையம், சிறப்பு ரயில் விடும் அளவுக்கு பெரும் செல்வாக்கை பெற்றார் பங்காரு அடிகளார்.

இவரது பெயரில் நாடு முழுவதும் வழிபாட்டு மன்றங்கள் அமைந்து உள்ளன. இவரது கோயிலுக்கு ஏராளமான கிளைகள் இருக்கின்றன.

உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இவருக்கு உள்ளார்கள். பங்காரு அடிகளாரின் தனிச் சிறப்பு என்னவென்றால் இந்துத்துவ அரசியல்வாதிகள், ஆன்மீகத்தை நம்பும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி கடவுள் மறுப்பை பின்பற்றும் திராவிட கட்சிகளின் தலைவர்களையும் ஈர்த்தவர்.

ஆனால், எந்த அரசியல் நிலைபாட்டையும் இவர் எடுத்தது இல்லை. சிவப்பு நிறத்தை அடையாளமாக கொண்ட பங்காரு அடிகளாரை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள்.

பாமக தலைவர் ராமதாஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு பங்காரு அடிகளாரை சென்று சந்தித்தபோது அவர் அரசியலுக்கு வருவதாக பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால், ராமதாஸ் மட்டுமின்றி திமுக தலைவர்களும் அவரை சந்தித்து உள்ளார்கள்.

குறிப்பாக 2021 தேர்தலுக்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மடத்துக்கு சென்று பங்காரு அடிகளாரை சந்தித்தார்.

திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பங்காரு அடிகளாரின் வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அமைச்சர் கே.என்.நேருவும் பங்காரு அடிகளாரை சந்தித்து உள்ளார். அப்போது பங்காரு அடிகளார் சோபாவிலும் நேரும் தரையிலும் அமர்ந்து இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

  கடந்த 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலினும் பங்காரு அடிகளாரை நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜனும் பங்காரு அடிகளாரை சில ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்து இருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியும் மேல்மருவத்தூருக்கு நேரில் சென்று பங்காரு அடிகளாரை சந்தித்து மரியாதை செலுத்தினார். அதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply