ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது நடத்தியிருக்கும் தாக்குதலை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காயிதா அமைப்பு நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

மேலும், அந்தத் தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்கா ஆத்திரத்தில் எதிர்வினையாற்றியதாகவும், அதில் சில தவறுகள் நிகழ்ந்ததாகவும், இப்போது அதேபோன்ற ஆத்திரத்தின் பிடியில் இஸ்ரேல் சிக்கக்கூடாது என்றும் கூறினார்.

அதோடு, காஸா பகுதிக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை அனுப்ப எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி ஏற்றுக்கொண்டதாக பைடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களைப் பிணைக் கைதிகளாகக் கொண்டு சென்றபின் இஸ்ரேல் காஸாவின்மீது வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நிகழ்த்தியது. மேலும் காஸா பகுதிக்கு மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை நிறுத்தியது. இதனால் அங்கு மனிதாபிமான சிக்கல் தீவிரமடைந்தது.

தொடர்ந்து செவ்வாய் இரவு (அக்டோபர் 17) காஸா பகுதியில் இருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த வெடிப்பில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மனிதாபிமானச் சிக்கல் மேலும் மோசமானது.

இந்நிலையில், இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இருபது டிரக்குகள் அளவிலான உதவிப் பொருட்களை காஸாவுக்கு அனுப்ப எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி ஏற்றுக்கொண்டதாக பைடன் கூறினார்.

மேலும் பாலத்தீனிய குடிமக்களுக்கு உதவ 83 கோடி ரூபாய் அமெரிக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், இன்று (வியாழன், அக்டோபர் 19) பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் இஸ்ரேல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இஸ்ரேலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘வெள்ளிக்கிழமைக்குள் உதவி வழங்கப்படலாம்‘

இதுகுறித்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேசிய பைடன், இந்த உதவிப்பொருட்கள் வெள்ளிக்கிழமை வரை அனுப்பப்படமாட்டாது என்றார். இதற்குக் காரணமாக சாலை பழுதுகளை அவர் குறிப்பிட்டார்.

“சாலைகள் செப்பனிடப்பட உள்ளன. இந்தப் பணிகள் நாளை (வியாழக்கிழமை, அக்டோபர் 20) சுமார் எட்டு மணிநேரம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை எதுவும் அனுப்பப்படாமல் போகலாம்,” என்று அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இந்த 20 டிரக்குகள் ‘முதல் தவணைதான்’ என்று கூறிய அவர், மொத்தம் சுமார் 150 டிரக்குகள் காஸாவுக்கு செல்லக் காத்திருக்கின்றன என்றார்.

அடுத்து வரும் சூழ்நிலையைப் பொறுத்தே இந்த வாகனங்கள் கடக்க அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது தெளிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதனன்று சுமார் எட்டு மணிநேரம் டெல் அவிவ் நகரில் செலவிட்ட அவர், அமெரிக்கா திரும்பும்போது எகிப்து அதிபர் அல்-சிசியுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

புதன் கிழமையன்று சுமார் எட்டு மணிநேரம் டெல் அவிவ் நகரில் செலவிட்ட அவர், அமெரிக்கா திரும்பும்போது எகிப்து அதிபர் அல்-சிசியுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவல்களைத் தெரிவித்தார்.

‘அமெரிக்கா செய்த தவறை இஸ்ரேல் செய்யக்கூடாது’

நடந்துவரும் மோதல் குறித்துப் பேசிய அவர், சண்டையைத் தூண்டியது ஹமாஸ் என்றும், அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்றும் பேசினார்.

இஸ்ரேல் ‘மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறிய அவர், இருப்பினும் இஸ்ரேல் அந்தக் கோபத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றார்.

செவ்வாயன்று காஸா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் ஏற்படவில்லை என்ற இஸ்ரேலின் கூற்றை அவர் ஆதரித்தார்.

மேலும், பைடன் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலுடன் ஒப்பிட்டார்.

“இதன் அளவு வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் அதேபோன்ற உணர்வுகளை இஸ்ரேலில் தட்டியெழுப்பியதாக நான் நம்புகிறேன்,” என்றார்.

மேலும், இந்த ஆத்திரத்தின் பிடியில் இஸ்ரேல் சிக்கக்கூடாது என்றும் கூறினார்.

“9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா கோபமடைந்தது. நாங்கள் நீதியைத் தேடினோம். நீதியைப் பெற்றோம். ஆனால் சில தவறுகளையும் செய்தோம்,” என்றார்.

ரஃபாவில் கூடியிருந்த மக்களுக்காகத் தயார் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள்.
‘இஸ்ரேல் எல்லை வழியே உதவிகள் அனுப்பப்படாது’

எகிப்தில் இருந்து தெற்கு காஸாவில் உள்ள பொது மக்களுக்கு பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடுத்தினார்.

ஆயினும், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை எந்தவொரு உதவியையும் தனது இஸ்ரேல் எல்லை மூலம் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

ஹமாஸ் குழுவினர் கிட்டத்தட்ட 200 இஸ்ரேலியர்களை கடத்தி வைத்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றிருக்கிறார்.

இஸ்ரேல் சென்றிருக்கும் பிரிட்டன் பிரதமர்

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றிருக்கிறார். இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் ‘விவரிக்க முடியாத பயங்கரவாதச் செயல்’ என்று கூறினார்.

மேலும் இங்கிலாந்து இஸ்ரேலுடன் நிற்கிறது என்று வலியுறுத்தினார்.

“(இஸ்ரேல்) பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனான எனது சந்திப்புகளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவை பயனுள்ள சந்திப்புகளாக இருக்கும் என்று நான் மிகவும் நம்புகிறேன்,” என்று சுனக் கூறினார்.

ஆனால், பிபிசியின் அரசியல் செய்தியாசிரியர், சுனக்கின் இந்தப் பயணத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் பைடனின் பயணத்தில் நடந்தது போன்று பெரிய அறிவிப்பையோ முன்னேற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது என்கிறார்.

இந்தப் பயணம் இஸ்ரேலுக்கான ஆதரவைக் காட்டுவதற்கு முக்கியமானது, என்று சுனக்கை சுற்றியுள்ளவர்கள் கூறுவதாக அவர் கூறுகிறார்.

அதேபோல் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய அழுத்தம் கொடுப்பதும், இந்த விஷயத்தில் இஸ்ரேலின் அணுகுமுறை பொறுமையானதாக இருக்க வேண்டும் என்பதை நேருக்கு நேர் வலியுறுத்துவதும் இப்பயணத்தின் முக்கியமான நோக்கங்கள் என்கிறார் அவர்.

இஸ்ரேலில் ரிஷி சுனக் என்ன பேசினார்?

இது இஸ்ரேலின் போர் மட்டுமல்ல, இது சுதந்திர உலகம் மற்றும் நவீன அரபு நாடுகளின் போர் என்று நெதன்யாகு குறிப்பிட்டுப் பேசினார்.

அதற்கு எதிர்புறத்தில் இருப்பது, ஹமாஸ், ஹெஸ்புல்லா, இரான் அடங்கிய தீமையின் கூட்டணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், நெதன்யாகு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம், “80 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய இருண்ட காலகட்டத்தில் உலகம் உங்களுடன் நின்றது.

இது எங்கள் இருண்ட காலம். உலகின் இருண்ட காலம். ஆகையால்தான் உங்கள் ஆதரவை நான் மதிக்கிறேன். நாம் ஒன்றாக வெற்றி பெறவேண்டும்.

இதுவொரு நீண்ட போர். எங்களுக்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவு தேவை. ஏற்றத் தாழ்வுகள் மற்றும் சிரமங்கள் இருக்கும்.

இங்குள்ள மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எங்களுக்கு அந்த ஒற்றுமையும் தொடர்ச்சியான ஆதரவு தேவை,” என்று நெதன்யாகு பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய ரிஷி சுனக், “இஸ்ரேல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு நடுவே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறது. சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப தன்னைத் தற்காத்துக்கொள்ளும் அதன் உரிமையை பிரிட்டன் முழுமையாக ஆதரிக்கிறது,” என்று ரிஷி சுனக் கூறினார்.

மேலும், “பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஹமாஸுக்கு நேர்மாறாக பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க இஸ்ரேல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த வாரம் மருத்துவமனை குண்டுவெடிப்பால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். அப்பாவி பொதுமக்களின் உயிர்களை இழந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்,” என்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

பாலத்தீனிய குடிமக்களும் ஹமாஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வலியுறுத்திய ரிஷி சுனக், காஸா பகுதிக்குள் உதவிகளை வழங்குவதற்கான இஸ்ரேலின் முடிவை வரவேற்றார்.

பிரிட்டன் தனது உதவிகளை அதிகரிக்கும் மற்றும் அங்குள்ள மக்களுக்கு அதிக ஆதரவைப் பெற முயலும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, “இஸ்ரேலின் இருண்ட காலகட்டத்தில் நண்பராக உங்களுடன் நிற்பதில் பெருமைப்படுகிறேன்,” என்றும் ரிஷி சுனக் நெதன்யாகுவிடம் கூறினார்.

“நாம் ஒற்றுமையாக நிற்போம், உங்கள் மக்களுடன் நாங்கள் நிற்போம். நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

‘மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன’

பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியான UNWRA-இன் செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா, தாம் முடிந்தவரை உதவிகளை வழங்கி வருவதாகக் கூறினார். ஆனால் அவர்கள் அதிகமான சுமையில் இருப்பதாகக் கூறினார்.

“எங்களிடம் உள்ள பொருட்கள் வேகமாகத் தீர்ந்து வருகின்றன,” என்று அவர் கூறுகிறார். “எங்கள் ஊழியர்களும் மிகவும் சோர்வடைந்திருக்கின்றனர்,” என்றார்.

தங்கள் குழுவினரும் போரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “அவர்களில் பலர் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக UNWRA 14 பணியாளர்களை இழந்துள்ளோம். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்றார் டூமா.

காஸாவின் மீதான தாக்குதல்களால், தங்கள் குழு தெற்கு காஸாவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அங்கிருந்து உதவிகள் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு விரைந்து உதவும் சூழல் இல்லை என்றார்.

 

Share.
Leave A Reply