யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர்.

இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர் ஒருவரின் (Rabbi) மகனாகப் பிறந்தார்.

சிறு வயதில் பாலஸ்தீனத்தில் வளர்ந்தபோது (யூத மதக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்துகொண்டிருந்தனர்) யூத மத போதகர்களின் கருத்துக்களின் தாக்கத்திற்கு உள்ளானார்.

1825-இல் செர்பியாவில் யூத மத போதகராக வேலைபார்த்தார். 1834-இல் இவர் எழுதிய புத்தகத்தில், அதுவரை யூத மதத்தினர் கடவுளின் தூதர் தங்களை வந்து தங்களுடைய புண்ணிய தலத்திற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாக இவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்.

1840-இல் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (அப்போது அது ஆட்டொமான் பேரரசில் இருந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆட்சி நடத்திய ஆட்டோமான் பேரரசு இப்போதைய துருக்கி, சிரியா, லெபனான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, யேமென் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது).

குழந்தைகளின் இரத்தத்தை மதச் சடங்குகளுக்கு உபயோகிக்கிறார்கள் என்று யூதர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது தங்களுக்கென்று ஒரு சொந்த நாடு வேண்டும், அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற முடிவிற்கு வந்து, யூதர்கள் தங்களுடைய மீட்சிப் பணியில் தாங்களே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திப் பல சிறிய புத்தகங்களும் அறிக்கைகளும் வெளியிட்டார்.

கடவுளின் தூதர் வருவதற்கு முன்பே யூதர்கள் தங்கள் புனித நாட்டில் வாழ்ந்து அவரை வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தூதரை அனுப்பிவைப்பது இறைவனின் செயல் என்றாலும், மனிதர்களின் உழைப்பும் விடாமுயற்சியும் தேவை என்று எடுத்துரைத்தார்.

ஹீப்ரூ ஒரு புனித மொழி, அதை மதச் சடங்குகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று மதபோதகர்களிடையே நிலவி வந்த எண்ணத்தையும் மாற்றினார்.

பல நாடுகளில் பல மொழிகள் பேசி வந்த யூதர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டுமென்றால் எல்லோரும் ஹீப்ரூ மொழியைக் கற்க வேண்டும் என்றும் அது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபட வேண்டும் என்றும் கூறினார்.

யூதர்களின் மீட்சி நிறைவுற வேண்டுமென்றால் எல்லா நாட்டிலுள்ள யூதர்களும் தங்களுக்குள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாங்கள் வாழ்ந்து வரும் நாடுகளை விட்டு வந்து, புனித நாட்டில் குடியேற வேண்டும்; அங்கு இந்தத் தலைவர்கள் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்று போதித்தார்.

பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை நிறுவுவதற்கான இந்த இயக்கம்தான் ஆங்கிலத்தில் ஸயோனிஸம் (Zionism) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தமிழில் யூத இனவாதம் எனலாம். இந்த இனவாதத்திற்கு ஒரு தனி நாடு வேண்டும் என்பதே கோரிக்கை.

இவரையடுத்து போலந்து நாட்டில் மத போதகராக இருந்த ஸ்வி ஹிர்ஷ் கலிச்செர் (Zwi Hirsch Kalischer) பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

யூதர்களின் மீட்சி திடீரென்று நிகழக் கூடிய தெய்வீக அற்புதம் அல்லவென்றும், கொடைப் பண்பு உடையவர்களின் ஆதரவாலும் உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களும் தங்கள் புனித நாட்டில் சேருவதை ஆதரிப்பதாலும் மட்டுமே நிகழக் கூடியது என்றும் கூறினார்.

யூதர்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறி அங்கு விளைநிலங்களையும் முந்திரித் தோட்டங்களையும் விலைக்கு வாங்கி அவற்றில் பயிரிடுவதின் மூலம் அங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும், ஏழ்மையில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

யூதர்கள் ஒரு தனி நாட்டில் கூடி வாழ வேண்டும் என்பதும், அந்தத் தனி நாடு யூதர்கள் தங்கள் புனித இடமாகக் கருதும் பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்பதும் இவருடைய அடிப்படைக் கொள்கை.

இவரை அடுத்து யூதர்களுக்குத் தனி நாடு அமைப்பதில் தீவிரமாக இருந்தவர் லேட்வியாவில் 1865-இல் பிறந்த ஆபிரகாம் ஐஸக் குக் (Abraham Isaac Kook) என்பவர்.

பாலஸ்தீனத்தை விட்டுச் சென்ற யூதர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் யூத மதத்தைக் கடைப்பிடித்து வந்தாலும், தங்கள் புனித இடமான பாலஸ்தீனத்தில் வாழ்ந்தால்தான் யூத மதத்திற்கே உரிய சிறப்புத் தன்மையை இழக்காமல் இருக்க முடியும் என்றும், அதற்குப் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

இப்படி உருவாக்கப்படும் நாட்டில்தான் யூதர்கள் தங்களுடைய பழைய கலாச்சார, மதக் கோட்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியும் என்றும் இவர் அறிவுறுத்தினார்.

இவர்களுக்குப் பின்னால் வந்த மதச்சார்பற்ற யூதர்களும், யூதர்கள் ஒரு இனம் என்ற அடிப்படையில், யூதர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.

எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தில் கூடி வாழ முடியவில்லையென்றாலும், யூதர்களுக்கென்று இருக்கும் நாட்டில் அங்கு போக விரும்புபவர்கள் போவதற்கு வசதியாக ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தனர்.

(இப்போதும் அமெரிக்காவில் குடியேறிருக்கும் யூதர்கள் தங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அங்கு போய்வர வேண்டும் என்று நினைக்கின்றனர். (நான் முன்னால் குறிப்பிட்ட எங்கள் அமெரிக்க யூத நண்பர் ‘வருடத்திற்கு ஒரு முறையாவது நான் அங்கு போக விரும்புகிறேன்.

அப்படிப் போகவில்லையென்றால் ஏதோ ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது’ என்பார். இன்னொரு நண்பர் யூத மதத்தின் வாழ்க்கைச் சட்டங்களைக் (Jewish law) கற்றுக்கொள்ள ஜெருசலேமிற்குப் போய்வந்தார்.)

மதச்சார்பற்ற யூத தேசிய இனத்தை நிறுவுவதற்கான இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் தியோடர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பவர் முதன்மையானவர்.

1860-இல் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்னும் ஊரில் பெரிய செல்வந்தரின் மகனாகப் பிறந்த இவர், புடாபெஸ்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு வியன்னாவிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின் ஆஸ்ட்ரியாவின் பத்திரிக்கை ஒன்றிற்கு பாரீஸ் செய்தியாளராக வேலைபார்த்தபோது ஆல்ப்ரெட் ட்ரைஃபஸ் (Alfred Dreyfus) என்னும் பிரெஞ்சு நாட்டு யூதருக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதி ஹெர்ஸலின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது.

ட்ரைஃபஸ் பிரெஞ்சு ராணுவத்தில் வேலைபார்த்தபோது ஜெர்மனிக்காக உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ மரியாதை எல்லாம் பறிக்கப்பட்டு, ஒரு தீவில் சிறைவைக்கப்பட்டார்.

ஏற்கனவே யூத எதிர்ப்பை தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருந்தாலும், அது ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை அனுபவம் என்று நினைத்திருந்த ஹெர்ஸல், இப்போது யூதர் என்பதற்காக ட்ரைஃபஸுக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.

அன்றிலிருந்து யூத எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு மட்டுமல்ல, இன எதிர்ப்பும் என்றும் நினைத்தார். அதிலும் நவீன, கலாச்சார மேம்பாடுடைய, நாகரீகம் மிகுந்த பிரான்ஸில் அந்தச் சம்பவம் நடந்தது அவரை மிகவும் பாதித்தது.

ஹெர்ஸலுக்கு முன்பே பல யூதர்கள் தங்களுடைய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றிருந்த போதிலும், இவர் அதற்கான காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

பெல்ஜியத்தில் உள்ள ஒரு பெரிய பணக்கார யூதரை தனக்கு உதவ அணுகினார். அவர் நிறையப் பணம் செலவழித்து சில யூதர்களை அர்ஜெண்டைனாவில் குடியேற்றியிருந்தார்.

‘யூதர்கள் விவசாயத்தில் சிறந்தவர்கள்; அவர்கள் அங்கு அதில் சிறந்து விளங்கினால் ரஷ்யாவிற்குக் கூட அவர்கள் குடிபெயரலாம்; அவர்களை எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள; இப்போதே அவர்களை முன்னுக்குத் தள்ளுவது அவ்வளவு சரியல்ல’ என்று அவர் கூறிவிட்டார்.

இன்னும் சில பணக்கார யூதர்களும் இதே மாதிரி ஹெர்ஸலுக்கு உதவ ஆர்வம் காட்டாததால், பல நாடுகளில் வசிக்கும் யூதர்களையெல்லாம் ஒன்றுகூட்ட ஒரு மாநாடு நடத்துவதென்று முடிவுசெய்து, 1897-இல் ஸ்விட்சர்லாந்திலுள்ள பேஸல் (Basle) என்னும் ஊரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்.

இதற்கு இருபத்து நான்கு நாடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இருநூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் வந்திருந்தனர்.

யூத நாடு அமைப்பதன் மூலம்தான் யூதர் இனத்தையும் அவர்களின் மதத்தையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்று அந்த மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு நடந்த மாநாடுகளில் நிறையப் பேர் அவருடைய இயக்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்தனர்.

THEODOR HERZL AT THE FIRST ZIONIST CONGRESS IN BASEL ON 25.8.1897. תאודור הרצל בקונגרס הציוני הראשון – 1897.8.25

(தொடரும்)

நாகேஸ்வரி அண்ணாமலை -முனைவர்

இஸ்ரேல் பயணம்- (பகுதி-1)

இஸ்ரேல் பயணம்- (பகுதி-2)

 

Share.
Leave A Reply