கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர்.
உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.
ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர்.
இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார்.
உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார்
காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கொமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார்.
அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் .பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர்.
அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது:
அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன்.
அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன்.
அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன் என்றார்.
இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார்.
தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார்.
சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.