காஸாவில் தரைவழி தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்து சில நாட்கள் ஆன பின்பும் இன்னும் காஸாவுக்குள் இஸ்ரேல் நுழையவில்லை.
இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது. அதற்காக, கடந்த சில நாட்களாகவே காஸாவுக்குள் தனது படைகள் நுழையப் போவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போதிருந்து இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் மூன்று லட்சம் வீரர்களை ரிசர்வ் படைக்கு அழைத்துள்ளது.
ஆயிரக்கணக்கான வீரர்கள் மெர்காவா டாங்கிகள், பீரங்கிகள், நவீன ஆயுதங்களுடன் இஸ்ரேல்-காஸா எல்லையில் தயார் நிலையில் உள்ளனர்.
இஸ்ரேல் கப்பல் படை மற்றும் விமானப்படை, ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் மறைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து தாக்கி வருகின்றன.
இதில் பல பாலத்தீன மக்கள் உயிரிழந்தும் காயமுற்றும் இருக்கின்றனர். சில ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பு காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் நிலைமையை இன்னும் மோசமாக்கி பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், இஸ்ரேல் ஏன் இன்னும் காஸாவுக்குள் நுழையாமல் இருக்கிறது?
இதற்கு சில காரணங்கள் உள்ளன.
காரணம் 1 – பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அவசர பயணத்தின் மூலம், அமெரிக்கா இஸ்ரேல் விவகாரம் குறித்து எவ்வளவு கவலை கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அமெரிக்காவுக்கு இரண்டு கவலைகள் உள்ளன: ஒன்று அதிகரித்து வரும் மனிதநேய நெருக்கடி, மற்றொன்று மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இந்த மோதல் பரவும் அபாயம்.
கடந்த 2005இல் வெளியேறிய காஸாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய இஸ்ரேலின் எந்தவொரு முயற்சிக்கும் தனது எதிர்ப்பை அமெரிக்க அதிபர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அப்படி ஆக்கிரமிப்பது “மிகப் பெரிய பிழை” என அவர் குறிப்பிட்டார்.
அதிகாரபூர்வமாக, அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இருக்கும் நெருங்கிய நண்பருக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், காஸா குறித்த இஸ்ரேலின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்திருந்தார்.
ஆனால், வெளியில் சொல்லப்படாத மற்றொரு காரணம், அவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடுமையான போக்கை சற்று கட்டுப்பட்டுத்துமாறு கூறியிருக்கலாம். இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், எப்படி, எப்போது வெளியேறப் போகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
டெல் அவிவில் அமெரிக்கா அமர்ந்திருக்க, காஸா மீது இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ படையெடுப்பு நடத்தினால், அது இஸ்ரேலுக்கும் நல்லதல்ல, அமெரிக்காவுக்கும் நல்லதல்ல.
காஸாவில் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர், இஸ்ரேலின் கூற்றை ஒப்புக் கொண்டு, இந்தத் தாக்குதல் தவறாக ஏவப்பட்ட பாலத்தீன ராக்கெட்டால் நிகழ்ந்த்து என்றார்.
ஆனால் பாலத்தீன அதிகாரிகள் இது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்றனர். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதையும், குண்டு வெடிப்புக்கு என்ன காரணம் என்பதையும் கண்டறியும் முயற்சியில் பிபிசி ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல்-காஸா மோதல் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவலாம் என அமெரிக்கா கவலைப்படுகிறது.
காரணம் 2- இரான்
கடந்த சில நாட்களாகவே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கிடைக்காமல் இருக்காது என கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகிறது இரான். இதற்கு நடைமுறையில் என்ன அர்த்தம்?
மத்திய கிழக்கில் ஏராளமான ஷியா ஆயுதக் குழுக்களுக்கு இரான் நிதியளித்து, ஆயுதங்கள் வழங்கி, பயிற்சியும் வழங்கி வருகிறது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த குழு, இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அருகில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா.
கடந்த 2006ஆம் ஆண்டு இரு நாடுகளும் முடிவுறாத மோசமான போரை நிகழ்த்தினர். இதில் மறைத்து வைக்கப்பட்ட கன்னிவெடிகள் மற்றும் எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக, இஸ்ரேலின் நவீன போர் டாங்கிகள் வீழ்த்தப்பட்டன.
அதன் பிறகு ஹெஸ்புல்லா இரானின் உதவியுடன் மேலும் அதிக ஆயுதங்களுடன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது ஹெஸ்புல்லாவிடம் நீண்ட தூரத்தில் துல்லியமாக ஏவக்கூடிய சுமார் 1,50,000 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளன.
இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், ஹிஸ்புல்லா இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க ஆரம்பிக்கும். இஸ்ரேல் இரு முனைகளிலும் போரிட நேரிடும்.
ஆனால், மத்திய தரைக்கடலில் இஸ்ரேலுக்கு உடனடியாக உதவிட இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு போரை ஹெஸ்புல்லா விரும்புமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
எனினும் கடந்த முறை ஹெஸ்புல்லாவுடன் போரிட்டபோது இஸ்ரேலிய போர்க்கப்பலை ஹெஸ்புல்லா தனது ஏவுகணையால் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க வாய்ப்புள்ளது.
உலக நாடுகளின் மனித நேய நெருக்கடி குறித்த பார்வையுடன் ஒப்பிடுகையில், ஹமாஸை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேலிடம் அந்தப் பார்வை குறைவாகவே உள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான ரத்தவெறி கொண்ட தாக்குதலுக்குp பிறகு உலக நாடுகளின் கரிசனம் இஸ்ரேல் பக்கம் இருந்தது.
ஆனால், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக, பாலத்தீன மக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்த வான்வழிட்ப தாக்குதலை நிறுத்தச் சொல்லி உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரி வருகின்றன.
காஸாவுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கத்தான் போகிறது.
எதிர்பாராத தாக்குதல், ஸ்னைப்பர்கள் மூலம் இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்படுவார்கள். சண்டையின் பெரும்பகுதி பல மைல்கள் தூரம் கொண்ட சுரங்கங்களில் நடைபெறலாம்.
காரணம் 4: உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலத்தீன மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஹமாஸின் பயங்கர தாக்குதலை கணிக்கத் தவறியதற்காக ஷின்பெத், உள்நாட்டு உளவுத்துறை பழியை ஏற்றுக்கொண்டது. ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, ஷின்பெத்துக்கு காஸாவின் உள்ளே உளவாளிகள் உள்ளனர்.
எனினும் தெற்கு இஸ்ரேலில் அன்று நடந்த தாக்குதல், 1973 யோம் கிப்பூர் போருக்குப் பிறகான மிகப்பெரிய உளவுத்துறை தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த பத்து நாட்களாக பதற்றத்துடன் அவசர அவசரமாக இஸ்ரேல் உளவுத்துறை, பாதுகாப்பு படையினருக்குத் தேவையான ஹமாஸ் குழு தலைவர்களின் பெயர்களையும், இடங்களையும், பணயக் கைதிகளின் இடங்களையும் எடுத்துக் கொடுத்திருக்கும்.
தரை வழித் தாக்குதலை துல்லியமாக நடத்த மேலும் சில தகவல்களைப் பெற இஸ்ரேல் உளவுத்துறைக்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம்.
அப்போதுதான் குறிப்பாக இலக்கைத் தாக்க முடியும். இல்லையென்றால் வடக்கு காஸாவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் இருந்து தப்பித்து இயங்கி வரும் ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் இந்நேரம் மறைந்திருந்து தாக்குவதற்கும், இஸ்ரேலிய படைகளுக்கான வலைகளை விரிக்கவும் திட்டமிட்டிருக்கும்.
நிலத்துக்கு அடியில் இருக்கும் சுரங்கங்களில் இன்னும் ஆபத்தானதாக இருக்கும். அந்த இடங்களைக் கண்டறிந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை எச்சரிப்பதில் இஸ்ரேல் உளவுத்துறையும் உன்னிப்பாக இருக்கும்.