“ஒட்டாவா,இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தவிட்டார்.

இதற்கு பதிலடியாக கனடாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது.

மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி கனடாவுக்கு மத்திய அரசு எச்சரித்தது.

கனடாவில் 21 இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில் இந்தியாவில் 62 கனடா தூதரக அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.

இதனால், தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 21 ஆக குறைக்கும்படியும், எஞ்சிய அதிகாரிகளை உடனடியாக திரும்பப்பெறும்படியும் கனடாவுக்கு மத்திய அரசு கெடு விதித்தது.

அக்டோபர் 20ம் தேதிக்குள் (நேற்று) தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறவில்லை என்றால் அவர்களின் தூதரக அந்தஸ்த்து பறிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.

இதனை தொடர்ந்து இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா நேற்று திரும்பப்பெற்றது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கை 21 ஆக குறைந்துள்ளது. தூதர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் விசா உள்ளிட்ட செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படலாம் என கனடா தெரிவித்துள்ளது.

பெங்களூரு, மும்பை, சண்டிகர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வந்த தூதரகங்கள் தங்கள் சேவையை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கவனமுடன் இருக்கும்படியும் கனடா எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு செல்லும் கனடா மக்களும் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் கனடா குடிமக்கள் அவசிய தேவையின்றி இந்தியாவின் அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தல், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு கனடா குடிமக்கள் செல்ல வேண்டாம்.

அதேபோல், கண்ணிவெடி போன்ற வெடிபொருட்கள் ஆபத்து இருப்பதால் பாகிஸ்தானை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்தியா கடினமாக்குவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டிரூடோ கூறுகையில், கனடா மற்றும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு நம்பமுடியாத அளவுக்கு கடினமாக்குகிறது.

தூதரக அடிப்படை கொள்கை விதிகளை மீறி இந்தியா இவ்வாறு செய்கிறது. இது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடா குடிமக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை பாதிக்கும் என்பதால் நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன்.

தூதர்களை வெளியேற்றுவதால் கனடாவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்’ என்றார். “,

Share.
Leave A Reply