—பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால் பலஸ்தீனம் போன்று ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரம் ஐ.நாவில் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேல் – கமாஸ் போர் ஈரான் அரசின் அணுசக்தியை அழிப்பதற்காக ஈரான் மீதான போராக மாறக் கூடிய ஏது நிலை தென்படுகின்றது—
அ.நிக்ஸன்-
பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் கமாஸ் இயக்கத்துக்கு ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கிறது.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் அன்று வாக்களித்திருந்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகள் உட்பட இந்திய, இலங்கை போன்ற பல நாடுகளும் ஐ.நா சபையில் இதனை ஏற்றுமுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. இஸரேலுக்கு ஆதரவாக அமெரிக்க செயற்பட்டு வரும் பின்னணியிலேயே மீண்டும் கமாஸ் இஸரேல் மீது போரைத் தொடுத்துள்ளது.
அமெரிக்கா மீது அல்கைதா இயக்கம் 2011 செப்ரெம்பரில் நடத்திய தாக்குதலுடன் கமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை மேற்கு நாடுகள் ஒப்பீடு செய்கின்றன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பென்ஜமீன் நெதன்யாகு உரிய முறையில் செயற்படவில்லை என்றும் தான் மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் இஸ்ரேல் நாட்டை முழுமையாகப் பாதுகாப்பேன் எனவும் டொனால்ட் ட்ரமப் கூறியிருக்கிறார். பென்ஜமீன் நெதன்யாகுவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
ஆகவே பலஸ்தீனம் என்ற தேசத்தை இல்லாதொழிப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்பது பட்டவர்த்தனமாகிறது.
ஐ.நா.வில் அங்கீகாரம் இருந்தும் அதனைக் கடந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இவ்வாறு செயற்படுகின்ற என்றால், சர்வதேச அங்கீகாரம் இல்லாத நிலையில் ஒரு நிழல் அரசாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க 2009 இல் அமெரிக்கா எவ்வாறான வியூகங்களை வகுத்திருக்கும் என்பது இங்கே பகிரங்கமாகிறது.
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குறிப்பாக 1983 இல் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற உத்திகள் இஸ்ரேல் அரசினால் வகுக்கப்பட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி ஈரான் அணுசக்தி திறன்களில் முன்னேறி வரும் நிலையில் இஸ்ரேல் மீது கமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஆனால் இஸ்ரேல் நடத்தும் பதில் தாக்குதல்களை தாக்குப் பிடிக்கக்கூடிய நிலையில் கமாஸ் இல்லை. ஆனாலும் ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் நேரடி ஆதரவு கமாஸுக்கு பலத்தைக் கொடுக்கலாம்.
சர்வதேச இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரான் அணுசக்தித் திட்டத்தில் முன்னேறி வருவதாக ஜிஜோபொலிற்றிகல்மொனிற்றர் (geopoliticalmonitor) என்ற ஆய்வுத்தளம் கூறுகின்றது.
ஈரானின் அணுசக்தி முன்னேற்றத்தைத் தடுக்கச் சர்வதேசம் கையாண்ட வியூகங்கள் வெற்றியளித்தாக இல்லை.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் பலஸ்தீன மோதல் ஆரம்பித்திருக்கிறது என்ற தொனியில் அந்த ஆய்வுத் தளம் சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை இஸ்ரேல் அரசு நீதித்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் மன உறுதியைப் பாதித்துள்ளது எனவும் இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள மனக் கசப்புகள் பலஸ்தீனியர்களுடனான போர்க் களத்தில் பாதிப்பை உருவாக்கலாமென மொடேன்டிப்ளேமேசி என்ற மற்றொரு ஆங்கில ஆய்வுத் தளம் கூறுகின்றது.
இலங்கைத்தீவில் தற்போது ஜனாதிபதி ரணில் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் போன்றே இஸ்ரேலியப் பிரதமரும் உள்ளக அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையிலேதான் போரும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
டெனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் கைச்சாத்திடப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கைக்குப் பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் மத்திய கிழக்கில் மோதல்கள் மற்றும் சிக்கல்களை இயல்பாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி வந்தது.
இது இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்கா தலைமையில் மும்முனை பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில் சவூதி அரேபியா இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராக இருந்தது. ஆனாலும் பலஸ்த்தீனம் மீதான இஸ்ரேலின் பிற்போக்குத்தனமான அத்துமீறல்கள் மத்திய கிழக்கு நாடுகளை கோபமடையச் செய்திருக்கின்றன.
ஆகவே பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல், மத்திய கிழக்கை நிலைநிறுத்துவது கடினம் என்பதை இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் அமெரிக்காவுகுக்கு உணர்த்தியிருக்கும்.
ஆனாலும் கமாஸின் தாக்குதலையடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. இதனால் சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திக் கமாஸ் தாக்குதலை நியாயப்படுத்தியுமுள்ளன.
இதனால் இந்திய – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தடத் தாழ்வாரத் திட்டம் (India-Middle East-Europe Economic Corridor – IMEEC) கேள்விக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் பிறிக்ஸ் மாநாட்டுத் தீர்மானங்கள் மற்றும் உலகில் உள்ள பிரதான ஆறு எண்ணெய்வள நாடுகள் பிறிக்ஸில் அங்கத்துவம் பெற்றமை போன்ற காரண – காரியங்கள் அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சவாலாக இருந்த நிலையில்தான் IMEEC எனப்படும் திட்டம் பற்றிய அறிவிப்பை புதுடில்லி, ஜீ 20 மாநாட்டில் வெளியிட்டிருந்தது.
மத்திய கிழக்கில் சீனாவின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்வதற்காக மோடியின் வாயினால் ஜோ பைடன் இத் திட்டத்தை அறிவித்திருந்தார் என்று கருதலாம்.
ஆனாலும் ரசிய – சீனக் கூட்டுக்குள் குறிப்பாக பிறிக்ஸ் கட்டமைப்புக்குள் இந்தியா இருந்துகொண்டு மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ற முறையில் புதுடில்லியினால் முன்வைக்கப்படும் திட்டங்கள், அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் திருப்தியாக இருப்பதாகக் கூற முடியாது.
இஸ்ரேல் பலஸ்தீன மோதலில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு என்பது பட்டவர்த்தனம். ரசிய உக்ரெயன் போரிலும் இந்திய நிலைப்பாடு ரசிய ஆதரவை நோக்கியே உள்ளது.
ஆகவே அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரவுள்ள நிலையிலும் ஈரானின் அணுசக்தித் திறன் முன்னேறி வரும் பின்னணியிலும் மேலும் புவிசார் அரசியல் மோதல்களை இது உருவாக்கலாம்.
குறிப்பாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் திருப்திப்படுத்தும் இந்தியத் திட்டங்களும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம்.
ஆனால் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிப்பதற்கு 2009 இல் இந்தியாவை மையப்படுத்திய புவிசார் அரசியல் – பொருளாதார சூழல் வசதியாக இருந்தமை போன்று, கமாஸை இல்லாதொழிக்கக்கூடிய புவிசார் அரசியல் பொருளாதார சூழல் இஸ்ரேல் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா போன்ற ஒரு நாடு பலஸ்தீனியர்களுக்கு அருகிலும் இல்லை.
உதாரணமாக இந்தியா என்றொரு சக்திக்குத் தேவையான ஒரு முனையில் வடக்குக் கிழக்குப் பிரதேசம் அமைந்துள்ளதாலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியவில்லை என்ற கருத்து இன்றும் நிலவுகிறது. அக் கருத்தில் உண்மை இல்லாமலுமில்லை.
அன்று அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியா குறிப்பாக இந்திராகாந்தி, 1983 இல் ஆயுதப் போராடடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அமெரிக்காவுடனான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைச் செய்தமைக்கான காரண காரியங்களும் புரியாமலில்லை.
ஆகவே அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் குறிப்பாக ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் கமாஸ் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும். ஈரான் ஆயுதங்களை வழங்கும் சாத்தியங்களும் உண்டு.
ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு அழிவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இன அழிப்பு போரின் தொடர்ச்சியாக இது மாறாலாம். ஏற்கனவே இஸ்ரேல் இன அழப்புப் போரைத்தான் நடத்தியிருந்தது.
அந்த இன அழிப்புப் போர் உச்சம்தொட்டுப் பலஸ்தீனியர்களுக்கு நியாயம் கிடைக்கவிருந்த போதுதான் 1992 இல் நோர்வே சமாதானப் பணியில் ஈடுபட்டு யாசீர் அரபாத்தைக் கட்டிப்போட்டது. 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் 1987 இல் ஆரம்பிக்கப்பட்ட கமாஸ் இயக்கம் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாது தொடர்ந்து போராட்டம் நடத்தியிருந்து.
பலஸ்தீனியர்களின் நிலைப்பாடு நியாயமானது என்று தெரிந்தும் இன்றுவரையும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் இஸ்ரேல் அரசின் பலஸ்தீன இனஅழிப்பைக் கண்டுகொள்ளாது, வெறுமனே கமாஸ் இயக்கத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து வருகின்றன.
பலஸ்த்தீனம் மற்றும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நலன்சார்ந்தே செயற்படுகின்றன.
இதற்குள் இந்தியாவும் புகுந்துகொண்டு தமக்குரிய புவிசார் அரசியல் பொருளாதார நோக்கில் லாபங்களைப் பெறுகிறது.
2006 இல் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்காட்டர் தலைமையில் பலஸ்தீனத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்,
கமாஸ் இயக்கத்துக்கு பலஸ்தீனம் சார்பில் ஐ.நா சபையில் பார்வையாளர் அந்தஸ்து பதினொரு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.
ஆனால் கமாஸ் இயக்கத்தின் இராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா பயங்கரவாத பட்டடியலிலேயே தொடர்ந்தும் வைத்திருக்கிறது. இதனால் இந்தியாவும் கமாஸின் இராணுவக் கட்டமைப்பைப் பயங்கரவாதமாகவே பார்க்கிறது.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரமப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ஜெரிசலேம் நகரில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை அமைத்திருந்தார். அன்று ட்ரம்ப் மேற்கொண்ட அணுகுமுறையைத் தான் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் இஸ்ரேல் அரசுடன் இன்றும் பேணி வருகின்றது.
ஆகவே அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையைத்தான் வல்லரசு நாடுகள் கையாளும் என்பதை இது உணர்த்துகிறது.
ஆனால் விடுதலை கோரிப் போராடும் கமாஸ் போன்ற இயக்கங்கள் மரபுவழி இராணுவக் கட்டமைப்புடன் சுயமாக வளர்ந்து வருவதை வல்லரசு நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. இதற்கு 2009 முள்ளிவாய்க்கால் போர், சா்வதேச போர் விதிகளுக்கு மாறாக நடத்தப்பட்டு முடிவுறுத்தப்பட்டமை உதாரணமாகும்.
அந்த உதாரணங்கள் மூடிமறைக்கப்பட்டு ‘விடுதலைப் புலிகள் அனுசரித்துப் போகவில்லை’ ‘சந்தர்ப்பங்களைத் தவறிவிட்டனர்’ ‘தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை’ என்று பல கதைகளைத் தெரிவு செய்து ஈழப்போரை மலினப்படுத்தும் விமர்சனங்கள் இன்று வரை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
வடக்குக் கிழக்கில் 2009 இற்குப் பின்னர் சாதி, மத மற்றும் பிரதேச வேறுபாடுகள் தூண்டிவிடப்பட்டுப் போராட்டத்தையும் போரடிய தமிழ்ச் சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் விமர்சனங்கள் வேண்டுமென்றே விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
அதற்குச் சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லப்படுவோரும் காரணமாகவுள்ளனர்.
சர்வதேச அங்கீகாரமற்ற விடுதலை இயக்கங்களின் இராணுவச் செயற்பாடுகளில் தீவிரத்தன்மை இருக்கும். அதன் அரசியல் கட்டமைப்புகள் இறுக்கமாகவும் இருக்கும். ஜனநாயகம் வேறொரு வகிபாகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அரசு என்ற அந்தஸ்த்தைப் பெற்ற அரசுகளும் அதன் இராணுவக் கட்டமைப்புகளும் தேவையானபோது ஜனநாயக விழுமியங்களை மீறிச் செயற்படும்.
இருந்தாலும் விடுதலை இயக்கங்களில் மாத்திரமே அரசுகள் குறிப்பாக வல்லரசுகள் பிழை பிடிக்கும். விடுதலை இயக்கங்களைப் பிரிக்க அல்லது உள்ளக முரண்பாடுகளை ஏற்படுத்த இந்த வல்லரசுகள் தமக்குச் சாதகமான முறையில் அரச பயங்கரவாதங்களைக் கட்டவிழ்த்தும்விடும்.
2009 இல் குறிப்பாக 2002 சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் விடுதலைப் புலிகள் மீது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில தவறுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுப் புலிகள் மீது பழியும் போடப்பட்டுப் பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் 2006 இல் தடையும் செய்தது.
இப்போது பலஸ்தீனியர்களின் நியாயமான நிலைப்பாட்டைப் பயங்கரவாதமாக்கி கமாஸின் செயற்பாடுகளையும் முற்று முழுதாக முடக்க இஸ்ரேல் எடுக்கும் முயற்சிக்கு மேற்குலகம் ஆதரவு வழங்குகிறது.
இந்த ஆதரவின் ஊடாகவே ஈரான் அணுசக்தி முன்னேற்றத்தையும் தடுத்து ஈரான் மீதும் போர் தொடுத்து ஏற்கனவே ஈராக் நாட்டை அழித்தது போன்று ஈரானையும் அழிக்கவுள்ள அமெரிக்கா வியூகம் வகுக்கிறது போல் தெரிகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த வியூகம் அரங்கேறலாம்.