20 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சி உலகக்கோப்பைத் தொடர் ஒன்றில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியிருக்கிறது. மேலும், இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆடிய 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது.

தரம்சாலா இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்களால் தோற்கடித்த வரவேற்பு நாடான இந்தியா, 13ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் தனது 5ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாத்திரம் தோல்வி அடையாத அணியாகத் திகழ்வதுடன் அணிகள் நிலையில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் வெற்றியில் மொஹமத் ஷமியின் 5 விக்கெட் குவியலும் விராத் கோஹ்லி குவித்த அரைச் சதமும் பிரதான பங்காற்றின.

” ஐ.சி.சி தொடர்களில் சமீப காலமாக இந்திய அணியால் வீழ்த்த முடியாத அசகாய அணியாக நியூசிலாந்து இருந்தது. கடைசியாக 2003 உலகக்கோப்பையில்தான் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, எல்லா உலகக்கோப்பையிலும் இந்திய அணி நியூசிலாந்திடம் அடிதான் வாங்கியிருந்தது. அதுவும், கடந்த உலகக்கோப்பையின் அரையிறுதில் தோனியின் அந்த ரன் அவுட்டும் இந்தியாவின் தோல்வியும் என்றைக்குமே ரசிகர்களால் மறக்கவே முடியாத துயரம்.”

அதேவேளை நியூஸிலாந்து வீரர் டெரல் மிச்செலின் அபார சதம் இறுதியில் வீண் போனது.

பங்களாதேஷுடனான போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் வெற்றிக்கு தேவைப்பட்ட கடைசி 5 ஓட்டங்களை சிக்ஸ் மூலம் பெற்று இந்தியாவின் வெற்றியையும் தனது சதத்தையும் உறுதி செய்ய கோஹ்லி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

எனினும் ரவிந்த்ர ஜடேஜா வெற்றிக்கு தேவையான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (46), ஷுப்மான் கில் (26) ஆகிய இருவரும் 67 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ரோஹித் ஷர்மா 4 சிக்ஸ்களையும் 4 பவுண்டறிகளையும் விளாசினார்.

ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் விராத் கோஹ்லியும் ஷ்ரேயாஸ் ஐயரும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷ்ரோயாஸ் ஐயர் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

விராத் கோஹ்லியுடன் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த கே. எல். ராகுல் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். (191 – 5 விக்.)

எனினும் விராத் கோஹ்லியும் ரவிந்த்ர ஜடேஜாவும் 5 விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

விராத் கோஹ்லி 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் சதத்தைத் தவறவிட்டார்.

ரவிந்த்ர ஜடேஜா 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.

டெவன் கொன்வே 4ஆவது ஓவரில் ஓட்டம் பெறாமலும், வில் யங் 9ஆவது ஓவரில் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (19 – 2 விக்.)

மிகவும் இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவிந்த்ராவும் டெரில் மிச்செலும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 152 பந்துகளில் 159 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலம் அடையச் செய்தனர்.

ரச்சின் ரவிந்த்ரா 75 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மத்திய வரிசை ஆட்டம் கண்டது.

டெரில் மிச்செல் ஒரு பக்கத்தில் சரமாரியாக ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருக்க, மறுபக்கத்தில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தது.

டெரில் மிச்செல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 127 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 130 ஓட்டங்களைக் குவித்து கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

44ஆவது ஓவர் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த நியூஸிலாந்து கடைசி 6 ஓவர்களில் 6 விக்கெட்களை 30 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த மொஹமத் ஷமி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் உலகக் கிண்ணப் போட்டிகளில் 5 விக்கெட்களைக் குவித்த முதலாவது இந்தியரானார்.

10 ஓவர்கள் வீசிய மொஹமத் ஷமி 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 73 ஓட்டங்ளுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி..!!

Share.
Leave A Reply