உலகில் இந்த நொடியில் மிகப் பெரிய பேரழிவு நடந்துகொண்டிருக்கும் இடம் எதுவென்றால், நிச்சயமாக அது காசாதான். காசா என்ற ஓரிடம் முன்னொரு காலத்தில் இருந்தது என்றே எதிர்காலத்தில் நாம் சொல்ல நேரிடுமோ என்ற அச்சத்தை இன்றைய நிலை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், இஸ்ரேல் தாக்குதலில் காசா நிலைகுலைந்துபோயுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காசா முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமே உள்ளது.
இந்த போரில் இஸ்ரேல் மிகப் பெரிய இராணுவ பலத்தோடு உள்ளது என்பது மறுக்க முடியாது. உலகின் வலிமையான இராணுவ கட்டமைப்பை கொண்ட நாடுகளில் இஸ்ரேல் முக்கியமான நாடாகும்.
இன்று உலகமே இஸ்ரேல் – காசா போரை உற்று நோக்கி பார்த்துக்கொண்டிருப்பதோடு, அதன் விளைவுகளை கண்டு பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. இந்த போரின் முக்கிய பங்குதாரரான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு உள்ளார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றாக அழித்துவிடுவோம் என்று சூளுரைத்து களத்தில் இறங்கியிருக்கும் அவரின் பிறந்தநாள் இன்றாகும்.
இஸ்ரேல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் செய்யாத சாதனையை பெஞ்சமின் செய்துகொண்டிருக்கிறார்.
அதிக நாட்கள் பிரதமராக ஆட்சியில் இருந்தவர் எனும் சாதனையை பெஞ்சமின் பெறுகிறார். 6 முறை இஸ்ரேலிய பிரதமராக பதவியில் இருந்தவர் எனும் சாதனையை பெஞ்சமின் உருவாக்கியிருக்கிறார்.
இஸ்ரேலில் பிறந்த முதல் இஸ்ரேலிய பிரதமராகவும் இவர் விளங்குகிறார்.
தற்போது இஸ்ரேலின் 9ஆவது பிரதமராக பதவியில் இருக்கிறார். இன்று (ஒக். 21) அவரது 74ஆவது பிறந்தநாள் ஆகும்.
பெஞ்சமினை ஆட்சியில் இருந்து வீழ்த்தும் வியூகங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அது தொடர்ந்து பயனளிக்கவில்லை
இஸ்ரேலுக்கு எதிரான சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒரு நபராக நெதன்யாகு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட காரணத்தால் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதோடு அதிகூடிய நாட்கள் ஆட்சி அதிகாரத்தில் மக்கள் அவரை ஏற்றி அழகு பார்த்தனர்.
இவர் ஆரம்பத்தில் ஓர் இராணுவ வீரராக தனது பணியை தொடர்ந்தார். இவரின் தந்தை புகழ் பெற்ற வரலாற்று நிபுணர் மற்றும் இஸ்ரேலிய தேசியவாதத்தின் மீது ஆர்வம் கொண்டவர். அவருக்கு அமெரிக்காவில் கல்வி சார்ந்த பணியொன்று கிட்டியதால் இவர்களின் குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது.
பெஞ்சமின் நெதன்யாகு தனது 18 வயதில் இஸ்ரேலுக்கு திரும்பி, ஐந்து வருடங்களாக இராணுவத்தில் பணிபுரிந்தார். இராணுவத்தில் உயரடுக்கு கொமாண்டோ பிரிவான சாயேரெட் மட்கல்லில் பணியாற்றினார்.
1973ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரிலும் பங்கேற்றார். இராணுவத்தில் பணியாற்றிய பிறகு நெதன்யாகு அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார். அங்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார்.
1976ஆம் ஆண்டு உகண்டாவில் கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சியில் நெதன்யாகுவின் சகோதரரான ஜோனத்தன் கொல்லப்பட்டார்.
அவரின் இறப்பு நெதன்யாகுவின் குடும்பத்தில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தியது. நெதன்யாகு தனது சகோதரரின் நினைவாக பயங்கரவாதத்துக்கு எதிரான நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
1982ஆம் ஆண்டு இஸ்ரேலின் துணைத் தூதர் பதவியில் அமர்ந்தார். 1984ஆம் ஆண்டு நியூயோர்க்கில், ஐ.நாவின் இஸ்ரேலின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பினார். அப்போது பாராளுமன்றத்தில் லிகுட் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று வெளியுறவு துணை அமைச்சரானார்.
1996ஆம் ஆண்டு அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் ரொபின் கொலை செய்யப்பட்டமையால் இஸ்ரேலின் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரானார்,
பெஞ்சமின். ஆயினும், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றார். பின்னர், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இஸ்ரேலின் பிரதமரானார்.
2013, 2015, 2020, 2022 என தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று 6 முறை பிரதமராக பதவியில் அமர்ந்தார். இப்போதும் அவர்தான் பிரதமர்.
பாலஸ்தீனத்துக்கு எதிரான கடுமையான போக்கை தற்போது நெதன்யாகு கடைபிடித்தாலும் பாலத்தீனர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பாலஸ்தீனத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2009ஆம் ஆண்டு பாலஸ்தீனம் உருவாகவும் சம்மதித்தார். இருப்பினும், 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அந்த பேச்சுவார்த்தைகள் தோற்றுப்போனது. பின் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்தது.
இந்நிலையில், பாலத்தீன அரசு உருவாக்கப்படாது. அது நிச்சயமாக நடக்காது என 2019ஆம் ஆண்டு பெஞ்சமின் தெரிவித்ததோடு பாலஸ்தீனத்துக்கு எதிரான போக்கை கடுமையாக்கினார்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.
தரை வழியாகவும் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர்.
பல பயண கைதிகளை கொலை செய்தும் விட்டனர். ஹமாஸ் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறிவிட்டதாக நாட்டு மக்கள் குற்றம் சுமத்தி சில எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து வடக்கு காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேரும் காசா பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த யுத்தத்துக்கு நடுவே இன்று இஸ்ரேலிய பிரதமர் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.