திருமணமான முன்னாள் காதலியை தன்னுடன் அனுப்பி வைக்கக் கோரி நண்பருடன் சென்று இளைஞர் ஒருவர் பெண்ணின் கணவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லிங்காரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (30). இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்.

இவருக்கும் தமிழக எல்லை பகுதியான கரசானூரை சேர்ந்த எழுமலை என்பவருடைய மகள் பிர்த்தியாவதிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவியை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறி அவரை சரமாரியாகக் கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இதில் வலியால் துடித்த தர்மராஜ் அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் தர்மராஜின் தம்பி, தந்தை ஆகியோர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

இதனைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த கும்பலை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை செய்ததில் அவர்களுடைய காரில் கத்தி, உருட்டுக்கட்டைகள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

 

பின்னர் அந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் (41), இளவரசன் (19), விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (19) உட்பட இரண்டு சிறார்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் தர்மராஜின் மனைவி பிரித்தியாவதிக்கும், தனியார் விடுதியில் காசாளராக பணிபுரிந்து வந்த தினேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுக் காதலித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதில் தினேஷ் பிரித்தியாவதியை மறக்க முடியாமல் இருந்த வந்துள்ளார். இதற்கிடையே பிரித்தியாவதியை அவரது பெற்றோர் தர்மராஜிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், தினேஷ் தனது நண்பர்களிடம் பிரித்தியாவதியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

நண்பர்கள் உதவி செய்வதாகக் கூறி தர்மராஜ் வீட்டிற்குள் சென்று தர்மராஜை தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தினேஷ், தர்மராஜை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரித்தியாவதியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply