கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அப்போதிருந்து, இவ்விவகாரம் இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
தண்டிக்கப்பட்ட இந்தியாவின் ஒய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கத்தார் சிறையில் உள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டை கத்தார் இதுவரை வெளியிடவில்லை.
இந்த எட்டு பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 26, 2023 அன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இது ஒரு துயரமான விஷயம் எனக் கூறியது. இதுதொடர்பாக அனைத்து சட்டவழிகளையும் இந்தியா ஆராயும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இவ்விவகாரம் தொடர்பாக கத்தார் அரசிடம் முறையிடும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
ஜெய்சங்கர்
இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கத்தாரில் கைது செய்யப்பட்டனர்.
பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் அன்பரசன் எத்திராஜன் இதுகுறித்து கூறுகையில், “உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலுக்கான கத்தாரின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை இந்த எட்டு பேரும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை கத்தார் இதுகுறித்து எந்தக் கருத்தும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை,” என்றார்.
கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரிகள், கத்தாரில் உள்ள அல் தஹ்ரா என்ற பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
என்ன நடந்தது?
சிஎன்பிசி செய்தியின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022 இல், கத்தார் அரசின் உளவுத்துறையினர் இந்தியக் குடிமக்கள் எட்டு பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. பின்னர், அவர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரிகள், கத்தாரில் உள்ள அல் தஹ்ரா என்ற பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்கான நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் வேலை பார்த்தது. ரேடாரைத் தவிர்க்கக் கூடிய இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
அந்த நிறுவனத்தில் 75 இந்திய குடிமக்கள் பணியாளர்களாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள்.
உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களும் மே மாதமே பணியில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்கான சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.
கத்தார் அரசு, இந்த நிறுவனத்தை மே 31ம் தேதிக்குள் மூட உத்தரவிட்டிருந்தது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 70 பணியாளர்களை மே 2023 இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டிருந்தது.
கத்தார் நிறுவனத்தில் 75 இந்திய குடிமக்கள் பணியாளர்களாக இருந்தனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறிவது என்ன?
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் , “அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் தொடர்பான வழக்கில் கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக எங்களுக்கு முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன” எனக் கூறியது.
அந்த அறிக்கையின்படி, “தூக்கிலிடுவதற்கான முடிவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். மேலும், நீதிமன்றத்தின் முழு உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சட்டக் குழுக்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்” எனக் கூறியது
இந்த விவகாரம் ரகசியமானது என்பதால், இந்த விவகாரத்தில் தற்போது எதுவும் கூற முடியாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதுடன், இது “மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்” என்று விவரித்தார்.
கத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா
மூத்த பத்திரிகையாளர் பிரனய் உபாத்யாய் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதில், “கத்தாருடன் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், இந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் பலரின் நம்பிக்கைகள் சிதைந்துள்ளன.”
கடந்த ஆண்டு டிசம்பரில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதுடன், இது “மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்” என்று விவரித்தார்.
காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி மக்களவையில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், அதற்கு பதிலளித்த அவர், “அவர்களின் நலன்கள் எங்களுக்கு முக்கியம். எங்கள் தூதர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் கத்தார் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உள்ளனர். அவர்கள்தான் எங்கள் முன்னுரிமை என்று உறுதியளிக்கிறேன்.” என்றார்.
ஜெய்சங்கர்
பிரதமர் மோதி, கத்தார் அரசிடம் இந்த விவகாரம் குறித்து பேசி, தண்டனையை குறைத்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மனிஷ் திவாரி வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் தனது கருத்தை பகிர்ந்தார். அதில்,“நான் இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பலமுறை எழுப்பினேன். அவர்கள் 120 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நான் பலமுறை கேள்விகளை எழுப்பியிருந்தேன்.
இன்று 8 பேரும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்றுதெரியவில்லை. அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களின் வழக்கறிஞர்கள் கூட குடும்பத்திற்கு அதிகம் சொல்லவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.” என பதிவிட்டிருந்தார்.
பிரதமர் மோதி, கத்தார் அரசிடம் இந்த விவகாரம் குறித்து பேசி, தண்டனையை குறைத்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகமும், பிரதமர் மோதியும் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், கத்தார் அரசிடம் உயர்மட்டத்தில் பேசுவார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விவகாரம் முழுவதும் மர்மம் நிறைந்தது என்றும், இதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஷஷி தரூர்
தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள்
ஓய்வு பெற்ற கமாண்டர் பூர்ணேந்து திவாரி, ஓய்வு பெற்ற கமாண்டர் பிரேந்திர குமார் வர்மா, ஓய்வு பெற்ற கமாண்டர் அமித் நாக்பால், ஓய்வு பெற்ற கமாண்டர் சஞ்சீவ் குப்தா, ஓய்வு பெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், ஓய்வு பெற்ற கேப்டன் சவுரப் வசிஷ்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் தான் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள்.
பத்திரிகையாளர் ஆனந்த் ரங்கநாதன் சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட, இது நீதியின் கேலிக்கூத்து என எழுதியிருந்தார்.
“கத்தார் அவர்களை கைது செய்துள்ளது. அவர்கள் 14 மாதங்கள் சிறையில் இருந்தனர். அதில் அவர்கள் நான்கு மாதங்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது,” எனப் பதிவிட்டிருந்தார்.
விருது பெற்றுள்ள கடற்படை அதிகாரி
ஓய்வு பெற்ற கமாண்டர் பூர்ணேந்து திவாரிக்கு 2019 ஆம் ஆண்டு பிரவாசி பாரதிய சம்மான் வழங்கப்பட்டது.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுகுறித்து இந்திய கடற்படையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிகே சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் ,”இது அதிர்ச்சியளிக்கும் சம்பவம். கத்தாருடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. அதனால், இதனை எதிர்பார்க்கவில்லை,”என்றார்.
ராணுவத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கேப்டன் டி.கே.சர்மாவின் சேவைக்காக விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
“கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய அதிகாரிகள் பணிபுரிந்த நிறுவனம் கத்தார் ராணுவத்திற்கு மட்டுமே பயிற்சி அளித்தது. அவர்கள் கத்தாரின் முன்னேற்றத்திற்காக வேலை செய்தனர். ஆனால், இது எதிர்பாராத ஒன்று.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்த வழக்கு நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எங்கள் வீரர்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். பங்கு.” என்றார் கேப்டன் டிகே சர்மா.
ராணுவத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கேப்டன் டி.கே.சர்மாவின் சேவைக்காக விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – பாலத்தீனம் பிரச்னைக்கு என்ன தொடர்பு?
இந்த விவகாரம் குறித்து, தலைமறைவாக உள்ள சர்வதேச அளவில் குற்றம்சாட்டப்பட்ட தாவூத் இப்ராகிமை பேட்டி கண்ட பிரபல பத்திரிகையாளர் ஷீலா பட் கருத்து தெரிவித்துள்ளார் .
முன்னாள் கடற்படை அட்மிரல் அருண் பிரகாஷின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள அவர், “பல பத்திரிகையாளர்கள் இந்த வழக்கை கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும் போது, ஒருமுறை கூட ‘இஸ்ரேலுக்கு உளவு’ என்ற வார்த்தை வரவில்லை. குற்றச்சாட்டுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.” என்றார்.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நேரம் நிறைய செய்திகளை கூறுவதாகக் கூறிய அவர், இது இஸ்ரேல் மீதான இந்தியாவின் அணுகுமுறையுடன் தொடர்புடையது என்றார்.
2015-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்டவர்களை அவர்களது நாட்டுக்கு நாடு கடத்தலாம் என்றும், அங்கு அவர்கள் தண்டனையை முடிக்கலாம் என்றும் அருண் பிரகாஷ் தனது ட்வீட்டில் எழுதியுள்ளார்.
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அமல்படுத்த வேண்டும் அல்லது அவர்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும், ஆனால் இந்த ஒப்பந்தம் இப்போது செயல்படுத்தப்பட வேண்டும்.
இஸ்ரேலின் ஆங்கில செய்தி இணையதளமான தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல், கத்தாரில் ஓய்வு பெற்ற 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து, “ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் போது, கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
அந்த இணையதளம், “ஹமாஸ், பல இஸ்ரேலிய குடிமக்களை காஸாவில் பணயக்கைதிகளாக வைத்துள்ளது. கத்தார் அவர்களை விடுவிக்க முக்கிய மத்தியஸ்தராக செயல்படுகிறது. இது தவிர, காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
புதன்கிழமை, மூத்த இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி கத்தாரைப் பாராட்டினார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், “ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நிதியுதவி செய்யும் நாடும் கத்தார் தான். இப்போது ஹமாஸுடனான போருக்கு மத்தியஸ்தம் செய்ததற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் கத்தாரைப் பாராட்டுகிறார்கள்.” என எழுதியிருந்தனர்.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாசி ஹனிஸ்பி சமூக ஊடகத்தில், “மனிதாபிமான உதவிகளில் கத்தார் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் கத்தாரின் இராஜதந்திர முயற்சிகள் மிகவும் முக்கியம்.” எனப் பதிவிட்டார்.
மூத்த பத்திரிகையாளர்
மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீமோய் தாலுக்தார், கத்தார் பற்றி பேச வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எழுதினார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு, கத்தாரின் பங்கு தெளிவாகிறது என்று அவர் கூறினார். கத்தார், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பெரிய இருப்புக்களைக் கொண்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் செல்வாக்கையும் கொண்டுள்ளது.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை நிபுணர் கபீர் தனேஜா , “கத்தாருக்கு அமெரிக்காவில் எந்த செல்வாக்கும் இல்லை. அவர்கள் தங்களது தந்திரத்தால் அமெரிக்காவில் தனது செல்வாக்கை உருவாக்கியுள்ளனர்.
தோஹாவில் ஹமாஸின் பிரதிநிதிகள் இருப்பது இஸ்ரேலுக்கு முக்கியமானது, ஆனால் 2020-21 இல், முன்னாள் மொசாட் தலைவர் யோசி கோஹனும் அங்கு சென்றார். கத்தார் தனது விளையாட்டை நன்றாக விளையாடுகிறது, ஆனால் ஏன், எப்படி என்பதை அறிவது முக்கியம்.” எனப் பதிவிட்டார்.
‘கத்தார் ஒரு முரட்டு நாடு’
எழுத்தாளரும் கலைஞருமான சுஹைல் சேத் சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார். அதில் அவர், “கத்தார் ஒரு முரட்டு நாடு, அதன் அண்டை நாடுகளான செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட அதனுடன் உறவைகளை முறித்துக் கொண்டன.”
“கால்பந்து உலகக் கோப்பையை நடத்த லஞ்சம் கொடுத்தார், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும், ஊடகங்களை பயன்படுத்தி தனது நிகழ்ச்சி நிரலை பரப்புகிறார். அவர்களிடமிருந்து சிறப்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது.”
2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சுஹைல் சேத் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை உலகக் கோப்பைக்கு கூட தகுதி பெறாத கத்தார் , உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை பெற ஊழல் பாதையை பின்பற்றியதாக சர்வதேச ஊடகங்களில் குற்றம் சாட்டப்பட்டது .
இந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு , 2010 ஆம் ஆண்டில் போட்டிகளை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய வாக்கெடுப்புக்கு முன்பு ரஷ்யா மற்றும் கத்தாருக்காக பணிபுரியும் பிரதிநிதிகள், ஐந்து ஃபிஃபா அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா கூறியது.
2018 இல், கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யாவால் ஏற்பாடு செய்யப்பட்டது, 2022 இல், கத்தார் அதை நடத்தும் உரிமையைப் பெற்றது.
அல் தஹ்ரா நிறுவனத்தின் வேலை என்ன?
நிறுவனத்தின் இணையதளத்தில், இது கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உள்ளூர் வணிகத்தில் பங்கு வகிப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
அது ஒரு தனியார் நிறுவனமாகும். அது கத்தாரின் ஆயுதப்படைகளுக்கு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்குகிறது. பாதுகாப்பு உபகரணங்களை இயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தன்னை ஒரு நிபுணராக நிறுவனம் விவரிக்கிறது.
நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் பல இந்தியர்களும் உள்ளனர்.