பொதுபலசேனா பொதுச்செயலாளர் ஞானசார தேரரை விட பல மடங்கு மோசமான இனவாத பேச்சுக்களையும் வெறுப்பு கருத்துக்களையும் பேசி வருவதோடு அல்லாது பொலிஸாரையும் தாக்கும் அளவுக்கு சென்றுள்ள மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு எதிராக இன்னும் சட்டம் தனது கடமையை ஏன் செய்யவில்லையென்பது இலங்கை வாழ் மக்களுக்கு ஆச்சரியமாகவுள்ளது.
இனங்களிடையே நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி வந்த ராஜங்கனே சத்தரார்த்தனே தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எந்த பிரதிபலிப்புகளும் எழவில்லை. காரணம் இனவெறுப்பு பேச்சுக்களை பேசும் பிக்குகளின் நடவடிக்கைகளை சிங்கள பெளத்த மக்களும் விரும்பியிருக்கவில்லை.
எனினும் அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன. மதமாற்றம் செய்கின்றார்கள் என ஒரு கத்தோலிக்க சபை ஊழியரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது தனது விகாரைக்கு அவர் வருகை தரவில்லையென அவர் திறப்பதற்காக தயார் செய்து வைத்திருந்த நினைவுச்சின்னத்தை உடைத்தெறிந்தார்.
பொதுபொலசேனா செயலாளர் ஞானசார தேரர் திடீரென அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதைப் போன்று சுமணரத்ன தேரரும் இவ்வாறு பொலிஸ் நிலையங்களுக்குள் நுழைந்து சிங்கள பெளத்தத்துக்கு அழிவு வருகின்றது. இதை பார்த்துக்கொண்டு நீங்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றீர்கள் என சத்தம் போட்டு பார்த்தார். ஆனால் அதை எவரும் பொருட்படுத்தவில்லை.
மிக அண்மையில், மட்டக்களப்புக்கு ஜனாதிபதி வருவதை தடுப்போம் என சாணக்கியன் எம்.பி கூறியதையடுத்து தனது பரிவாரங்களுடன் தும்புதடிகளை எடுத்துக்கொண்டு சாணக்கியனை இங்கு வரச்சொல்லுங்கள் என அட்டகாசம் புரிந்தார் இவர்.
இதையெல்லாம் பிரதேச பொலிஸாரும் மக்களும் பொறுத்துக்கொள்ளவில்லை. மாறாக இவரது நடவடிக்கைகளை பார்த்து தமக்குள் சிரித்துக்கொண்டனர்.
மிகவும் கஷ்டமான நிலையிலிருக்கும் மக்களுக்கு ஏதாவதொரு களிப்பு சம்பவம் வேண்டும் தானே? சிலர் இவரது நடவடிக்கைகளைப் வீடியோ பதிவு செய்து முகநூலில் போட்டு அதிக லைக்ஸ் வாங்க தவறவில்லை.
இவரது நடவடிக்கைகளை முகநூலில் பார்த்த பலரும் அவருக்கு ஆதரவாக கருத்திடுவதை தவிர்த்து, கேலியும் கிண்டலும் கலந்த பதிவுகளை தரவேற்றினர். இது இவருக்கு இன்னும் கோபத்தை ஏற்றியது.
தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் மாத்திரமே சிங்களவர்கள் சூழ தான் கெளரவத்தோடு இருக்கலாம் என்று நினைத்த அவர் அண்மைக்காலமாக தனது பிரதேச மக்கள் சிலரை அழைத்து கொண்டு புத்தர் சிலைகள் வைக்கும் வேலையை ஆரம்பித்தார்.
தமது பிரதேச விகாரையின் விகாராதிபதி அழைத்தால் செல்ல வேண்டுமே என தமது தலைவிதியை நொந்து கொண்டு மக்களும் அவர் பின்னால் ஓடினர்.
இது இப்படியிருக்கவே சில தினங்களுக்கு முன்பு தலைநகர் வாழ் தமிழர்களை வெட்டிக் ல்வேன் என மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார் சுமணரத்ன தேரர்.
இவரது இந்த இனவாத பேச்சுக்கு யாரும் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. எனினும், இவரது பின்னணியில் யார் இருப்பார்கள் என்று தேடிப் பார்த்தால் நிச்சயமாக ராஜபக்ஷ சகோதரர்களே இருக்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரணில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற காலம் வரை இந்த அம்பிட்டிய. சுமணரத்ன தேரர் இருக்குமிடம் தெரியவில்லை.
இப்போது இவர் மிகவும் அதிகாரத்துடன் நடந்துகொள்வதை பார்க்கும்போது, இவரை வைத்து இனவாத பேச்சுக்களை அவிழ்த்துவிட்டு சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பும் அதே வேளை ஜனாதிபதி ரணிலுக்கும் நெருக்கடிகளை கொடுக்க ராஜபக்சக்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால் பாராளுமன்றத்தில் சரத் வீரசேகர எம்.பியை வைத்து இனவாத கருத்துக்களை பேச வைக்கும் மகிந்த தரப்பினர் அதற்கு வெளியே பெளத்த பிக்குகளை வைத்தே இவ்வாறான காரியங்களை முன்னெடுப்பதாகத் தெரிகின்றது.
ஆனால் பல பெளத்த பிக்குகளும் இதற்கு உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலான பிக்குகள் நாட்டில் சமாதானம் .நல்லிணக்கம் பற்றி பேசி வருகின்றனர். இனவாத போக்கில் செயற்பட்டு நாட்டை மேலும் படுகுழிக்குள் தள்ள அவர்கள் விரும்பவில்லை. கோத்தாபய ஆட்சி காலத்தில் அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட ஞானசார தேரரே தற்போது அமைதி காத்து வருகின்றார்.
அப்படியிருக்கும் போது சுமணரத்ன தேரருக்கு என்ன நடந்தது? வேறு ஒன்றும் இல்லை.
தனது பழைய நட்பை புதுப்பித்துள்ளார் அவர். ஏற்கனவே அவர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்தவர். தற்போது இவரை வைத்து ஒரு இனவாத அரசியல் நாடகத்தை முன்னெடுக்க மகிந்த தீர்மானித்துள்ளாரோ தெரியவில்லை.
மிக மோசமாக இனவாதம் பேசும் சுமணரத்ன தேரர் ஏன் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பேசியதற்கும் நடந்து கொண்டமைக்கும் கைது செய்யப்படவில்லையென்று கேள்வி எழுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்டோர் கொண்டு வந்து வைத்த புத்தர் சிலை காணாமல் போயுள்ள நிலையில், அதற்கு சிறந்த நாடகமொன்ற. ஆடினார் அவர்.
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்டோர் இணைந்து குறித்த மயிலத்தமடு – மாதவனை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை கொண்டு வந்து வைத்திருந்தனர்.
இரண்டு தினங்களில் அந்த சிலை காணாமல் போயுள்ளது. இவ்விடத்தில் புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்தமைக்கு பிரதான காரணம் மேய்ச்சல் தரை விவகாரமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிய. ஆக்கிரமிக்கும் வகையில் சிங்களவர்கள் சில தினங்களுக்கு முன்பு அவ்விடத்தில் வந்து நிலங்களில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
இதை எதிர்த்து பெரும் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இறுதியில் இந்த விவகாரம் குறித்து முடிவு எடுத்து ஜனாதிபதி சிங்கள குடியேற்றவாசிகளை அகற்றி அவர்களுக்கு அவர்களது பகுதிகளிலேயே இடம் ஒதுக்கி கொடுக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் மறுநாளே அந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைத்து அந்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் இது எமக்கு சொந்தமான பகுதி என தெரிவித்து உரிமை கொண்டாடியுள்ளனர்.
எனினும், அங்கு வைக்கப்பட்ட புத்தர் சிலை காணாமல் போயுள்ள நிலையில் அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
அப்பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தலைமையிலான குழுவினர் கரடியணாறு பொலிஸ் பொறுப்பதிகாரியை மிக மோசமான வார்த்தைகளால் பேசியதோடு அந்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகளை தூண்டிவிட்டு அங்குள்ள தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் சுமணரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அவ்விடத்துக்கு சென்று தேரரை பொலிஸார் குறித்த சிலை இருக்கும் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் கோபமுற்ற அவர் தமிழர்களை வெட்டி வெட்டி கொல்வோம் என்ற வார்த்தை பிரயோகங்களை கக்கினார். இந்த புத்தர் சிலை விவகாரத்தின் பின்னணியில் மகிந்த தரப்பினர் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
கோத்தாபய
ஏனென்றால் கோத்தாபயவால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் தான் அனுராதா யஹம்பத். இவர் கிழக்கு மாகாணத்தில் பல தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைளில் இறங்கியிருந்தார்.
தமிழ் பெயர்கள் உள்ள வீதி பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்ற தீர்மானங்களை மேற்கொண்டார். அதை அனைத்தையும் அங்குள்ள மக்கள் எதிர்த்தனர். இறுதியில் கோத்தாபய பதவியை விட்டு ஓடியதும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் சுமண ரத்ன தேரருடன் இணைந்து புத்தர் சிலை வைக்கும் வேலையில் தற்போது இவர் இறங்கியுள்ளார்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மிக மோசமான இனவாத செயற்பாடுகளுக்குப் பின்னணியில் ராஜபக்ஷ சகோதரர்களே இருப்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டு அரசியல் தோல்வியடைந்துள்ள இவர்கள் இனவாத செயற்பாடுகள் மூலம் ஓரளவாவது பாராளுமன்றில் ஆசனங்களை பெற முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கு மக்கள் இடந்தரமாட்டர் என்பது நிச்சயம்.