கேரள குண்டு வெடிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி வெளியிட்ட வீடியோவில் உள்ள தகவல்களை முழுமையாக பார்க்கலாம்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் இன்று காலை கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சை பெற்று வந்த குமாரி என்ற மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்புக்கு தான் தான் காரணம் என்று கொடக்கரை காவல் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்பவர் சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்புக்கு டொமினிக் மார்டின் தான் காரணம் என்பது தெரியவந்தது.
டொமினிக் மார்டின் காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பாக முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்.. “16 வருடம் நான் இந்த யோகோவாவில் இருக்கிறேன் அப்போது நான் பெரிதாக எடுக்கவில்லை.
கடந்த 6 வருடமாக நான் அதில் இல்லை. மற்ற குழந்தைகளிடம் இருந்து மிட்டாய் கூட வாங்கி சாப்பிடக் கூடாது என கூறியுள்ளார்கள். அது எல்லாம் என் மனதை புண்படுத்தியது.
850 கோடி மக்கள் சாகணும்னு நினைக்கிறாங்க. இவங்க தவறான அணுகுமுறையை எதிர்ப்பேன். இந்த அமைப்பு நாட்டுக்கு தீமை செய்யும் என்பதை புரிந்து கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன்.
அரசியல் வாதிகள் யோகோவா செயல்பாட்டை கண்டு கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களை தவறாக எண்ணுகிறார்கள். யோகோவா உங்களுடைய செயல்பாடு தவறானது. ஒரு ஆளாவது எதிர்த்துக் கேட்கணும்.
கேரளாவில தண்ணி வந்த நேரத்தில கூட அவங்களுடைய சமுதாயத்தின் வீடுகளை மட்டும் சுத்தம் செய்தார்கள். மற்றவர்களை மிக மோசமாக சித்தரிக்கிற இவர்களின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். சபை தேசவிரோத செயலில் ஈடுபட்டதால் குண்டு வைத்தேன்” என கூறியிருந்தார்.
பலமுறை சபையுடன் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து குண்டு வைத்ததாகவும் அதனால்தான் இந்த செயலில் இறங்கியதாகவும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.