இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என்று சூளுரைத்திருக்கிறார்.
முன்பிருந்த சூழ்நிலை ‘திரும்பப் போவதில்லை’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆனால், இஸ்ரேலிய படைகள் காஸா பகுதியில் தாக்குதல்களை அதிகரித்து, பாலத்தீனியர்களுக்கு புதிய, அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.
இந்தப் போர் எங்கே போகிறது? அடுத்து என்ன நடக்கும்?
அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காஸா பகுதியில் இருந்து ஹமாஸை வேரோடு பிடுங்கப் போவதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் பெரும் ராணுவ வலிமையை இடைவிடாமல் பயன்படுத்துவதைத் தவிர, இந்த இலக்கு வேறு எந்த வழிகளில் அடையப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பாலத்தீன ஆய்வு மன்றத்தின் தலைவரான மைக்கேல் மில்ஷ்டீன், போருக்குப் பின் என்ன செய்வது என்ற திட்டம் இல்லாமல், இதுபோன்ற ஒரு வரலாற்று முன்னெடுப்பைச் செய்யக்கூடாது என்கிறார்.
இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறையில் பாலத்தீன விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான மில்ஷ்டீன், அதற்கான திட்டமிடல் இன்னும் துவங்கவில்லை என்ற அச்சத்தைத் தெரிவிக்கிறார்.
“அது இப்போதே செய்யப்பட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
படைகளை வெளியேற்றிய மறுநாள் என்ன நடக்கும்?
இஸ்ரேலில் தொடர் தாக்குதலால் காஸாவில் மனிதாபிமான சிக்கல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
மேற்கத்திய ராஜதந்திரிகள் எதிர்காலம் குறித்து இஸ்ரேலுடன் தீவிரமாக விவாதித்து வருவதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் தெளிவாக எட்டப்படவில்லை.
“ஒரு நிலையான திட்டம் இல்லவே இல்லை,” என்று ஒரு ராஜதந்திரி கூறுகிறார். “நீங்கள் காகிதத்தில் சில யோசனைகளைத் திட்டமிடலாம். ஆனால் அவற்றைச் செயல்படுத்த பல வாரங்கள், மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.
ஹமாஸின் ராணுவத்தை வலுவிழக்கச் செய்வது முதல் காஸாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றுவது வரையிலான ராணுவத் திட்டங்கள் இஸ்ரேலிடம் உள்ளன.
ஆனால், முந்தைய நெருக்கடிகளைச் சமாளித்த நீண்ட அனுபவம் உள்ளவர்கள், திட்டமிடல் இதுவரைதான் செல்லும் என்று கூறுகிறார்கள்.
இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட்டின் முன்னாள் மூத்த அதிகாரி ஹைம் டோமர், “எங்கள் படைகளை நாங்கள் வெளியேற்றிய மறுநாளே காஸாவுக்காக செயல்படுத்தக்கூடிய திட்டம் இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்கிறார்.
ஹமாஸ் தோற்கடிக்கப்பட முடியுமா?
ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேலியர்கள் அனைவரும் ஒருமனதாக உள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி நடந்த படுகொலைகள் மிகவும் பயங்கரமானவை. இனியும் காஸாவில் ஆட்சி நடத்த இந்த அமைப்பை அனுமதிக்க முடியாது.
ஆனால் மில்ஷ்டீனின் கூற்றுப்படி, ஹமாஸ் ஒரு கருத்து, அதை இஸ்ரேலால் அழிக்க முடியாது.
இராக்கில் 2003ஆம் ஆண்டு, சதாம் உசேன் ஆட்சியின் அனைத்து தடயங்களையும் அகற்ற அமெரிக்க தலைமையிலான படைகள் முயற்சி செய்தது ஒரு பேரழிவாக முடிந்தது, என்கிறார் அவர். இது பல லட்சம் இராக்கிய அரசு ஊழியர்களையும் ஆயுதப்படை உறுப்பினர்களையும் வேலையிழக்கச் செய்து, பேரழிவுகரமான ஒரு கிளர்ச்சிக்கு வித்திட்டது, என்கிறார்.
அந்த இராக் மோதலில் போரிட்ட அமெரிக்க வீரர்கள் தற்போது இஸ்ரேலில் உள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி இஸ்ரேலிய ராணுவத்துடன் பேசுகிறார்கள். “இராக்கில் அவர்கள் பெரிய தவறுகளைச் செய்தார்கள் என்பதை இஸ்ரேலியர்களுக்கு விளக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார் மில்ஷ்டீன்.
“உதாரணமாக, ஆளும் கட்சியை ஒழிக்க வேண்டும் அல்லது மக்களின் மனதை மாற்ற வேண்டும் என்ற மாயையில் இருக்கக்கூடாது என்று அவர்கள் சொல்ல வேண்டும். அது நடக்கவே நடக்காது,” என்கிறார் அவர்.
காஸா மக்கள், இஸ்ரேல் தங்களை அகதிகளாக எகிப்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகின்றனர்.
வரலாற்றுத் துயரம் திரும்புகிறதா?
பாலத்தீனியர்கள் இதை ஒப்புக்கொள்கிறார்கள்.
பாலத்தீனிய தேசிய முன்முயற்சியின் தலைவர் முஸ்தபா பர்கௌதி கூறுகையில், “ஹமாஸ் மக்களிடம் பிரபலமான ஓர் அமைப்பாக உள்ளது. அவர்கள் ஹமாஸை அகற்ற விரும்பினால், அவர்கள் காஸாவில் ஒரு இன சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
அதன்படி, பல லட்சம் பாலத்தீனியர்களை காஸா பகுதியிலிருந்து வெளியேற்றி அண்டை நாடான எகிப்துக்குள் அனுப்ப இஸ்ரேல் ரகசியமாகத் திட்டமிடுகிறது என்ற அச்சம் பாலத்தீன மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.
இஸ்ரேல் நிறுவப்பட்டபோது, பெருமளவிலான பாலத்தீனர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். பலர் தப்பியோடினார்கள், அல்லது வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். தற்போது நடக்கும் நிகழ்வுகள் 1948இல் நடந்தவற்றின் வேதனையான நினைவுகளை தட்டியெழுப்புகிறது.
பாலத்தீன விடுதலை அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் டயானா புட்டு கூறுகையில், “நாட்டை விட்டு ஓடிப் போனால், திரும்பி வருவது சாத்தியமே இல்லை,” என்கிறார்.
பாலத்தீன மக்களுக்கான பாதுகாப்பு என்ன?
இஸ்ரேலை சேர்ந்த அரசியல் நோக்கர்கள், முன்னாள் அதிகாரிகள் எனப் பலரும், பாலத்தீனர்கள் தற்காலிகமாக, எகிப்தின் சினாய் எல்லைக்கு அப்பால் தங்க வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அடிக்கடி குறிப்பிடுகின்றனர்.
இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா ஈலாண்ட், ஏராளமான அப்பாவி பாலத்தீனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல், காஸாவில் தனது ராணுவ லட்சியத்தை அடைவதற்கு இஸ்ரேலுக்கு ஒரே வழி, பொதுமக்களை காஸாவிலிருந்து காலி செய்ய வைப்பதே என்கிறார்.
“தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக அவர்கள் எகிப்து எல்லையைத் தாண்ட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
காஸா மக்களுக்குப் பாதுகாப்பான வசிப்பிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது .
காஸா மக்களை எகிப்துக்கு அகதிகளாக அனுப்பத் திட்டமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 20ஆம் விடுத்த அறிக்கையில் இருந்த ஒரு வரி, பாலத்தீனர்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது. அதில் இஸ்ரேல் மற்றும் யுக்ரேனை ஆதரிப்பதற்கு நிதியுதவியைக் கோரியிருந்தார்.
“இந்த நெருக்கடி, மக்கள் எல்லை தாண்டிச் செல்ல நிர்பந்திக்கலாம். அது மனிதாபிமான சிக்கல்களை விளைவிக்கலாம்,” என்று கூறியிருந்தார்.
ஆனால், பாலத்தீனர்கள் எல்லையைக் கடக்க வேண்டும் என்று இஸ்ரேல் இதுவரை கூறவில்லை. இஸ்ரேலிய ராணுவம், பலமுறை, காஸாவின் குடிமக்களை தெற்கில் இருக்கும் ‘பாதுகாப்பான பகுதிகளுக்கு’ செல்லுமாறு கூறியுள்ளது. ஆனால் இந்தப் பகுதிகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிஸ்ஸி, காஸாவில் இஸ்ரேலின் போர் ‘பொது மக்களை எகிப்துக்குள் தள்ளும் முயற்சி,” என்று எச்சரித்துள்ளார்.
இந்தப் பிரச்னைகள் முடிந்தபின், காஸா பகுதியில் மக்கள் இருந்தால், அவர்களை ஆளப்போவது யார்?
“இது மில்லியன் டாலர் கேள்வி,” என்கிறார் மில்ஷ்டீன்.
காஸாவில் புதிய நிர்வாகம் அமைப்பது சாத்தியமா?
மில்ஷ்டீனின் கருத்துப்படி, காஸாவில் காஸா மக்களாலேயே நடத்தப்படும் நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்கிறார். இதற்கு உள்ளூர் தலைவர்களிடம் இருந்தும், அமெரிக்கா, எகிப்து, முடிந்தால் சௌதி அரேபியாவின் ஆதரவையும் பெறவேண்டும்.
கடந்த 2006ஆம் ஆண்டின் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, காஸாவிலிருந்து ஹமாஸால் வன்முறையாக வெளியேற்றப்பட்ட பாலத்தீன அமைப்பான ஃபத்தாவின் தலைவர்களும் இதில் இருக்க வேண்டும், என்கிறார் அவர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகரில் அமைந்துள்ள பாலத்தீனிய அதிகாரத்தை ஃபதா நிர்வகிக்கிறது.
ஆனால் பாலத்தீன அதிகார அமைப்பையும் அதன் வயதான தலைவர் மஹ்மூத் அப்பாஸையும் மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் உள்ள பாலத்தீனர்கள் நம்பவில்லை.
பாலத்தீன அதிகார அமைப்பில் சில காலம் 1990களில் பணியாற்றிய மூத்த அரசியல்வாதியான ஹனான் அஷ்ராவி, இஸ்ரேல் உட்பட வெளியாட்கள் மீண்டும் பாலத்தீனர்களின் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்துவது மோசமானது என்கிறார்.
“இதுவொரு சதுரங்கப் பலகை போன்றதல்ல, சில காய்களை அங்கும் இங்கும் நகர்த்தி செக்மேட் வைப்பதற்கு. சில பாலத்தீனர்கள் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பவர்களாக இருக்கலாம். ஆனால் காஸா மக்கள் அவர்களை தயவுடன் ஏற்றுகொள்ள மாட்டார்கள்,” என்கிறார் அவர்.
1948ஆம் மோதலின் துயர நினைவுகள் பாலத்தீனர்களுக்கு இன்னும் ஆறாமல் இருக்கின்றன, தற்போதைய சூழல் அதை இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது.
என்னதான் தீர்வு?
காஸாவில் முந்தைய சிக்கல்களைக் கையாண்டவர்களுக்கு, எந்த தீர்வு முன்வைக்கப்பட்டாலும், அவை இதற்கு முன்பே சோதித்துப் பார்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
முன்னாள் மொசாட் அதிகாரியான ஹைம் டோமர், தன்னைப் பொறுத்தவரை, பணயக் கைதிகளை மீட்கும் வரை ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறார்.
2012இல் காஸாவில் நடந்த சண்டைக்குப் பிறகு, டோமர் மொசாட் இயக்குநருடன் ரகசிய பேச்சுவார்த்தைக்காகக் கெய்ரோவுக்குச் சென்றார். இதன் விளைவாக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அவர்கள் இருந்த கட்டடத்திற்கு எதிர் கட்டடத்தில் ஹமாஸ் பிரதிநிதிகள் இருந்தனர், தெருவுக்குக் எகிப்திய அதிகாரிகள் இரண்டு இடங்களுக்கும் இடையே சென்று வந்துகொண்டிருந்தனர்.
இதேபோன்ற ஒரு முன்னெடுப்பு மீண்டும் செய்யப்படவேண்டும் என்றும், இஸ்ரேல் நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டும், என்றும் அவர் கூறுகிறார்.
“இஸ்ரேல் 2,000 ஹமாஸ் கைதிகளை விடுவித்தாலும் பரவாயில்லை. ஆனால் எங்கள் மக்கள் வீடு திரும்புவதை நான் பார்க்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.
அதன்பின், முழு அளவிலான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதா அல்லது நீண்ட கால போர்நிறுத்தத்தைத் தேர்ந்தெடுப்பதா என்பதை இஸ்ரேல் முடிவு செய்யலாம் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இப்போது காலவரையின்றி காஸா பிரச்னையைச் சமாளிக்க இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
“இது இஸ்ரேலின் தொண்டையில் சிக்கிய முள் போன்றது,” என்கிறார் அவர்.