“செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் ரெயில் பயணத்தை பயன்படுத்துவதால் அதிகாலை முதலே ரெயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் இருக்கும்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கவுண்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
பயணிகள் வரிசையில் நின்றபடி டிக்கெட் வாங்கி சென்றனர்.அப்போது டிக்கெட் கவுண்டர் அருகே தரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்த நிலையில் இருந்தார். அந்த நபர் தூங்குவதாக நினைத்து பயணிகள் சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் எழாததால் சந்தேகம் அடைந்த சில பயணிகள் அந்த நபரை கவனித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிந்தது.
எனினும் டிக்கெட் வாங்க வந்த பயணிகள் எந்தவித சலனமும் இல்லாமல் உடல் அருகேயே வரிசையில் நின்றபடி டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை டிக்கெட் கவுண்டர் அருகேயே உடல் அப்படியே கிடந்தது. இறந்த நபரின் உடலை அகற்றுவதற்கு பயணிகளும், பொதுமக்களும், ரெயில் நிலைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை பார்க்கும் போது மனிதாபிமானம் மரித்து போனதாகவே தோன்றியது. இதற்கிடையே ரெயில் நிலையத்தில் இருந்த உடலை அகற்றி விசாரணை நடத்துவதிலும் எல்லைப் பிரச்சனை தலை தூக்கியது.
செங்கல்பட்டு நகர போலீசார், ரெயில்வே எல்லைக்குள் சம்பவம் நடந்ததால் ரெயில்வே போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் ரெயில்வே போலீசார், இது பற்றி நகர போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினர்.
இதன் பின்னர் ஒரு வழியாக முடிவுக்கு வந்த ரெயில்வே போலீசார் 5 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த உடலை அகற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.”,