வவுனியா- A9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (30) காலை இடம்பெற்ற நிலையில் சொகுசு காரில் பயணித்த இருவரும் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி A9 வீதியால் சென்ற சொகுசு கார், A9 வீதி சாந்தசோலை சந்தியை அடைந்த போது அதே வழியில் சென்ற கனரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூண் ஒன்றை உடைத்துக் கொண்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த சொகுசு காரை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டெடுத்தனர்.
விபத்தின் போது குறித்த சொகுசு காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த பிரித்தானிய குடியிரிமை பெற்ற ஒருவரும், பிறிதொரு இளைஞரும் பயணித்ததுடன், அவர்கள் எந்தவித பாதிப்புக்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.