மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இரண்டு விமானப்படை F-16 ஃபால்கான் ரக போர் விமானங்கள், மார்ச் 6, 2023 அன்று, அமெரிக்க மத்தியக் கட்டளைப் பகுதியில் உள்ள அஜில் ஸ்பார்டனின் போது ஒரு பணியிலிருந்து திரும்புகின்றன. [Photo: Air Force Tech. Sgt. Daniel Asselta ]
இஸ்ரேல் காசாவில் தகவல் தொடர்புகளை துண்டித்து, எல்லையில் துருப்புக்களை குவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெஹ்ரானுடனான மோதலை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, சிரியாவில் ஈரானிய “பினாமிகள்” என்று அழைக்கப்படும் இடங்களில் அமெரிக்கா டசின் கணக்கான குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ அதிகரிப்புகள், இராணுவ மோதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் போராக வேகமாக விரிவடைந்து வருவதை தெளிவாக்குகிறது.
“இன்று, ஜனாதிபதி பைடெனின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவம் கிழக்கு சிரியாவில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களால் பயன்படுத்தப்படும் இரண்டு தளங்கள் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியது” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் வியாழன் இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“ஈரான் தனது கையை மறைக்க விரும்புகிறது மற்றும் எங்கள் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் அதன் பங்கை மறுக்க விரும்புகிறது.
அவர்களை விடமாட்டோம். அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரானின் பினாமிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தால், எங்கள் மக்களைப் பாதுகாக்க மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு அமெரிக்க விமானப்படை F-16 போர் விமானங்கள் மற்றும் ரீப்பர் ட்ரோன்கள் சிரியாவின் அபு கமால் அருகே ஆயுதங்கள் சேமிப்பு வசதி மற்றும் வெடிமருந்து சேமிப்பு வசதி என்று அமெரிக்க அதிகாரிகள் கூறிய இடங்கள் மீது 30 க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசித் தாக்கின.
ஒஸ்டின் அபத்தமான முறையில், ஈரானிய-சார்பு சக்திகளுக்கு எதிரான தாக்குதல்கள் “இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இருந்து வேறுபட்டவை” என்று கூறினார்.
இது அப்பட்டமான பொய். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை, தற்போது மத்திய கிழக்கு முழுவதும் நடைபெற்று வரும் பாரிய இராணுவ நடவடிக்கையின் ஒரு அங்கமாக அமெரிக்கா தெளிவாகக் கருதுகிறது.
இஸ்ரேல் என்ன அட்டூழியங்களைச் செய்தாலும் அதற்குத் தாங்கள் ஆதரவளிப்போம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். “நாங்கள் இஸ்ரேலுக்கு சிவப்பு கோடுகளை அமைக்கவில்லை” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார்.
“அமெரிக்கா இன்றிரவு ஒரு செய்தியை அனுப்பியது” என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான மிக் முல்ராய் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.
“ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள எங்கள் இராணுவ நிலைகள் மற்றும் பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், ஈரானுக்கு எதிராகவும், குறிப்பாக அதன் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு எதிராகவும் நாங்கள் நேரடியாக பதிலடி கொடுப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழன் அன்று, தாக்குதல் தொடர்பாக காங்கிரசுக்கு வெள்ளை மாளிகை போர் அதிகார அறிவிப்பை அனுப்பியது.
Iran’s powerful Islamic Revolutionary Guards Corps – IRGC
“அக்டோபர் 26, 2023 இரவு, அமெரிக்கப் படைகள் கிழக்கு சிரியாவில் உள்ள நிலைகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தியது” என்றும் “கட்டளை மற்றும் கட்டுப்பாடு, வெடிமருந்து சேமிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக IRGC மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களால் பயன்படுத்தப்படும் இலக்கு வசதிகளை துல்லியமாக தாக்கியது” என்று பைடென் எழுதினார்.
“அமெரிக்கா மேலும் அச்சுறுத்தல்கள் அல்லது தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது” என்று பைடென் மேலும் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை “அவர்கள் தொடர்ந்து எமது துருப்புக்களுக்கு எதிராக நகர்ந்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று ஈரானுக்கு பைடென் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கடந்த வியாழன் இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
வியாழன் இரவு தாக்குதலுக்கு விடையிறுக்கும் வகையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் சில பகுதிகள் இன்னும் ஆக்கிரோஷமான போர் விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்தன.
“குறைந்த பட்சம் ஜனாதிபதி பைடென் ஒரு டசின் ஆத்திரமூட்டல்களுக்குப் பிறகு பதிலடி கொடுத்துள்ளார். ஆனால், நிர்வாகம் இன்னும் பிராந்தியத்தில் வன்முறைக்கான மூல காரணத்தை கவனிக்கவில்லை: அது ஈரான்,” என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு தலையங்க கட்டுரையில் குறிப்பிட்டது.
“ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் மீது அவ்வப்போது குண்டுகள் வீசப்படுவது எதிரிகளின் தாக்குதல்களுக்கு விகிதாசாரமாக இல்லை” என்றும் “ஈரானின் பிரதிநிதிகள் அக்டோபர் 17 முதல் குறைந்தது 19 முறை அமெரிக்க நிலைகளில் ராக்கெட்டுகள் அல்லது ட்ரோன்களை ஏவியுள்ளனர்” என்றும் ஜேர்னல் குறிப்பிட்டது.
“2018 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் வாக்னர் குழு மற்றும் பஷர் அல் அசாத் படைகள் அமெரிக்க இராணுவ நிலைகளைத் தாக்கியபோது, சிரியாவில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஜிம் மேட்டிஸ், தாக்குதலுக்குள்ளான பகுதிகளை மீட்டெடுப்பதற்கு, தாக்கும் படைகளை அழித்தொழிக்கும்படி” ஜெனரல் மேட்டிஸ் கட்டளையிட்டதை காங்கிரஸிடம் கூறிதாக ஜேர்னல் தெரிவித்தது.
அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு போர்க் கப்பல்கள், படைகள் மற்றும் விமானங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
அது, தனது அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலான USS Gerald R. Ford ஐ மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியதுடன், 75 விமானங்கள் மற்றும் ஐந்து போர்க்கப்பல்கள் வரை அதற்கு துணையாக இருக்கின்றன. USS Dwight D. Eisenhower விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் தாக்குதல் போர் அணிகள் பாரசீக வளைகுடாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் 30,000 துருப்புக்களையும், மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்களில் 2,000 கடற்படையினரையும் நிறுத்தியுள்ளது. கூடுதலாக, பென்டகன் வியாழனன்று 900 துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அல்லது மத்திய கிழக்கிற்கு புறப்பட தயாராகி வருவதாகக் கூறியது.
இந்த நிலைமையைப் பற்றி தி எகனாமிஸ்ட் எழுதியது: “அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை, அமெரிக்கர்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலாக நட்பு நாடுகளின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் காட்சிகளைக் கற்பனை செய்வது மிகவும் எளிதானது.”
“இஸ்ரேல் மற்றும் லெபனானில் வசிக்கும் 600,000ம் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதற்கான அவசரத் திட்டத்தை வெள்ளை மாளிகை கோரியுள்ளது என்பது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வேகம் குறித்த ஜோ பைடெனின் கவலையை நிரூபிக்கிறது. … அது மாறிவிடும். இது நித்திய போர்களில் மற்றொரு அத்தியாயமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், காஸாவில் “உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு” ஆதரவாக வெள்ளிக்கிழமை அன்று வாக்களிப்பு நடந்தது. 120 க்கு 14 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா “இல்லை” என்று வாக்களித்த போதிலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவலை நேரடியாகக் கண்டிக்கும் வகையில், கனடா முன்வைத்த திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறாமல் தோல்வியடைந்தது.
காஸாவில் இஸ்ரேல் அதன் இனப்படுகொலையை தீவிரப்படுத்துவதால், மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவின் போர் விரிவாக்கம் நடைபெறுகிறது.
வியாழன் அன்று, காஸாவின் சுகாதார அமைச்சகம் இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களால் கொல்லப்பட்ட 6,747 க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டது. அக்டோபர் 7 மற்றும் 26 க்கு இடையில், 7,028 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 281 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
பாலஸ்தீனிய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையில் தனக்கு “நம்பிக்கை இல்லை” என்று பைடென் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா அதிகாரிகள், பாலஸ்தீனிய அதிகாரிகளால் மேற்கோள் காட்டப்பட்ட இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தினர்.
“நாங்கள் எங்கள் அறிக்கையிடலில் அவர்களின் தரவை தொடர்ந்து சேர்த்து வருகிறோம், அது தெளிவாக ஆதாரமாக உள்ளது” என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) ராய்ட்டர்ஸிடம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின், சுகாதார அவசரநிலைத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான், இந்த எண்ணிக்கைகள் “பொதுவாக மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்கள் மீதான குண்டுவீச்சுக்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்பார்க்கப்படும் கொலைகளின் அளவின் தர்க்கத்துடன் ஒத்துப்போகின்றன” என்று கூறினார்.
புதன்கிழமை பைடென் தெரிவித்த கருத்தில், பாலஸ்தீனிய அதிகாரிகள் அமெரிக்க இறப்பு எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள் என்றும், பொதுமக்களின் மரணம் “போரின் விலை” என்றும் வலியுறுத்திக் கூறினார்.