மின்சார சபையை 14 கூறுகளாக பிரித்து பெரும்பான்மை உரிமத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பை திருத்தம் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை சேவையாளர்கள் கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார சபையை அதானிக்கு தரைவார்க்காதே,நியாமற்ற மின்கட்டண அதிகரிப்பை திருத்தம் செய்,சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அமைய செயற்படாதே என பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட மின்சார தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டதாவது,
மின்சார சபையை மறுசீரமைக்கும் வகையில் சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு மின்சார சபையின் கட்டமைப்பை 14 கூறுகளாக பிரித்து அதன் பெரும்பான்மை உரிமத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்.சுய அறிவில்லாத பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு வழங்குவார்கள்.ஆனால் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.
மின்சார சபையின் சேவையாளர்களுக்கு சம்பளம் மற்றும் விசேட சலுகைகள் வழங்குவதற்கும் கடன் பெற்றதால் மின்சார சபை நட்டமடைந்துள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.கடந்த மூன்று வருட காலமாக மின்சார சபையின் சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
நியாயமற்ற வகையில் மின்கட்டணம் சட்டவிரோதமான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.இனி ஒவ்வொரு காலாண்டுக்கும் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் இல்லையேல் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் என்பதை தவிர மாற்றுத் திட்டங்கள் ஏதும் மின்சாரத்துறை அமைச்சருக்கு கிடையாது.
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மின்கட்டணம் குறைக்கப்பட வேண்டும். மின்சார சபை சேவையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதா அல்லது நீட்டிப்பதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மின்கட்டண அதிகரிப்புக்கு ஒரு தீர்வினை வழங்காவிடின் அடுத்தக்கட்ட தீர்மானத்தை எடுப்போம் என்றார்.