நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் ஆகும். அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியவில் உள்ள மாநிலங்களிலும் உணரப்பட்டது.

பிபிசி நேபாளி சேவையின்படி, வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதியில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது.
விளம்பரம்

நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் குபேர் கடயாத் கூறுகையில், அதிகபட்சமாக ஜாஜர்கோட்டில் 92 பேரும், ருக்கும் வெஸ்டில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர், என்றார். இது தவிர, 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

“நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளூர் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எட்டு படைப்பிரிவுகளும் ஒரு ஹெலிகாப்டரும் சுர்கெட்டில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன,” என்றார் குபேர் கடயாத்.

சிகிச்சை ஏற்பாடுகள்

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, காயமடைந்தவர்களில் 30 பேர் ருக்கும் மேற்கிலும், 100க்கும் மேற்பட்டோர் ஜாஜர்கோட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் மிக மோசமான நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த நோயாளிகள் பெரி மருத்துவமனை, நேபாள்கஞ்ச் நர்சிங் ஹோம் மற்றும் கோஹல்பூர் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருது்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 105 படுக்கைகள் காலி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாள்கஞ்சில் இருந்த பிபிசி நிருபர் பிம்லா சௌத்ரி, காயமடைந்த நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்ய பாதுகாப்புப் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டிக் கூறினார்.

கர்னாலி மாகாண காவல்துறை டிஐஜி பீம் பிரசாத் தக்கல் கூறுகையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்களை மீட்கத் தொடங்கினர்.

கர்னாலி மாகாண காவல்துறை அலுவலகத்தில் இருந்து மீட்புக்காக 56 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போலீஸ் மருத்துவமனையில் இருந்து மருந்துகளுடன் சுகாதாரப் பணியாளர்கள் குழு சென்றுள்ளதாகவும் டிஐஜி தாகல் தெரிவித்தார்.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணி கடினமாகி வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை வெளியேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

2015 ஏற்பட்ட நிலநடுக்கம்

நேபாளத்தில் 25 ஏப்ரல் 2015 அன்று 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நிலநடுக்கத்தில், ஐ.நா. தரவுகளின்படி, சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர், 10 லட்சம் வீடுகள் சேதமடைந்தன, சுமார் 28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் நேபாள தலைநகர் காத்மாண்டூவில் அமைந்துள்ள பல வரலாற்றுக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply