அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பான யோசனை ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து, தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கும், இரா.சம்பந்தனை பதவி விலகுமாறு கோருவதற்கும் இடையில் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம்.
அதற்கான விடையை தேடுவதற்கு முன்னர், தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து உருவாகியிருப்பதற்கான காரணங்களை ஆராய வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெறுவது நடைமுறைச் சாத்தியமான விடயம் அல்ல.
ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை மேலோங்கிய இலங்கைத் தீவில், தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு, அவ்வாறு 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறக் கூடிய எந்தக் கட்சியும் முன்வரப் போவதில்லை.
அவ்வாறு நிறுத்தினாலும், பெரும்பான்மை மக்கள் அந்த வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை. அதற்குக் காரணம் தமிழர்கள் சிறுபான்மையினர். பெரும்பான்மைச் சிங்களவர்கள் அதனை ஆதரிக்க மாட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை தமிழ்க் கட்சிகள் நிறுத்துவதால் என்ன இலாபம் கிடைத்துவிடப் போகிறது?
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் முறையின் கீழ், 1982ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டிருந்தார்
ஆனால், அவரை பெருவாரியான தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை. அப்போது அவருக்கு கிடைத்த வாக்குகள், 173,934 (2.67சதவீதம்) மட்டும் தான். ஆனால் அப்போது, நாட்டில் 18 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் குமார் பொன்னம்பலத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. வன்னி, மட்டக்களப்பில் அதிகளவு தமிழ் வாக்குகள் இருந்தும் அவருக்கு அவை விழவில்லை.
அதற்குப் பின்னர், 2010 ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம், சுயேட்சையாகப் போட்டியிட்ட போதும், 9,662 வாக்குகளைத் தான் பெற முடிந்தது.
ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இவர்கள் இருவரும் பெரும் விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு விளைவுகளை ஏற்படுத்த முடியாமைக்கு, அவர்கள் தமிழர் தரப்பின் பொதுவேட்பாளராக நிற்காமல், போனது முக்கியமானதொரு காரணம்.
ஆனால், இந்தமுறை தமிழர் தரப்பில் இருந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம், தமிழரின் அரசியல் கோரிக்கையை உலகத்துக்கு தெரியப்படுத்தலாம்.
அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 1977இல் ஆணை பெறப்பட்டது போல, ஒரு நகர்வைச் செய்ய முடியும் என்ற கருத்து சிலரிடம் காணப்படுகிறது.
அதேவேளை, 1977 தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தனித் தமிழீழ தீர்மானத்துக்கு ஆணையை வழங்கிய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் அதற்கு குறைவான ஒரு தீர்வுக்கு- அதாவது சமஷ்டிக்கு ஆணை கோருவது சரியானதா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
தமிழரின் அரசியல் கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தும் முடிவை தமிழ்க் கட்சிகள் எடுக்குமானால், அது ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமான விளைவை ஏற் படுத்தும்.
தமிழ் வாக்குகள் பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கிடைக்காமல் போகும்பட்சத்தில், அவர்களால் முதல் சுற்றில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படலாம்.
ஆயினும், கோட்டாபய ராஜபக் ஷ தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றது போன்ற அரிதான நிகழ்வுக்கு சாத்தியமில்லை என்று கூற முடியாது.
அவ்வாறான நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை இடம்பெறும். அதிலும் செக் வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
இவ்வாறான நிலை அடுத்த சிங்கள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் குழப்பங்களை ஏற்படுத்தினாலும் அதனை
தடுத்து நிறுத்தாது. அதேவேளை, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைக்கும் வாக்குகள் தமிழரின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்க் கட்சிகள் தீர்மானிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறாயின் யார் அதற்குப் பொருத்தமானவர் என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது.
அவர் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்டவராக, அவர்களால் ஆதரிக்க கூடியவராக இருக்க வேண்டும். அவ்வாறான 100 சதவீத ஆளுமை அல்லது ஆற்றலுடன் யாரும் இருக்கின்றனர் எனக் கூற முடியாது.
ஆயினும், சிலர் இரா.சம்பந்தனை கைகாட்டுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இரா.சம்பந்தன் பொருத்தமானவர் என்ற கருத்து அரசியல் மட்டத்தில் மாத்திரமன்றி ஊடகப் பரப்பிலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் தான், இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.
காட்சி ஊடகம் ஒன்று இரா.சம்பந்தனின் முதுமை நிலை காரணமாக அவரால் செயற்பட முடியாதிருப்பது குறித்து சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய போதே, சுமந்திரன் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதுமையினால் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்ட போதே, அவரைப் பதவி விலகுமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டார் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
2020 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட போது -தனது முதுமை நிலையைப் புரிந்து கொண்டும்,
திருகோணமலை மக்கள் தமது முதலாவது பிரதிநிதியாக தெரிவு செய்திருக்கின்றனர் என்பதால் பதவி விலக முடியாது என இரா.சம்பந்தன் காரணம் கூறியதாகவும் சுமந்திரன் கூறியிருக்கிறார். அதே நிலைப்பாட்டில் தான் அவர் இருக்கிறார் என்பதை சுமந்திரனின் கருத்து வெளிப்படுத்தியிருக்கிறது.
இரா. சம்பந்தன் போன்று, திருகோணமலை மக்கள் சிந்தித்தனரா என்று தெரியவில்லை. அவர்கள், தள்ளாத வயதிலுள்ள அவர் தோல்வியுடன் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஏன் நினைந்திருக்க கூடாது?
நீண்டகாலம் தங்களின் பிரதிநிதியாக- தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருந்து விட்ட அவர் தோற்றுப் போய் அரசியலில் இருந்து ஒதுங்கி விடக் கூடாது என்று கூட மக்கள் நினைந்திருக்கலாம்.
அவ்வாறான நிலையில் அவர்கள் வாக்களித்திருந்தால், இரா.சம்பந்தன் தொடர்ந்து பதவியில் இருப்பது சரியானதல்ல.
அதேவேளை, இரா.சம்பந்தனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்க சில தரப்புகள் முயற்சி செய்யும் நிலையில், அவர் முதுமையைக் காட்டி பதவி விலகுவதும் சரியான அணுகுமுறையாக இருக்குமா என்ற கேள்வி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமாயின், அதற்குப் மிகப் பொருத்தமான ஒரு வேட்பாளரையும் தயார்படுத்த வேண்டும்.
எல்லோரும் சேர்ந்து அந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில்லை. தமிழரின் வாக்குகள் சிதைந்து போகாத வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையேல், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாக மாறி விடும்.
அபிலாஷைகள் விடயத்தில் தமிழர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டு விடும்.
-கபில்-