யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப்போன சம்பவமும் இன்று (05) பதிவாகியுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே நகைகள் திருட்டுப் போயுள்ளன.

இன்று அதிகாலை 3 மணியளவில் சமையல் வேலைகளுக்காக எழுந்த வீட்டார், சார்ஜ் போடுவதற்கு கையடக்கத் தொலைபேசியை தேடியபோது கைப்பேசி இருக்கவில்லை. அத்தோடு, வீட்டிலுள்ள அலுமாரியும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பின்னர், நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்த்தபோது அங்கிருந்த நகைகளும் திருட்டுப் போயுள்ளதை கண்டு வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த குடும்பத்தினருடன் தொடர்புடையவர் அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ ஒருவர் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதன் அடிப்படையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply