இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு நடைபெறவுள்ளது.
அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநாட்டுக்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே, கட்சியின் அரசியல் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி மாநாட்டுக்கான திகதியை இறுதி செய்தல் விடயம் மட்டுமே கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், கட்சியின் புதிய யாப்பு தொடர்பிலும் அதில் திருத்தப்பட வேண்டிய சில விடயங்கள் தொடர்பிலும் உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
மேலும், சில உறுப்பினர்கள், சம்பந்தனை இராஜினாமச் செய்யுமாறு சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேநேரம், சுமந்திரன் தரப்பிலும், குறித்த விடயம் சம்பந்தமாக கேள்விகள் எழுப்படுகின்ற போது அதற்கான தக்கபதில்களை வழங்குவதற்கான தயார் நிலைமைகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
குறிப்பாக, ஏற்கனவே கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக, சம்பந்தனிடத்தில் பதவி விலகும் விடயத்தினை பக்குவமாக பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி சுமந்திரன் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.