சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக புதுமையான முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் டைம்டு அவுட் எனும் முறையில் விக்கெட் பறிகொடுத்தார்.

ஏஞ்சலோ மேத்யூசை தொடக்க போட்டிகளில் களமிறக்காததால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு ரசிகர்களே விமர்சித்து வந்த நிலையில் புதுமையான முறையில் அவர் அவுட்டாகியுள்ளார். இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட்

உலகக்கோப்பையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை அணி முதல் பேட்டிங் ஆடி வருகிறது.

நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரம அவுட்டானதும் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளே வந்தார். ஆனால், குறிப்பிட்ட 2 நிமிடங்களுக்குள் அவர் பேட்டிங் செய்ய தயாராகாததால் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

ஐ.சி.சி. விதிகள் கூறுவது என்ன?

ஐசிசி விதிகளின்படி, கிரீஸில் இருக்கும் வீரர் அவுட் ஆனதும், அவருக்குப் பதிலாக வரும் வீரர் அதிகபட்சமாக மூன்று நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், நடப்பு உலகக்கோப்பையை பொருத்தவரை அந்த கால அவகாசம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த 2 நிமிடங்களுக்குள்ளாக களத்திற்குள் வந்துவிட்டாலும் ஹெல்மெட்டில் உள்ள பட்டைகள் (ஸ்டிராப்ஸ்) சரிவர வேலை செய்யாததால் அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை.

இதையடுத்து, வங்கதேச அணி அவுட் கேட்டு முறையிட்டதால் ஐ.சி.சி. விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

ஹெல்மெட்டில் உள்ள பிரச்னை குறித்தும், அதனால்தான் தன்னால் சரியான நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராக முடியவில்லை என்றும் கூறி, முறையீட்டை திரும்பப் பெறுமாறு வங்கதேச அணி கேப்டன் ஷகிப்பிடம் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசினார். ஆனால், அவர் தனது அப்பீலை திரும்பப் பெற முன்வரவில்லை.

இதனால் விரக்தியடைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் வேறு வழியின்றி பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.

ஆண், பெண் இரு பாலரிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்று எந்தவொரு வீரரும் இதுவரை அவுட் ஆனதே இல்லை. முதல் முறையாக அதுவும் மிகவும் முக்கியமான உலகக்கோப்பையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகியுள்ளார்.

பந்துவீச்சு முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால், அவரை அவுட்டாக்கும் மன்கட் முறையைப் போலேவே இந்த டைம்டு அவுட் முறையும் கிரிக்கெட் விளையாட்டின் உத்வேகத்திற்கு எதிரானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஐ.சி.சி. இணையதளத்தில் விளக்கம்

ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டான விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் விளக்கம் அளித்துள்ளது. ஐ.சி.சி. இணையதளத்தில் பின்வரும் செய்தி பகிரப்பட்டுள்ளது.

“சதீர சமரவிக்ரமவின் விக்கெட் வீழ்ந்த போது, மெத்யூஸ் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வித்தியாசமான சூழல் அப்போது எழுந்தது. அவர் முதல் ஒரு பந்தை எதிர்கொள்ளும் முன்பாகவே பின்வாங்க வேண்டியிருந்தது.

இலங்கையின் மூத்த ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ், தனது ஹெல்மெட்டில் இருந்த சிக்கலைத் தீர்க்க நேரம் எடுத்த போது வங்கதேசம் அவுட் கேட்டு முறையிட்டதால் குழப்பமடைந்தார்.

இந்த சம்பவம் இலங்கை இன்னிங்ஸின் 25வது ஓவரில் நடந்தேறியது.

மேத்யூஸ் உள்ளே நடக்க நேரம் எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் ஹெல்மெட்டில் இருந்த சிக்கலை தீர்க்கவும் நேரமானது. அப்போது ஷாகிப் அல் ஹசன் உள்ளிட்ட வங்கதேச அணி “டைம்டு அவுட்” வெளியேற்றத்திற்கு அப்பீல் செய்தது. அதனை நடுவர்கள் ஏற்றுக் கொண்டது மேத்யூஸை திகைக்க வைத்தது.

அதன் பிறகு ஏஞ்சலோ மேத்யூஸ், வங்கதேச கேப்டன் ஷாகிப் மற்றும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. ஆனால், ஷாகிப் தனது அப்பீலை திரும்பப் பெற மறுத்துவிட்டார், இதனால், மேத்யூஸ் தனது உடைந்த ஹெல்மெட் பட்டையுடன் பெவிலியன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட்

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் “டைம்டு அவுட்” தொடர்பான விளையாட்டு விதிகமுறைகள் பின்வருமாறு:

40.1.1 ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்டரின் ஓய்வுக்குப் பிறகு, உள்ளே வரும் பேட்டர் இரண்டே நிமிடங்களுக்குள் பந்தைப் பெறத் தயாராக இருக்க வேண்டும் அல்லது மறுமுனையில் உள்ள பேட்டர் அந்த பந்தை 2 நிமிடங்களுக்குள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே வரும் பேட்டர் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக கருதப்படுவார்.

மேத்யூஸ் தனது முதல் பந்தை எதிர்கொள்ள மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதால், வங்கதேச அணி முறையீட்டைத் தொடர்ந்து பெவிலியனுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில், ஆடவர் அல்லது பெண்கள், ஒரு பேட்டர் “டைம்டு அவுட்” விதிப்படி வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை.”

இவ்வாறு ஐ.சி.சி. இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply