கடலில் குளிக்கும்போதும், கடற்கரையில் வெறுங்காலுடன் நடக்கும்போதும் கவனமாக இருங்கள் !

பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கடற்பகுதிகளில் ‘கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்’ (Gonmaha-Stone Fish) எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட கல் மீன் இனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சித்த மருத்துவத் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் ஜானக ரூபன் தெரிவித்தார்.

குறித்த மீன் ஒரு பாறை மீன் ஆகும். இவைகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அவை மனிதர்களையோ அல்லது கடலில் உள்ள எந்த உயிரினத்தையோ தாக்குவதில்லை என தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ் மீன்களை துரதிர்ஷ்டவசமாக தொட்டதாலோ அல்லது மிதித்ததாலோ பலர் அண்மையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கல் மீன் பரவலாக நீரில் பாறைகள் உள்ள இடம், ஆழமற்ற கடல் பகுதி, சிறிய குளங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

இவற்றின் மெதுவான இயக்கத்தின் காரணமாக கடல் தரையில் அடி மூலக்கூறின் மத்தியில் நன்கு மறைக்கப்பட்டு சில சமயங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.

கல் மீன் தற்போது இலங்கையின் பல பகுதிகளில் கடலில் உலாவி வருகிறது. இந்த மீன் இனத்தை அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளில் காணலாம்.

இந்த மீன்கள் இனப்பெருக்கத்திற்காக வழமை போல் கரைக்கு அருகில் வருகின்றன.

இந்த மீன்களுக்கு நீச்சல் திறன் குறைவு. இது மிகவும் மெதுவாக நகரும்.

மீன்களின் முதுகில் பல முட்கள் இருப்பதால், அவற்றை மிதிப்பதன் மூலம் அதன் விஷம் கொடூரமாக தாக்கக் கூடியதாகும். கடுமையான வலியை ஏற்படுத்தும்.

எனவே, கடலில் குளிக்கும் போதும், கடற்கரையில் வெறுங்காலுடன் நடக்கும்போதும் அவதானமாக இருக்குமாறும், குளிக்கும் போது செருப்புகளை அணிந்து கொள்ளுமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மீனினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக கடலில் இருந்து வெளியேறி உடனடியாக சிகிச்சைக்காக வைத்திசாலைக்குச் செல்ல வேண்டும்.

பொதுமக்கள் இந்த மீன்களைக் கையாளக்கூடாது என்றும், கடலில் குளிக்கவோ, கடற்கரையோரம் வெறுங்காலுடன் நடமாடவோ வேண்டாம் என்றும் மருத்துவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply