“குடியரசு வாழ்க, முஸ்தபா கெமால் பாஷா வாழ்க!”
அக்டோபர் 29, 1923 அன்று, புதிய அரசாங்கம் உருவான பிறகு, துருக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த முழக்கங்களை எழுப்பினர். அதே நாளில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் முதல் அதிபராக கெமல் அட்டதுர்க் பதவியேற்றார்.
ஆனால் அந்த நாளில் நாட்டில் இருந்த ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கருதமுடியாது. உலகின் மிகப்பெரும் வல்லரசுகளில் ஒன்றான ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்காக சிலர் அன்று வருந்தினார்கள்.
ஓட்டோமான் பேரரசு வீழ்ச்சியடைந்து நவீன துருக்கியின் எழுச்சி ஏற்பட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஆகின்றன. துருக்கியை 600 ஆண்டுகள் ஆண்ட ஒட்டோமான் சுல்தானகத்துக்கு முடிவுரை எழுதப்பட்டு நவம்பர் 1922 இல் கிராண்ட் நேஷனல் அசெம்பிளியால் சுல்தான் பதவி ஒழிக்கப்பட்டது.
இந்த வம்சம் 1299 இல் தொடங்கி அதன் அடித்தளத்திலிருந்து அதன் வீழ்ச்சி வரை துருக்கியை ஆட்சி செய்தது. வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் உலகின் பல சக்தி வாய்ந்த நாடுகளுக்கு சவால் விட்ட ஓட்டோமான் அரசின் வீழ்ச்சி துருக்கியர்களுக்கு ஒரு சோகமான நிலையை ஏற்படுத்தியது.
ஓட்டோமான் பேரரசு மூன்று கண்டங்களாக விரிவடைந்தது. இன்றைய பல்கேரியா, எகிப்து, கிரீஸ், ஹங்கேரி, ஜோர்டான், லெபனான், இஸ்ரேல், பாலத்தீனம், மாசிடோனியா, ருமேனியா, சிரியா, சௌதி அரேபியாவின் சில கடற்கரை பகுதிகள், வட ஆப்பிரிக்கா ஆகியவை ஒரு காலத்தில் ஓட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன. அல்பேனியா, சைப்ரஸ், இராக், செர்பியா, கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் பகுதிகள் அல்லது முழுப் பகுதிகளும் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன.
ஆனால் இந்த நாடுகளில் ஓட்டோமான் சுல்தானகத்தின் காலனித்துவ மரபு குறித்து பல சர்ச்சைகள் உள்ளன. அதை மறந்துவிடுவது நல்லது என்று அவர்கள் நினைத்தார்கள்.
இருப்பினும், துருக்கிய மக்களுக்கு உஸ்மானியா சுல்தானகத்தின் மீது ஒரு ஏக்கம் எப்போதும் உள்ளது. அவர்களுக்கு மறக்கமுடியாத, பொன்னான நாட்களின் நினைவுகள் மனதில் நிரம்பி உள்ளன. அவர்கள் அதைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள்.
ஓட்டோமான் சுல்தானகத்தை நிறுவிய முதலாம் உஸ்மான் , தற்போது துருக்கி என்று அழைக்கப்படும் அனடோலியாவில் தனது பேரரசின் அடித்தளத்தை அமைத்தார்.
காலப்போக்கில், அவரது பேரரசின் பரப்பளவு 50 லட்சம் சதுர கிலோமீட்டரை எட்டியது. ஒட்டோமான் என்ற சொல் உஸ்மான் என்ற பெயரில் இருந்து வந்தது. சுல்தான் உஸ்மானின் வழித்தோன்றல்கள் இந்த சக்திவாய்ந்த நாட்டை ஆறு நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டோமான் பேரரசு வீரர்கள்.
கான்ஸ்டான்டினோபிளின் வீழ்ச்சி
பாரிஸ் டிடெரோட் பல்கலைக்கழகத்தில் ஒட்டோமான் மற்றும் மத்திய கிழக்கு வரலாற்றுத் துறையின் பேராசிரியர் ஆலிவியர் பூக், சுல்தான் உஸ்மானால் நிறுவப்பட்ட சுல்தானகம் ஒரு துருக்கிய அரசாக மட்டுமே விளங்கியது என்று விளக்குகிறார்.
அவரது பேரரசின் விரிவாக்கம் 1453 இல் கான்ஸ்டான்டினோப்பிளின் வீழ்ச்சியுடன் தொடங்கியது.
சுல்தான் இரண்டாம் மெஹ்மத் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து கான்ஸ்டான்டினோபிளில் நுழைந்தவுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த பைசன்டைன் சுல்தானக ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதற்குப் பிறகு அவர் ஒட்டோமான் பேரரசின் பிற பகுதிகளிலிருந்து மக்களை அழைத்து வந்து குடியேறினார். சுல்தான் இரண்டாம் மெஹ்மத் கான்ஸ்டான்டினோபிளின் பெயரை இஸ்தான்புல் என்று மாற்றினார், அதாவது ‘இஸ்லாத்தின் நகரம்’ என்பது இந்நகரின் பெயராக மாறியது.
இதன் மூலம், இந்த நகரம் ஒட்டோமான் பேரரசின் அரசியல் மற்றும் ராணுவ தலைநகரமாக மாறியது மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு இடையில் அதன் சிறப்பு புவியியல் இருப்பிடத்தின் காரணமாக உலக வர்த்தகத்தின் முக்கிய மையமாகவும் மாறியது.
ஓட்டோமான் பேரரசின் பொருளாதார பலம் சுல்தான் இரண்டாம் மெஹ்மத்தின் கொள்கைகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. அவர் தனது சுல்தானகத்தில் வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களை பெரிதும் ஊக்குவித்தார் என்று கூறப்படுகிறது.
அவர் வணிகர்களை இஸ்தான்புல்லில் குடியேறவும், அங்கிருந்து தங்கள் வணிகத்தை நடத்தவும் ஊக்குவித்தார். அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் இந்தக் கொள்கையைத் தொடர்ந்தனர்.
சுல்தான் ஒஸ்மான் ஒட்டோமான் பேரரசின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.
உஸ்மானியப் பேரரசின் அனைத்து அதிகாரங்களும் ஒருவரிடம் குவிந்திருந்தது என்பது ஒருபுறம் இருக்க, அதன் வெற்றிக்கு வேறு காரணங்களும் இருந்தன.
பேராசிரியர் ஆலிவியெர் பொக்கேவின் கூற்றுப்படி, ஓட்டோமான் பேரரசில் ராணுவ மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
பேராசிரியர் ஆலிவியெர் பொக்கே கூறுகிறார், “ராணுவ விரிவாக்கத்துக்காக வளங்களைச் சுரண்டும ஒரு நிலையே அங்கு காணப்பட்டது. இந்த ராணுவ விரிவாக்கத்தின் நோக்கம் புதிய வளங்களைப் பெறுவதாகும். இதனால் திட்டமிட்ட முறையில் பொதுமக்களுக்கு அதிக வரிகளை விதிக்க முடியும்.”
பேராசிரியர் ஆலிவியெர் பொக்கே, ஒட்டோமான் பேரரசின் வெற்றிக்கான பெருமை அதன் ராணுவ சக்தியைத் தான் சேரும் என்றார். ஓட்டோமான் ராணுவம் நன்கு பயிற்சி பெற்றதாகவும், விரைவான தாக்குதல்களை நடத்தும் நிபுணத்துவம் பெற்றதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். சுல்தானின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஜானிசார் எலைட் படைகளும் இதில் அடங்கும். சாதாரணமாக அமைதி நிலவும் காலத்தில் வரி வசூலிக்க தனி ராணுவம் இருந்தது.
ஒட்டோமான் பேரரசின் அதிகாரத்துவம் வளங்களின் வினியோகத்திற்கு பொறுப்பானது என்பதுடன், இஸ்லாத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்தது.
தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஆலிவியெர் பொக்கே, “இது ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமூகம். எழுத்தளவில் கூறினால் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் இல்லை. ஆனால் உண்மையில் அவ்வாறு மதமாற்றம் இருந்தது. சில பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக, சட்டப்படி இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யும் கொள்கையும் அமலில் இருந்தது,” என்றார்.
ஓட்டோமான் பேரரசு ஒரு தனி நடைமுறைக்கு பெயர் பெற்றது. அவர்கள் மற்ற கலாச்சாரங்களிலிருந்து நல்ல விஷயங்களைத் தத்தெடுத்து, அவற்றைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர்.
மேற்கத்திய நாடுகளில் சுலேமான் ஆடம்பரமானவர் என அழைக்கப்பட்டார்.
ஒட்டோமான் பேரரசின் மிகவும் பிரபலமான சுல்தான்களில் ‘மகத்துவம் மிக்கவர்’ எனப்பட்டம் பெற்ற சுலைமான் (சுலைமான் தி மாக்னிஃபிசென்ட்) ஒருவர் இருந்தார். 1520 முதல் 1566 வரை இந்த மகத்துவம் மிக்க சுலைமான் (சுலைமான் தி மாக்னிஃபிசென்ட்) துருக்கியை ஆட்சி செய்தார்.
இந்த சுலைமானின் ஆட்சியின் போது, ஒட்டோமான் பேரரசின் எல்லைகள் பால்கன், ஹங்கேரி மற்றும் வியன்னா வரை விரிவாக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில், சுலைமான் ‘ஆடம்பரமானவர்’ என அழைக்கப்பட்ட நிலையில், கிழக்கு பகுதியில் அவர் ‘சட்டபடி செயல்படக்கூடியவர்’ என்று அழைக்கப்பட்டார்.
இதேபோல், ‘கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கான சுல்தான்’ என்ற பட்டமும் அவருக்கு இருந்தது. ஆனால், இது குறித்து சர்ச்சைகளும் உள்ளன.
‘மகத்துவம் மிக்க’ சுலைமான் என்ற இந்தப் பட்டம் ரோமின் அதிகாரத்திற்கு ஒரு சவாலாக பார்க்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், சுலைமானின் ஆட்சிக்குப் பிறகும், ஒட்டோமான் பேரரசு தொடர்ந்து விரிவடைந்தது.
ஆனால் மேற்கத்திய நாடுகளில் சுலைமானின் ஆட்சிக்காலம் ஒட்டோமான் பேரரசின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பல வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுல்தான் மெஹ்மத் II, 1837 இல் கான்ஸ்டான்டினோப்பிளின் பேய்சிட் மசூதியை விட்டு வெளியேறினார்.
‘கிழக்கு மற்றும் மேற்கின் சுல்தான்’ என்ற பட்டம் பெற்றவருக்குப் பின், அவருக்கு இணையான ஒருவரை ஓட்டோமான் பேரரசுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
“உஸ்மானியப் பேரரசின் சுல்தான்களின் பார்வையில், ஒட்டோமான் பேரரசின் வேறு எந்த சுல்தானகத்தின் சுல்தான்களும் அவருக்கு இணையாக இருக்க முடியாது” என்று பேராசிரியர் ஆலிவியெர் பொக்கே கூறுகிறார்.
ஒரு இறையாண்மை மிக்க பேரரசு என்ற கருத்து பைசண்டைன் பேரரசு மற்றும் இஸ்லாம் மதத்தின் மரபுகளிலிருந்து வந்தது என்று அவர் கூறுகிறார்.
இது குறித்துப் பேசிய அவர், “மனிதர்கள் வாழும் பூமியின் ஒவ்வொரு பகுதியையும் அவர்கள் கைப்பற்ற விரும்பினர். அவர்கள் தார் அல்-இஸ்லாமின் எல்லைக்கு வெளியே உள்ள ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்ற விரும்பினர்.”
ஓட்டோமான் பேரரசு பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்ததற்கு இதுவே காரணம். அவர்கள் அதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவான கடற்படையை வைத்திருந்தனர். அது காலப்போக்கில் மேலும் வலுவடைந்தது.
பேராசிரியர் ஆலிவியெர் பொக்கே தொடர்ந்து பேசிய போது, “ராணுவ நடவடிக்கைகள் கடினமாகவோ அல்லது அதை நிறுத்த கடினமாகவோ இருந்தபோது ஒட்டோமான் பேரரசு பலவீனமடையத் தொடங்கியது,” என்றார்.
லெபாண்டோ போரில் ஒட்டோமான் பேரரசு பெரும் பின்னடைவை சந்தித்தது.
1571 இல் லெபாண்டோ போரில் தோல்வியை எதிர்கொண்டதுதான் ஓட்டோமான் பேரரசின் முதல் தோல்வியாகும்.
இந்தப் போரில் ஓட்டோமான் பேரரசுக்குப் போட்டியாக ‘ஹோலி லீக்’ இருந்தது. இது கத்தோலிக்க நாடுகளை உள்ளடக்கிய ஒரு இராணுவ கூட்டணியாகும். ஸ்பெயின் மன்னராட்சியின் கீழ் அந்த ராணுவக் கூட்டணி செயல்பட்டது.
இந்த கூட்டணியில் இன்றைய இத்தாலி உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.
மனிதகுல வரலாற்றில் இது இரத்தக்களரி மிக்க போர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் போருடன், மத்தியதரைக் கடலில் ஒட்டோமான் பேரரசின் இராணுவ விரிவாக்கம் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம், ஒட்டோமான் பேரரசின் அதிர்ஷ்டம் அதற்கு சாதகமாக நின்றது. பின்னர் அதன் வீழ்ச்சி தொடங்கியது. இந்த வீழ்ச்சி பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இஸ்தான்புல்லில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரமின்மையுடன் ஒட்டோமான் பேரரசின் அடித்தளம் வெற்றுத்தனமாக மாறியது.
1912-13 முதல் பால்கன் போரில், ஒட்டோமான் பேரரசு பால்கன் லீக்கை எதிர்கொண்டது. பல்கேரியா, கிரீஸ், மாண்டினீக்ரோ மற்றும் செர்பியாவின் இந்த கூட்டணி ரஷ்யாவின் உதவியுடன் ஒட்டோமான் சுல்தானகத்தை அதன் நிலத்திலிருந்து வெளியேற்ற விரும்பியது.
ராணுவ ரீதியாக பலவீனமான ஒட்டோமான் பேரரசு இந்த போரில் தோல்வியைத் தழுவியது. மேலும், ஐரோப்பாவில் உள்ள அனைத்து பிரதேசங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டது. ஆனால் கான்ஸ்டான்டினோபிள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே அதன் கைகளில் இருந்தன.
இந்த தோல்வியை ஓட்டோமான் பேரரசின் அவமானகரமான தோல்வியாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
கான்ஸ்டான்டினோப்பிளுக்குள் நுழைந்த காட்சி.
மீதமுள்ள ஓட்டோமான் பகுதிகள் மோசமான பொருளாதார வீழ்ச்சியில் தத்தளித்தன. இதன் காரணமாக, வர்த்தக வழிகளில் மாற்றங்கள், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வர்த்தக போட்டி அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்தன.
அதே நேரத்தில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சக்திகளுடனும் அவற்றின் எல்லையை விரிவுபடுத்தும் லட்சியங்களுடனும் அவர்கள் போராட வேண்டியிருந்தது.
இது தவிர, பேரரசில் பல்வேறு மதப் பிரிவுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. ஆர்மேனியர்கள், குர்துகள் மற்றும் கிரேக்கர்கள் துருக்கியர்களின் ஆதிக்கத்தைப் பற்றி புகார் செய்யத் தொடங்கினர்.
இந்த பிரச்னைகளின் பின்னணியில், இஸ்தான்புல், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் சக்திவாய்ந்த கூட்டணியுடன் போரைத் தொடங்கியது.
மேற்கத்திய கூட்டணி முதல் உலகப் போரில் (1914-1918) வெற்றி பெற்றது. இதில் ஒட்டோமான் பேரரசின் சிதைவு தொடங்கியது.
இந்தப் போருக்குப் பிறகு, சிரியாவுக்கான பிரெஞ்சு ஆணையம் நடைமுறைக்கு வந்தது. மேலும் இராக் மற்றும் பாலத்தீனத்திற்கான பிரிட்டிஷ் ஆணையமும் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆணையங்களின் மூலம், இரண்டு ஐரோப்பிய சக்திகள் இந்தப் பகுதியை மறைமுகமாக ஆளத் தொடங்கின. இருப்பினும், இவை அனைத்தும் லீக் ஆஃப் நேஷன்ஸின் ஒப்புதலுடன் நடந்தன.
1917 ஆம் ஆண்டில் பிரிட்டனும் பிரான்சும் அந்த பகுதியை தங்களுக்குள் பிரித்துக்கொண்டதை ஒட்டோமான் நிர்வாகம் அறிந்திருக்கவில்லை.
அதே ஆண்டில் பால்ஃபோர் பிரகடனமும் கையெழுத்தானது. இந்த பிரகடனத்தில் பாலத்தீன பகுதியில் யூதர்களுக்கு தாயகம் உறுதியளிக்கப்பட்டது.
முஸ்தபா கெமால் அட்டதுர்க் துருக்கியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஒட்டோமான் பேரரசு அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 1922 அன்று முடிவுக்கு வந்தது. சுல்தான் பதவி அன்றே ஒழிக்கப்பட்டது.
ஒரு வருடம் கழித்து துருக்கிய குடியரசு நிறுவப்பட்டது.
முஸ்தபா கெமால் அதாதுர்க் குடியரசை உருவாக்க புரட்சிக்கு தலைமை தாங்கி அதிபரானார். அவர் நவீன துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
நான்காம் மெஹ்மத் ஓட்டோமான் பேரரசின் கடைசி சுல்தானானார். புரட்சியாளர்களிடமிருந்து தப்பிக்க, பிரிட்டிஷ் காவலர்களால் இஸ்தான்புல்லில் இருந்து அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மெஹ்மத் இத்தாலியை அடைந்து, கடலோர சான் ரெமோ ரிசார்ட்டில் வசிக்கத் தொடங்கினார். முரண்பாடாக, பிரிட்டனும் பிரான்சும் தங்கள் பேரரசைப் பிரிக்க பேச்சுவார்த்தை நடத்திய அதே இடமும் இதுதான்.
அங்கேயே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தார். அந்த காலகட்டத்தில் சுல்தான் மிகவும் ஏழ்மையாகிவிட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது சவப்பெட்டி இத்தாலிய அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டது.
சுல்தான் உள்ளூர் வியாபாரிகளிடம் வாங்கிய கடனை அவர் அடக்கம் செய்வதற்கு முன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
மறுபுறம், ஒரு புதிய குடியரசு ஏகாதிபத்திய லட்சியங்களை விட்டுச் சென்றது. அது கெமலிசம் என்ற, அட்டதுர்க் செயல்படுத்திய ஒரு சித்தாந்தம் ஆகும்.
துருக்கியின் மதச்சார்பின்மை ஓட்டோமான் பேரரசின் பரிசு என்று பல வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
எளிய பின்னணியைக் கொண்ட ரசீப் தய்யீப் எர்துவான், கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் அசைக்க முடியாத தலைவராகத் திகழ்கிறார்.
மறுபுறம், ஒட்டோமான் பேரரசின் கலிஃபாட், மார்ச் 3, 1924 இல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை, துருக்கியில் சில காலம் குறைந்த அதிகாரங்களுடன் ஒரு ஆட்சிமுறையாக இருந்தது.
இன்று, ஒட்டோமான் பேரரசு முடிவுக்கு வந்ததற்கு முதல் உலகப் போரைக் காரணம் என்று குற்றம் சாட்டுவது மேற்குலகின் தவறு என்று விமர்சித்து எதிர்க்கப்படுகிறது.
“துருக்கிய ஆட்சி மற்றும் தற்போதைய அதிபர் (ரசீப் தய்யீப் எர்துவான்) ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்க என பல ஆண்டுகளாக மேற்கத்திய பொறுப்பு என்ற கருத்தை நிறுவியுள்ளார்” என்று வரலாற்றாசிரியர் ஆலிவியெர் பொக்கே கூறுகிறார்.
சமீபத்திய ஆண்டுகளில், ஒரு புதிய-உஸ்மானிய சகாப்தத்தை புதுப்பிக்கும் உணர்வு துருக்கியில் வேகம் பெற்றுள்ளது.
ஒட்டோமான் கடந்த காலத்திற்கான மரியாதை மற்றும் அந்தப் பிராந்தியத்தின் மீது ஆட்சியின் மேலாதிக்கம் ஆகியவற்றை ஒரு பரந்த அர்த்தத்தில் பார்த்தால், ஒரு இஸ்லாமிய மற்றும் ஏகாதிபத்திய அரசியல் சித்தாந்தமாகும்.
பல தசாப்தங்களாக, நவீன துருக்கியத் தலைவர்கள் தங்கள் ஏகாதிபத்திய மரபு மற்றும் இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள முயன்றுள்ளனர்.
ஆனால் எர்துவான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒட்டோமான் பேரரசின் கடந்த காலத்தின் மீதும், அதன் இஸ்லாமிய மரபுகள் மீதும் தனக்கு இருந்த விருப்பத்தை எப்போதும் மறைக்கவில்லை.
கெமல் அட்டதுர்க்கால் புகழ்பெற்ற அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட ஹாகியா சோபியா, எர்துவானால் மசூதியாக மாற்றப்பட்டது. இருப்பினும் அவரது நடவடிக்கை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
இதேபோல், எர்துவான் தொடர்ந்து செலிம் I மீதான தனது விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். ஒட்டோமான் பேரரசை வரலாற்று ரீதியாக விரிவுபடுத்திய பெருமை சுல்தான் செலிமுக்குச் செல்கிறது.
2017 இல் அரசியலமைப்பு வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, எர்துவான் தனது முதல் பொது பேரணியை முன்னாள் ஒட்டோமான் சுல்தானின் கல்லறையில் நடத்தினார். இந்த அரசியலமைப்பு வாக்கெடுப்பு அவர்களின் அதிகாரங்களை கணிசமாக அதிகரித்தது.
சமீபத்தில், அவர் இஸ்தான்புல் ஜலசந்தியின் மீதுள்ள பாலங்களில் ஒன்றை, போஸ்பரஸ் என மறுபெயரிட முடிவு செய்தார்.
“உஸ்மானியப் பேரரசு மறைந்துவிட்டது. ஆனால் ஒரு புதிய-உஸ்மானியம் உருவாகியுள்ளது,” என்று ஆலிவியெர் கூறுகிறார். “20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்ததை விட இன்று ஒட்டோமான் பேரரசு பற்றிய குறிப்புகள் அதிகம்.”
பிபிசி தமிழ்