கொழும்பு: சீனாவுடன் போட்டியிடும் வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு ஆகும் இது.
பொதுவாக உலகின் பல நாடுகளுக்கு .. முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாக கடன் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளது. பெல்ட் அண்ட் ரோட் திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்யும். இதற்கு கடனாக பல மில்லியன்களை சீனா அந்த நாடுகளுக்கு கொடுக்கும்.
இந்த நிலையில் அந்த நாடுகள் கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில், அந்த நாடுகளின் பல்வேறு வளங்களை சீனா கட்டுப்படுத்தும். துறைமுகம் போன்ற இடங்களை சீனா கையகப்படுத்தும்.
இலங்கை சீனா: சீனாவின் இந்த செயலை debt trap policy என்பார்கள். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி, அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி தற்போது பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. சீனாவில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்த கடனும் முக்கிய காரணம் ஆகும்.
1948க்கு பின்பாக இலங்கை மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதாவது தங்கள் கடல் எல்லையில் இறக்குமதி தயாராக இருக்கும் கச்சா எண்ணெய்யை வாங்க கூட இலங்கையிடம் டாலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடுமையாக கடன் கொடுத்து அந்த நாட்டை கட்டுப்படுத்தி வந்த சீனா தற்போது கடனை கேட்டு கழுத்தை நெருக்கி உள்ளது. சீனாவிடம் இலங்கை வாங்கிய மொத்த கடன் 8 பில்லியன் டாலர்.
இலங்கையின் மொத்த கடனே 45 பில்லியன்தான். இதில் ஆறில் ஒரு பங்கு சீனாவிடம் வாங்கப்பட்ட கடன். இதெல்லாம் டாலரில் வாங்கப்பட்ட கடன். இதனால் டாலரில் இலங்கை வட்டியை செலுத்தி வந்தது. இதில் டாலராக மட்டும் 6 பில்லியன் டாலரை சீனாவிற்கு இலங்கை கொடுக்க வேண்டும். அதோடு தங்க நகை பத்திரமாக 1 பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இலங்கையின் தீராத பொருளாதார நெருக்கடிக்கு சீனா முக்கிய காரணம் ஆகும்.
இதன் காரணமாகவே சீனாவின் உளவு கப்பல்களை அனுமதிப்பது, சீனாவின் துறைமுகத்தை அனுமதிப்பது என்று இலங்கை சீனாவிடம் இறங்கி சென்று கொண்டு இருக்கிறது.
உள்ளே வரும் அமெரிக்கா: சீனாவுடன் போட்டியிடும் வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு ஆகும் இது.
கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கைக்கு இது மகிழ்ச்சியையும், சீனாவிற்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. சீனாவுடன் போட்டியிடும் வகையில், சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் முடக்கும் வகையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகம் 2021 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, மேலும் இந்த புதிய முனையம் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு பெரிய பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும். பசிபிக் கடலில், சீன கடலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா தற்போது இந்திய பெருங்கடலில் காலடி எடுத்து வைத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்திற்கு இது முற்றுப்புள்ளியாக அமையும் என்கிறார்கள்.
இந்தியா குஷி: இன்னொரு பக்கம் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைப்பது இந்தியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும். பாதுகாப்பு ரீதியாகவும், கடல் ரீதியாகவும், ஆசிய வளர்ச்சி ரீதியாகவும் இந்தியாவிற்கு இந்த முடிவு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.