உலகளவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட விளையாட்டுக்களில் கிரிக்கெட்டும் ஒன்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் பலர் கிரிக்கெட்டுக்காக உயிரை விடுமளவு தங்களுக்கு பிடித்த நாட்டுக்காகவும் தங்களுக்கு பிடித்தமான வீரருக்காகவும் தீவிர ரசிகர்களாக இருப்பர். இதனால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது எதிரணி ரசிகர்களோடு சண்டையிடவும் கொள்வர். சில வேளைகளில் இந்த சண்டைகள் கைகலப்பாக மாறுவதுமுண்டு.
அதேபோல தங்களது நாட்டு வீரர்கள் போட்டிகளில் தோல்வியுற்றால் அவர்களது வீடுகளை உடைப்பது, அவர்களை தாக்க முயல்வது போன்ற பல விடயங்களில் சில நாடுகளில் ரசிகர்கள் ஈடுபடுவது வழமை.
ரசிகர்கள் இப்படி என்றால் சில வீரர்கள் விளையாட்டு என்பதனை தாண்டி மிக ஆக்ரோஷமான முறையில் மைதானங்களில் நடந்துகொள்வர். எதிரணியினரை சீண்டுவது, தகாத வார்த்தைகளை பேசுவது, தாக்குவது, சண்டையிடுவது என நடந்துகொள்வர்.
இவை தவிர்த்து சில கிரிக்கெட் வீரர்கள் மைதானங்களில் தங்களது நாட்டு சக வீரர்களிடம் மட்டுமன்றி ஏனைய நாட்டு வீரர்களுடனும் நட்பு பாராட்டுவர்.
மைதானங்களில் விளையாடும்போது எதிரணியின் வீரர் யாரேனும் எதிர்பாராத உபாதையில் சிக்கினால் உதவி செய்வர். சிலர் எதிரணி வீரர்களின் காலணி பட்டிகளை கூட கட்டிவிடுவர். குறிப்பாக, துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் ஈடுபடும்போது அவரது காலணி பட்டி கழன்றுவிட்டால் கள தடுப்பில் ஈடுபடும் எதிரணி வீரர் அவரது காலணிப் பட்டிகளை சரிசெய்து கட்டிவிடுவதை பார்த்திருக்கின்றோம்.
அதேபோல எதிர்பாராத விதமாக இடம்பெறும் சில ஆட்டமிழப்புகளை கூட மனிதாபிமான ரீதியில் மீள பெற்றதனை பார்த்திருக்கின்றோம்.
இந்த மனிநேயத்துக்காகவே பல ரசிகர்கள் இனம், மதம் கடந்து பல கிரிக்கெட் வீரர்களை கொண்டாடுவர். ஓய்வு பெற்றாலும், அவர்களை மனதில் வைத்திருப்பர். உதாரணமாக குமார் சங்கக்கார, தோணி போன்ற வீரர்களை குறிப்பிடலாம்.
2011ஆம் ஆண்டு இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தின்போது இங்கிலாந்து வீரர் இயன்பெல் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆனார். ஆயினும், தோணி அந்த ஆட்டமிழப்பை கோராமல் இயன்பெல் மீண்டும் விளையாட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இயன்பெல்லும் மீண்டும் மைதானத்தில் துடுப்பெடுத்தாடினார்.
தோணியின் இந்த செயலுக்காக பின்னர் பத்தாண்டுகளில் சிறந்த ஊக்கம் மிகுந்த வீரர் எனும் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. அது போல தோணி தலைமையிலான இந்திய அணி எப்பொழுது வெற்றி பெற்றாலும், அதில் தனக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் ஒருபோதும் காட்டிக்கொள்ளமாட்டார்.
வெற்றி பெற்ற போட்டியில் சிறந்து விளங்கிய வீரரையே பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்புவார். அதேநேரம் அணி தோல்வியுற்றால் தோணியே நேராக சென்று அதன் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்.
இதேபோல 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கைக்கு இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் தோணி, யுவராஜ் ஆகியோர் களத்தில் நின்று வெற்றியை கட்டியணைத்து கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, களத்தடுப்பில் அவர்களுக்குப் பின்னால் நின்ற சங்ககார கோப்பையை தவறவிட்ட கவலையை மறந்து வெறுப்பின்றி இந்தியாவின் வெற்றியை தனது வெற்றி போல புன்னகைத்து மகிழ்வார்.
தோணி, யுவராஜ் கட்டிபிடித்துக்கொண்ட அந்த நேரம் அவர்களுக்கு பின்னால் முகத்தில் புன்னகையுடன் சங்ககார நடந்துவருவார். அந்த நேரத்தில் இருந்த சங்காவின் முகத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் மறந்துபோக மாட்டான்.
அதேபோல 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லாகூரில் வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுக்கு செல்ல யாரும் விரும்பவில்லை. அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை அணியினர்தான் மீண்டும் முதன் முதலாக பாகிஸ்தான் சென்று சர்வதேச போட்டிகளில் விளையாடினார்கள். அதன் பிறகு அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குமார் சங்கக்கார, தனது எம்.சி.சி. அணி வீரர்களை அழைத்துக்கொண்டு பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் உள்ளூர் கழகங்களுடன் ஆடினர். மீண்டும் அந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் இதனை செய்தார்.
சங்ககார பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் அப்போது தனது டுவிட்டரில்,
‘‘உண்மையான நட்பு சிக்கலான கால கட்டங்களிலேயே உணரப்படுகின்றது. நீங்கள் கிரிக்கெட்டில் மாத்திரமல்ல மனிதநேயத்திலும் செம்பியன்தான் என்பதை காட்டியுள்ளீர்கள். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானுக்கு வந்ததற்கு நன்றி. எங்கள் இதயங்களில் உங்களுக்கு சிறந்த இடம் உள்ளது” என பதிவிட்டிருந்தார்.
இப்படி நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் உலக கிரிக்கெட்டில் நடைபெறுவது வழமைதான். ஆனால், அதேபோல சில ஜீரணிக்க முடியாத விடயங்கள் நடைபெறுவதும் வழமை. சில விடயங்கள் ஒரு தரப்பினால் நியாயப்படுத்தப்படும்போது இன்னொரு தரப்பினால் அது மனிதநேயமற்ற செயலாக பார்க்கப்படுவது வழமை.
விளையாட்டு என்றாலும் அதில் சில மனிதநேய விடயங்கள் கடைப்பிடிக்கப்படுவது வழமைதான். ஆனால், இது அந்த வீரர்களின் பண்பை பொருத்தது.
தோணி இந்திய அணியின் தலைவராக இருந்த போது, ஆட்டம் இழந்து சென்ற இங்கிலாந்து வீரரை மீண்டும் ஆடுமாறு மைதானத்துக்கு அழைத்தது போல சில வேளை அவர் அழைக்காமல் விட்டிருந்தால், அது ஆட்டமிழப்பாகி இவரது அணிக்கு நன்மையாகியிருக்கும். ஆனால், தோணி வெற்றி என்பதனை விட மனிதநேயத்தை பார்த்தார். அதனால் அது இன்னும் பேசப்படுகின்றது.
ஆனால், எல்லா வீரர்களும் இப்படியல்ல. தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த முனையும் வீரர்கள் உள்ளனர். இதனை தவறு என்று நாம் கூறிவிட முடியாது. காரணம், அவர்கள் தங்களது வெற்றிக்காக விதிகளை பயன்படுத்தியிருப்பர்.
இவ்வாறு பங்களாதேஷ் அணி தற்போது நடைபெற்று வருகின்ற 2023 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் செய்த விடயம் பெரும் சர்ச்சையையும் பேசுபொருளையும் உருவாக்கிவிட்டுள்ளது. இப்போது அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
குறித்த போட்டியில் டைம் அவுட் என்ற முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் என்ற முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பெயரை இதன் மூலம் ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் இலங்கை அணி துடுப்பாடியபோது நான்காவது விக்கட்டான சதீர சமரவிக்ரமவின் விக்கெட் வீழ்த்தப்பட்டமையை அடுத்து, ஏஞ்சலோ மெத்யூஸ் 6ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கினார். ஆனால், ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பெடுத்து ஆடும் முன்னரே ஆட்டமிழந்த வீரராக அறிவிக்கப்பட்டார். உரிய நேரத்துக்குள் துடுப்பெடுத்து ஆடாத காரணத்தாலேயே அவர் இவ்வாறு ஆட்டமிழந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
அவர் ஒரு பந்தை எதிர்கொள்ள 3 நிமிடங்கள் தாமதமாகின. அதனால் அவர் துடுப்பெடுத்தாடாமலே ஆட்டமிழக்க நேரிட்டது. இது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் முதல் முறையாகும்.
மெத்யூஸ் துடுப்பெடுத்தாடுவதற்கு முன்னர் அவரது தலைக்கவசத்தில் கயிறு அறுந்துவிட, அந்த சிக்கலைத் தீர்க்க முயன்றார். ஆனால், அதற்குள் பங்களாதேஷ் அணி ஆட்டமிழப்பு கேட்டு முறையிட்டதால் மெத்யூஸ் குழப்பமடைந்தார். நடுவர்கள் மெத்யூஸின் ஆட்டமிழப்பை உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் மெத்யூஸை மட்டுமல்ல, உலக அளவிலான கிரிக்கட் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், ஐ.சி.சியின் உலக கிண்ணத்தொடர் தொடர்பிலான விளையாட்டு விதிமுறைகளில், ”விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது ஒரு துடுப்பாட்ட வீரரின் ஓய்வுக்குப் பின்னர், உள்வரும் துடுப்பாட்ட வீரர் 2 நிமிடங்களில் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அல்லது மற்ற துடுப்பாட்ட வீரர் அடுத்த பந்தை 2 நிமிடங்களுக்குள் பெறத் தயாராக இருக்க வேண்டும். அதனை மீறினால் உள்வரும் துடுப்பாட்ட வீரர், ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்படலாம் என்றொரு விதி உள்ளது. இந்த விதியை பயன்படுத்தியே மெத்யூஸை ஆட்டமிழக்க வைத்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள் என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும், ஒரு துடுப்பாட்ட வீரர் “டைம் அவுட்” சட்டத்தின்படி வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை என்று ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது. இந்த ஆட்டமிழப்பு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், உலகக் கிண்ண தொடரில் வர்ணணையாளராக பணியாற்றி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் இந்த செயலை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவரை நீக்குமாறு ஐ.சி.சியிடம் பங்களாதேஷ் கோராததன் காரணம் ஏன் என்று பங்களாதேஷ் மேல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மற்றும் அதன் தலைவருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மெத்தியூசின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப்பை போட்டி வர்ணணையாளர்கள் விமர்சித்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் றசல் ஆர்னோல்ட்டுடன் வர்ணணை செய்யும் இடத்தில் இருந்த வக்கார் யூனிஸ், பங்களாதேஷ் அணியின் தலைவரான ஷகிப்பின் கோரிக்கையை, இது ஒரு விளையாட்டு வீரரின் நடத்தையல்ல என கூறினார். இந்த விமர்சனத்துக்கு எதிராக அந்த நாட்டின் சட்டத்தரணியான ரஹ்மான் கானால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த பங்களாதேஷ் மேல் நீதிமன்ற நீதிபதிகள், அந்நாட்டின் கிரிக்கெட் சபையிடம் இதற்கான விளக்கம் கோரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விளையாட்டு என்பது விளையாட்டுதான். அதில் மனிதாபிமானம் காக்கப்படுவது அவசியம்தான். ஆனால், வழமைக்கு மாறான ஒரு ஆட்டமிழப்பு மனிதாபிமானத்தை கேள்வி எழுப்பியுள்ளதோடு மட்டுமல்லாது, இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
குமார் சுகுணா