காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.

அக்டோபர் 7ஆம் தேதி முதன்முதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் இருந்துதான் இதெல்லாம் தொடங்கியது. அந்த தாக்குதலில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் இலக்கானது ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது. ஹமாஸ் இயக்கத்தை ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக துடைத்தெறிவதுதான் அதன் நோக்கம்.

இந்நிலையில், காஸாவுக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது? தனது இலக்கை அடைவதில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது மற்றும் அதனால் இந்த இலக்கை அடைய முடியுமா?

இஸ்ரேலை பொறுத்தவரை, இந்த தாக்குதல் நடவடிக்கை அவ்வளவு எளிதில்லை என்றும் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியது என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறது.

பிபிசியுடன் பேசிய மூத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி, தற்போதைய நிலையை குத்துச்சண்டை போட்டியோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 15 சுற்று போட்டியில் தாங்கள் இப்போது 4ம் சுற்றில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இஸ்ரேலை சேர்ந்த யாராலுமே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. சிலர் மேற்கத்திய ஆதரவு இராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ். இயக்கத்திற்கு இடையே நடைபெற்ற சண்டையை மேற்கோள் காட்டுகின்றனர். அதன்படி, 2017ம் ஆண்டு ஐ.எஸ்.ஸிடமிருந்து மொசூலை மீண்டும் கைப்பற்ற இராக் ராணுவத்திற்கு 9 மாதங்கள் தேவைப்பட்டதை உதாரணமாக கூறுகின்றனர்.

அதே சமயம், சர்வதேச அளவில் சண்டை நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் செய்யக்கோரி அழுத்தம் அதிகரித்து வருவதால் நீண்ட காலத்திற்கு இஸ்ரேலாலும் இந்த சண்டையை நடத்த முடியாது.

காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம்

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 11,078 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நாளில் காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் வடக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. காஸாவின் வடக்குப் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் கடற்கரையை ஒட்டிய பகுதியை இஸ்ரேல் ராணுவம் இரண்டாகப் பிரித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறியபோது அங்கிருந்த மக்களை தெற்குப் பகுதியை நோக்கிச் செல்ல கூறியிருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவை சுற்றி வளைத்தபோது அனைத்து மக்களும் தெற்குப் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

காஸா நகரப் பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி ஹமாஸ் ஆயுதக்குழுவினரோடு சண்டையிட்டு வருகின்றனர். அல் ஷிஃபா மருத்துவமனை காஸாவின் வடக்குப் பகுதி கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலும் ஹமாஸும் சண்டையிட்டு வருகின்றனர்.

காஸாவிலேயே பெரிய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல்

காஸாவிலேயே பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவில் இருக்கும் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் 37 குழந்தைகள் உட்பட 100 நோயாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் கூறுகையில், இந்த மருத்துவமனையோடு தங்களுக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 100மீட்டர் தூரத்தில் இஸ்ரேலின் ராணுவ டாங்கிகள் ஹமாஸ் மீது தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அல் ஷிஃபா மருத்துவமனையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் அல் ஷிஃபா மருத்துவமனையின் பிரசவ அறைகள் இருக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உலக அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளன.

காஸா தாக்குதல்

இரண்டு பக்கமும் பேரிழப்பு

இதுவரை பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி அதில் ஹமாஸின் மூத்த தளபதிகள் உட்பட டஜன் கணக்கான இலக்குகளை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது இஸ்ரேல். ராணுவ நிபுணர் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான யாகோவ் காட்ஸ், இஸ்ரேல் இதுவரை இருபத்தி மூன்றாயிரத்திற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராக் மொசூலில் நடைபெற்ற போரின் கடைசி நேரத்தில் கூட மேற்கு நாடுகளின் கூட்டணி படைகள் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரே வாரத்தில் 500 குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அளித்துள்ள தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காஸாவில் 10,800 மக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 4,400 குழந்தைகளும் அடங்குவார்கள்.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெற்றிகரமாக காஸாவை தெற்கு மற்றும் வடக்கு என பிரித்து விட்டதாகவும், காஸா நகரம் முழுவதையும் அதன் படை சுற்றிவளைத்துள்ளதாகவும் கூறி வருகிறது.

தற்போது அவர்கள் நகரத்தின் மையப்பகுதி வரை வலுவாக ஊடுருவியுள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் கூட இன்னும் காஸா முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அவர்களால் அறிவிக்க முடியவில்லை.

அதே சமயம் மறுபுறம், இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாகவோ அல்லது காஸாவுக்குள் தீவிரமாக ஊடுருவியுள்ளதாகவோ தெரியவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸை தனிமைப்படுத்தும் இலக்கோடுதான் தனது தரைவழி தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கியபோது ஹமாஸ் இயக்கத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை வீரர்கள் இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 10 சதவீதம் அல்லது 4,000 வீரர்கள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற கணக்கீடுகளை சரிபார்ப்பது சாத்தியமற்றது.

இருப்பினும், ஏற்கனவே காஸா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலினால் ஹமாஸின் போர்த்திறன் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் இஸ்ரேலிய ராணுவமோ குறைந்த இழப்புகளையே பெற்றுள்ளதாக தெரிகிறது. தரைவழி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது இஸ்ரேல்.

பெரும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி நடவடிக்கைகளை மிக கவனமாக கையாள்வதாக இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிபுணர் யோசி குபர்வாசர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்னும் எவ்வளவு ஹமாஸ் இயக்கத்தினர் வடக்கு காஸாவில் இருக்கிறார்கள் அல்லது எவ்வளவு வீரர்கள் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தெற்கு நோக்கி எவ்வளவு பேர் சென்றிருக்கலாம் என்று சரியாக தெரியாத சூழலே நிலவுகிறது.

காஸாவின் சுரங்கங்கள் இன்னமும் இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன. சண்டையின் போது சுரங்கங்களில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக இஸ்ரேல் படைகள் தாங்கள் கண்டறியும் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நகரங்களில் போர் புரிவதில் சவால்கள்

உளவுத்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றின் திறன் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னிலை தெளிவாக உள்ளது. இதனால், காஸாவின் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க் அனைத்தையும் முடக்க முடியும்.

இஸ்ரேலின் அதிநவீன விமானப்படை அதன் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தரையில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியாது.

இன்னமும் கூட தினமும் 100 புதிய தாக்குதல் இலக்குகளை கண்டறிவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் எவ்வளவு தூரம் இழுத்து கொண்டே போகிறதோ, அதே போல் இந்த பட்டியலும் குறையாமல் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்த போர் தொடரும் வரை , எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவதற்கு அதிகம் தரைப்படையினரையே நம்பியிருக்கும் சூழல் உள்ளது.

இஸ்ரேலிய படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்ற போதும், நகர்ப்புறங்களில் போர் புரிவது அவர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம். இஸ்ரேல் இது வரை தரைப்பகுதியில் குறைவான அளவிலேயே போர் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட பல காணொளிகளிலும் கூட அதன் தரைவழி சண்டைகள் பெரும்பான்மையாக அதன் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சார்ந்து இருப்பதையே காட்டுகின்றன.

மதிப்பீடுகளின் அடிப்படையில் , தற்போதைய நிலவரப்படி காஸா பகுதிக்குள் 30 ஆயிரம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருக்கலாம். ஆனால் இது அதன் ஒட்டுமொத்த ராணுவமான 1.60 லட்சம் செயல் வீரர்கள் மற்றும் 3.60 லட்சம் ரிசர்வ் வீரர்களில் ஒரு சிறு பகுதிதான்.

ராணுவ நிபுணரான ஜஸ்டின் கிரம்ப் பேசுகையில், இங்கே கேள்வி என்னவென்றால் காஸாவில் உள்ள ஒட்டுமொத்த கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை மொத்தமாக அழித்தொழிக்க எத்தனை தரைப்படை வீரர்களை இஸ்ரேல் நிலைநிறுத்தப்போகிறது?

இதற்கு பதிலாக, அது ஹமாஸின் வலுவான தளங்களை குறிவைக்கும் முடிவை எடுக்கலாம். இஸ்ரேல் மிக சிறிய அளவிலான சண்டையிடுதலை தவிர்க்க விரும்புவதாக அவர் நம்புகிறார். இது கண்டிப்பாக பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

போருக்குப் பின் என்ன நடக்கும்?

கேள்வி என்னவென்றால் ஹமாஸை மொத்தமாக அழித்தொழிக்கும் இஸ்ரேலின் இலக்கு சாத்தியப்படுமா? இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் கூட வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களை நம்பும் எந்த ஒரு சிந்தனையையும் மொத்தமாக அழிப்பது சாத்தியமில்லாதது என்றே நம்புகின்றனர்.

ஹமாஸின் பல மூத்த தலைவர்கள் காஸாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். காட்ஸை பொறுத்தவரை, இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் பிழைத்திருந்தால் கூட, அவர்கள் “நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் , நாங்கள் வென்று விட்டோம்” என்று கூறலாம்.

அதனால்தான், அக்டோபர் 7 சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஹமாஸை மொத்தமாக அழிப்பதை விட, அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் இஸ்ரேலின் கவனம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கிரம்ப்.

போருக்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை கூறுமாறு இஸ்ரேல் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

நிபுணர்களின் கருத்துப்படி, போருக்கு பிந்தைய திட்டமில்லாமல் தொடங்கப்பட்ட பல போர்கள் வெற்றியில் முடிந்ததில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவ முகாமில் இந்த திட்டமிடலை மட்டும் சுத்தமாக காண முடியவில்லை.

 பிபிசி தமிழ்

Share.
Leave A Reply