முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊடகங்கள் பூநகரி என்ற பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன. பூநகரியில் அமைந்திருந்த பாரிய கூட்டுப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதல் தான் அதற்குக் காரணம்.
‘ஒப்பரேசன் தவளை’ என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல், அந்தக் காலகட்டத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.
நாகதேவன்துறை, சங்குப்பிட்டி இறங்குதுறை, பூநகரி, பள்ளிக்குடா, கூமர், கெளதாரிமுனை, கல்முனை என கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் நீளத்தில், 29 கிலோ மீற்றர் சுற்றளவில், 30 கிலோ மீற்றர் பரப்பளவில், பரந்து விரிந்து கிடந்த அந்த படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் ஈரூடகத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
வில்லடியில் கட்டளை முகாம், நாகதேவன்துறையில் படகுத் தளம், ஞானிமடத்தில் கடற்படைத் தளம், கூமரில் இறங்குதுறையுடன் கூடிய முகாம், பள்ளிக்குடா மற்றும், ஆலடியில் இரண்டு முகாம்கள், பள்ளிக்குடாவுக்கும், கூமருக்கும் இடையில் ஒரு விநியோக முகாம் என- 7 பிரதான இராணுவ, கடற்படை முகாம்களைக் கொண்டிருந்தது அந்த பெருந்தளம்.
12 அதிகாரிகளும் 288 படையினரும் என, மொத்தம் 300 கடற்படையினரும், – 56 அதிகாரிகளும், 2236 படையினருமாக மொத்தம் 2292 இராணுவத்தினர் என, மொத்தம் 2592 அரச படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர்.
லெப்.கேணல் ரஞ்சித் சில்வா தலைமையில் 1ஆவது இலகு காலாட்படை, மேஜர் லலித் தவுலகல தலைமையில் 3ஆவது கஜபா ரெஜிமென்ட் ஆகிய இரண்டு பற்றாலியன்கள் நிலைகொண்டிருந்த அந்த படைத்தளத்தில் கடற்படையின் மூன்று உப படைப்பிரிவுகளும், 6 நீருந்து விசைப்படகுகளும், இராணுவத்தின், கவசப் படைப்பிரிவின் இரண்டு ரி 55 பிரதான சண்டை டாங்கிகளும், 120 மில்லி மீற்றர் மோட்டார்களுடன், ஆட்டிலறிப் படைப்பிரிவின், ஒரு பட்டரியும் தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்தன.
படைபலம் மற்றும் ஆயுத பலத்தினால் வீழ்த்த முடியாத இலக்காக அது கருதப்பட்டது. தேவைப்படும் போது, பலாலியில் இருந்தும், தீவகத்தில் இருந்தும் ஆனையிறவில் இருந்தும் சூட்டாதரவையும், உதவிப் படைகளையும் வழங்கக் கூடிய நிலையிலும், பலாலியில் இருந்து வான் படைகளின் உதவியைப் பெறக் கூடிய நிலையிலும், காரைநகர், காங்கேசன்துறை கடற்படைத் தளங்களில் இருந்து கடற்படை உதவியை பெறக் கூடிய நிலையிலும்- அந்த பெருந்தளம் இருந்தது.
இவ்வாறானதொரு தளத்தின் முன்னரங்க நிலைகளை விடுதலைப் புலிகளின் படையணிகள், 1993 நவம்பர் 10ஆம் திகதி இரவோடு இரவாக ஊடுருவத் தொடங்கின. மறுநாள் 11ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில், பெரும் சமர் மூண்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி நெறிப்படுத்தலில், புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த பொட்டம்மான் அந்த தாக்குதலை ஒருங்கிணைத்தார். கடல்வழி நடவடிக்கைகளை கடற்புலிகளின் தளபதி சூசையும், தரை நடவடிக்கைகளை தளபதி சொர்ணமும் தலைமை தாங்கி முன்னெடுத்தனர்.
கிழக்கில் இருந்து பெரும் படையணியுடன் சென்ற கருணா, மற்றும் அனைத்து மாவட்டத் தளபதிகளும், தங்களின் படையணிகளுடன் இந்த தாக்குதலில் பங்கெடுத்தனர்.
தரைவழியாகவும், கடல்வழியாகவும் படைத்தளத்துக்குள் ஊடுருவி நடத்தப்பட்டதால் அதற்கு ‘தவளை’ என்று பெயரிடப்பட்டது.
இராணுவ முன்னரண்களை தாக்கியழித்துக் கொண்டு முன்னேறிச் செல்லும் வழக்கத்துக்கு மாறாக, முன்னரங்க நிலைகளை ஊடுருவி நிலை கொண்ட பின்னர் தொடங்கப்பட்ட தாக்குதல் அது.
ஏற்கெனவே 1992 நவம்பரில், பலாலிப் படைத்தளத்தின் கிழக்குப் பகுதியில், ஒட்டகப்புலம் தொடக்கம் வளலாய் வரையான சுமார் நான்கரைக் கிலோமீற்றர் நீளமான முன்னரங்க நிலைகள் மீதும் இதே வகையானதொரு தாக்குதலை புலிகள் நடத்தியிருந்தனர். அந்த தாக்குதலில் இருந்து அரச படையினர் பாடம் கற்றிருந்தால், பூநகரியில் பெருந்தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.
பூநகரிப் படைத்தளம் மீது தாக்குதல் தொடங்கப்பட்ட குறுகிய நேரத்துக்குள்ளாகவே அதன் பிரதான பகுதிகள் புலிகளிடம் வீழ்ச்சியடையத் தொடங்கின.
நாகதேவன்துறை, ஞானிமடம் கடற்படைத் தளங்கள் வீழ்ச்சியடைய, அங்கிருந்த 5 நீருந்து விசைப்படகுகள் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டன.
இரண்டு டாங்கிகளும் புலிகளிடம் வீழ்ச்சியடைந்ததுடன், 120 மி.மீற்றர் மோட்டார்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட டாங்கிகளில் ஒன்று விமானப்படையின் குண்டு வீச்சில் சேதமடைந்து கைவிடப்பட்டது.
மற்றது புலிகளால் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு, இறுதிக்கட்டப் போர் வரையில் பயன்படுத்தப்பட்டது,
இந்த டாங்கினால், பல்வேறு சமயங்களில் இராணுவத்தினர் பெரும் இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது என்று ஜெனரல் கமல் குணரட்ண குறிப்பிட்டிருந்தார்.
புலிகளின் தாக்குதலில் படையினர் சிதறியிருந்த நிலையில் அவர்களை ஒன்றிணைக்கவோ மேலதிக உதவிகளை வழங்கவோ முடியாத நிலை காணப்பட்டது.
இந்த தாக்குதல் ஆரம்பிக்க முன்னரே பலாலி பெருந்தளத்துக்குள்ளேயும், 30 பேர் கொண்ட ஒரு கரும்புலி அணியை புலிகள் ஊடுருவச் செய்திருந்தனர்.
கடல்வழியாக பலாலி தளத்துக்குள் ஊடுருவிய அந்த அணியினர், பூநகரியில் தாக்குதல் தொடங்கியதும், பீரங்கிச் சூட்டு ஆதரவையோ விமானப்படையின் விமானங்கள், ஹெலிகளின் ஆதரவையோ பெற்றுக் கொள்ள முடியாது, தொலைத்தொடர்பு கோபுரத்தை தாக்கி அழித்து, வடபுலப் படைத் தலைமையகத்தை குழப்பத்துக்குள்ளாக்கும் திட்டத்தைக் கொண்டிருந்தனர்.
புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்று வழி தவறிப் போனது.
மற்றொரு அணி கரும்புத் தோட்டம் ஒன்றின் ஊடாக விமானப்படைத் தளத்தை நெருங்கிய போது இராணுவத்தினரின் கண்ணில் பட்டு விட, அங்கு நடந்த சண்டையில் 13 கரும்புலிகள் சாவடைந்தனர்.
ஏனையவர்கள் தாக்குதலை முன்னெடுக்க முடியாமல் தளம் திரும்பினர்.
இதனால் பலாலியில் இருந்து புக்காரா, மற்றும் சியாமாசெற்றி குண்டு வீச்சு விமானங்களும் சீனக்குடாவில் இருந்து எவ் 7 ஜெட் போர் விமானங்களும் விரைந்து சென்று- பூநகரியில் படையினருக்கு உதவியாக தாக்குல் தொடுக்க முயன்றன.
ஆனால், புலிகளின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் விமானங்களின் தாக்குதல் ஆதரவை பெறமுடியாமல் செய்தது.
அதுபோல கடல் வழியாக உதவ முற்பட்ட கடற்படையினரை கடற்புலிகளின் சண்டைப் படகுகள் வழிமறித்து தாக்கின.
கடற்கரையோரங்களில் புலிகள் நிலையெடுத்து நின்று கனரக ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தினர்.
இதனால் 11, 12ஆம் திகதிகளில் உதவிப் படைகளை தரையிறக்க முடியவில்லை.
அதேவேளை தளம் முழுவதையும் கைப்பற்றி அழிக்கும் புலிகளின் முயற்சிகளும் முழு வெற்றி அளிக்கவில்லை.
பரந்த பிரதேசத்தில் தப்பியோடியிருந்த படையினரை தேடித் தேடி அழிப்பது புலிகளுக்கு கடினமாக இருந்தது. பற்றைக்காடுகள் நிறைந்த பகுதியில் அது கடினமான காரியமாக இருந்தது. 13ஆம் திகதி அதிகாலையில் கடற்படையின் விசேட படகுப் படையணியின் தலா 15 கொமாண்டோக்களுடன் இரண்டு நீரூந்து விசைப்படகுகள், லெப்.கொமாண்டர் ரவீந்திர விஜேகுணரத்ன தலைமையில் கல்முனையில் தரையிறங்க, அதனைத் தொடர்ந்து, தலா 6 கொமாண்டோக்களுடன், டிங்கிப் படகுகள் தரையிறங்கின. அதையடுத்து கடற்படை கொமாண்டோக்களின் பாதுகாப்புடன், மேலதிக உதவிப் படைகளை தரையிறக்க முடிந்தது.
இதையடுத்து புலிகள் 13ஆம் திகதி மாலை தாக்குதலை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த தாக்குதலில், ஆயிரம் படையினர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.
எனினும், இராணுவத் தரப்பில் 8 அதிகாரிகளும் 225 படையினரும்- கொல்லப்பட்டதாகவும், 302 பேர் காணாமல் போனதாகவும், 17 அதிகாரிகளும் 544 படையினரும் காயமடைந்தனர் என்றும்-
கடற்படையினர் தரப்பில், 14 கடற்படையினர் கொல்லப்பட்டு, 88 பேர் காணாமல் போயினர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
50 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் அப்போது புலிகளிடம் சிக்கியதாக ஜெனரல் கமல் குணரட்ண குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலில், 469 பேரை இழந்தனர்.
1993 நவம்பர் 14ஆம் திகதி வெளியான அரசாங்க வாரஇதழான சண்டே ஒப்சேவர், “பூநகரியில் புலிகள் ஈட்டிய வெற்றி” என்ற தலைப்புச் செய்தியுடன் தான் வெளியானது.
அந்தளவுக்கு அது பெருந்தோல்வியாக அரசதரப்பினாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சிசில் வைத்தியரத்ன நியமித்திருந்தார்.
கவசப்படைப்பிரிவைச் சேர்ந்த அவர், டாங்கிகள் புலிகள் வசம் வீழ்ந்ததற்கு பொறுப்பேற்று இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவர் நியமித்த விசாரணை நீதிமன்றம், அப்போதைய வடபிராந்திய இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஹான் தளுவத்த, யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஜாலிய நமுனி, பிரிகேடியர் லயனல் பலகல்ல, பிரிகேடியர் கெமுனு குலதுங்க, பிரிகேடியர் சாந்த கொட்டேகொட, கேணல் ரஞ்சித் டி சில்வா, லெப்.கேணல் லலித் தவுலகல ஆகியோரே பூநகரி தோல்விக்கு பொறுப்பு என குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வழங்கப்பட்ட போதும் அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
எனினும், இவர்கள் மீது துறைசார் நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அதனால் பிற்காலத்தில் இவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக, இராணுவத் தளபதியாக, இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வுகளைப் பெற்றிருந்தனர்.
பூநகரி பின்னடைவு குறித்து விசாரித்த இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில விடயங்கள் முக்கியமானவை.
“நவம்பர் 11 ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதல் தொடங்கி, சுமார் 15 நிமிடங்களுக்குள் பூநகரி படைத்தளத்தின் முழு கட்டளை அமைப்பும் உடைந்து விட்டது.
அங்கு படைப்பிரிவுகள், அல்லது பட்டாலியன்கள், கொம்பனிகள், பிளட்டூன்கள் என்று எதுவும் இருக்கவில்லை. படையினரும் அதிகாரிகளும் மட்டும் குழப்பத்துடன் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு யார் நண்பன் யார் எதிரி என்று தெரியவில்லை.
சங்கேத சொற்கள் கொடுக்கப்படாததால் இருட்டில் யாரையும் அடையாளம் காண முடியவில்லை. புலிகள் தம்மை அடையாளப்படுத்துவதற்காக வெள்ளை நிற பட்டிகளை கைகளில் அணிந்திருந்தனர். பகல் நேரங்களில் பச்சை நிற டோர்ச் லைட்களையும் மஞ்சள் கொடிகளையும் பயன்படுத்தினார்கள்.
11ஆம் திகதி காலை 6 மணியளவிலேயே, முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் வீழ்ச்சியடைந்து விட்டன. படையினர் அச்சத்தில் தங்கள் உயிர் வாழ்விற்காக மட்டுமே போராடினர். தாக்குதல் நடப்பதற்கு முன்னர் சுமார் 400 புலிகள் முன்னரங்க நிலைகளை ஊடுருவி முகாமுக்குள் நுழைந்திருப்பார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறது.
ரி 55 போர் டாங்கிகளே முதலில் எதிரிகளின் (புலிகள்) கைகளில் சிக்கின.
டாங்கிகள் எந்த எதிர்ப்பும் இன்றி கைவிடப்பட்டன. கவசப் படைப்பிரிவு துருப்பினர் தங்கள் தனிப்பட்ட ஆயுதங்களைக் கூட இழந்தனர், ஒரு அதிகாரி தனது தொலைத்தொடர்பு கருவியையும் இழந்தார். முதல் தாக்குதலுடன், படையினர் குழப்பத்தில் சிதறி, சிறியளவிலான குழுக்களாகினர் என்று விசாரணை நீதிமன்றம் கண்டறிந்தது.
தாக்குதல் தொடர்ந்ததால் அவை இன்னும் சிறிய குழுக்களாக உடைந்தன, இறுதியில் ஒவ்வொரு படையினரும் தனக்காகவே போரிட்டனர். படையினர் உயிர்வாழ்வதற்காக மட்டுமே போராடினர்.
பயத்தினால் அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் இருக்கவில்ல என கண்டறியப்பட்டது.
விசாரணை நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கட்டளை அமைப்பில் இருந்து பிரிந்த படையினர், பயத்தின் காரணமாக இரவில் எந்த இலக்கும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் வெடிமருந்துகள் தீர்ந்து போயின. மறுநாள் அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.” என்றும் இராணுவ நீதிமன்றம் அறிக்கையிட்டது.
இலங்கையின் போர் வரலாற்றில் பூநகரிச் சமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, இராணுவ நீதிமன்றத்தின் அந்த விசாரணை அறிக்கையே ஒப்புவிக்கிறது.
சுபத்ரா (virakesari)