திருமண உறவை தாண்டிய நட்பை கைவிட மறுத்த மனைவியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த கணவரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.

விழுப்புரம் மாவட்டம், நவமால்காப்போர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாண்டியன் – மலர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில் பாண்டியனும், மலரும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர்.

சென்னையில் டீ கடை ஒன்றில் வேலை செய்து வந்த பாண்டியன், கடந்த வாரம் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அதையடுத்து நேற்று காலை அங்கு சென்ற அவர்களது இளைய மகள், அப்பா அம்மாவை காணவில்லை என்று அக்கம் பக்கத்தினருடன் தேடியிருக்கிறார்.

அப்போது, அந்தப் பகுதியிலிருந்த ஒரு கரும்பு வயலில், வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்தபடி சடலமாகக் கிடந்தார் மலர். அதைப் பார்த்ததும் அவரது மகள் கதறியழுதார்.

தகவலறிந்து உடனே சம்பவ இட த்திற்கு விரைந்த கண்டமங்கலம் போலீஸார், மலரின் உடலைக் கைப்பற்றி விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், அங்கிருந்து பாண்டியன் வீட்டிற்கு சென்று நின்றது.

அதையடுத்து பாண்டியன் – மலர் தம்பதியினரின் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அந்த முதல்கட்ட விசாரணையில் மலரைக் கொலை செய்தது பாண்டியன்தான் என்று தெரிய வந்திருக்கிறது.

அதையடுத்து தலைமறைவாக இருந்த பாண்டியனை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய விசாரணை அதிகாரிகள், “மலருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

அது பாண்டியனுக்கு தெரிய வந்ததும், மலரை கண்டித்திருக்கிறார். ஆனாலும், அந்த நபருடனான நட்பை அவர் கைவிடவில்லை.

இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு மலருடன் பழக்கத்தில் இருந்த நபரின் மனைவி, `என் கணவரும், மலரும் தொடர்பில் இருக்கின்றனர்’ என்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

அப்போது மலரையும், அந்த நபரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர் அனைத்து மகளிர் போலீஸார்.

அதன் பிறகும் இருவரும் தங்களின் நட்பைத் தொடர்ந்ததால், பாண்டியனுக்கும் மலருக்கும் இடையே சண்டையும் தொடர்ந்திருக்கிறது.

நேற்று முன் தினமும் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அப்போது அக்கம் பக்கத்தினர்தான் அவர்களை சமாதானம் செய்திருக்கின்றனர்.

நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்ற மலர், நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்து கரும்பு வயல் பக்கம் சென்றிருக்கிறார்.

அதை கவனித்த பாண்டியன், மலரை ரகசியமாக பின் தொடர்ந்திருக்கிறார்.

கரும்பு வயலில் மலரும், அந்த நபரும் சந்தித்தபோது தான் பார்த்ததாகவும், அப்போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறுகிறார் பாண்டியன்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மலரின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்திருக்கிறார் பாண்டியன். அதையடுத்து தனது மகனுக்கு போன் செய்து, `உன் அம்மா சரியில்ல.

அவ கதையை முடிச்சிட்டேன்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் கோபத்தில் உளறுவதாக நினைத்த அவர், சாதாரணமாக விட்டுவிட்டார்.

நேற்று காலை மாடு மேய்க்கச் சென்றவர்கள்தான், சடலமாக கிடந்த மலரைப் பார்த்து தகவல் கூறியிருக்கின்றனர். பாண்டியனிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.

Share.
Leave A Reply