இப்போதைய ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் புராதன நகரம்தான் (old city) ஆதியில் இருந்த ஜெருசலேம் நகரம். இது மிகத் தொன்மை வாய்ந்தது. கி.மு. பதினோராம் நூற்றாண்டில் டேவிட் (King David) என்னும் யூத மன்னன் இந்த ஊரை ஒரு குன்றின் மேல் உருவாக்கியதாகப் பைபிளில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் தாங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து வாழ்ந்துவந்ததாக யூதர்கள் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது எப்படியாயினும் இந்த நகரோடு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூன்று மதத்தினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்த மதங்கள் சம்பந்தப்பட்ட பல புண்ணிய தலங்கள், தேவாலயங்கள், துறவி மடங்கள், மசூதிகள் இங்கு இருக்கின்றன. அதனால் மூன்று மதத்தவர்களும் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதற்குள் நுழைந்துவிட்டால் சரித்திர காலத்திற்கே போய்விட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.
இந்நகர் கி.மு.வுக்கு முன்னும் கி.மு.வுக்குப் பின்னும் பல மதங்களைச் சேர்ந்தவர்களின் கையில் இருந்திருக்கிறது. முதலில் யூதர்கள், பின் ரோமானியர்கள், அதன் பிறகு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மறுபடி கிறிஸ்தவர்கள் என்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.
இதனால் இம்மூன்று மதங்களின் இறைவழிபாட்டு இடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதிலும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட பல கட்டடங்களை அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். இப்போதுள்ள பல இடங்கள் எந்த மதத்திற்கு உரியது என்ற சர்ச்சை நடந்துவருகிறது. நம் நாட்டில் இந்துக் கோவிலான ராமஜென்ம பூமியை இடித்துவிட்டு அதற்கு மேல் பாபர் மசூதியைக் கட்டியதாக சர்ச்சை நடந்து வருவதைப் போல. பல இடங்களில் இன்றும் அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது.
1967-இல் நடந்த அரேபிய-இஸ்ரேல் சண்டையில் (இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கும் சிரியா, எகிப்து, ஜோர்டன் ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையே ஆறு போர்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் இஸ்ரேல் 1948-இல் ஐ.நா. பாலஸ்தீனத்திற்குக் கொடுத்த பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.) இஸ்ரேல் ஜோர்டனிடமிருந்து இந்த நகரத்தைக் கைப்பற்றியது. பிறகு 1980-இல் ஜோர்டான், இதை உலகப் பாரம்பரியச் சொத்துகளில் (World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.-வுக்குக் கோரிக்கை விடுத்ததை ஐ.நா. ஏற்று, அந்தப் பட்டியலில் இந்த நகரை இடம் பெறச் செய்திருக்கிறது.
இதனுடைய பரப்பளவு 0.9 சதுர கிலோமீட்டர்தான். இதைச் சுற்றிக் கற்களாலான மதில் சுவர் இருக்கிறது. இந்தச் சுவர் பல காலத்தில் பல மன்னர்களால் இடிக்கப்பட்டும் திரும்ப எழுப்பப்பட்டும் இருந்திருக்கிறது. இப்போதுள்ள மதில் சுவர் ஆட்டோமான் பேரரசராகிய சுலைமான் என்பவரால் (Suleiman, the Magnificent) 1538-இல் கட்டப்பட்டது.
இந்த மதிலின் நீளம் 2.8 மைல். உயரம் 16 அடியிலிருந்து 49 அடி வரை இருக்கிறது. சில இடங்களில் இதன் பருமன் 10 அடி கொண்டதாக இருக்கிறது. இதில் 43 காவல் கோபுரங்களும் (Surveillance Towers) பதினொரு நுழைவாயில்களும் (Gates) இருக்கின்றன. இப்போது ஏழு நுழைவாயில்களே உபயோகத்தில் இருக்கின்றன. மூடப்பட்ட நுழைவாயில்களில் ஒன்றான தங்க வாயில் (Golden Gate) வழியாக யூதக் கடவுள் அவருடைய தூதரை அனுப்பும்போது அவர் இந்த வாயில் வழியாகத்தான் வருவார் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.
தூதர் வருவதைத் தடுக்க முஸ்லீம் மன்னன் ஒருவன் இதை மூடிவிட்டானாம். அப்படி மூடிவிட்டாலும் இவ்வளவு தூரம் வந்தவர் உள்ளே வருவதற்கு என்ன தயக்கம் இருக்க முடியும் என்று யூதர்கள் கூறிக்கொள்வார்களாம். 1887-ஆம் ஆண்டு வரை எல்லாக் கதவுகளும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மூடப்பட்டு, மறு நாள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் திறக்கப்படுமாம்.
இந்த நுழைவாயில்கள் நேராக அமைக்கப்படாமல் L வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிரிகள் குதிரைகளின் மேல் வேகமாக வரும்போது வாயில் இந்த வடிவில் இருந்தால் அது அவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துமாம். மேலும் யூதர்களின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சில வாயில்களில் பெரிய துவாரங்கள் இருக்கின்றன. எதிரிகள் உள்ளே நுழையும்போது அவர்கள் மேல் காய்ச்சிய திரவத்தை ஊற்றுவதற்காக இந்த ஏற்பாடாம். இன்று இந்த மதில் சுவரின் மேலே நடந்து பார்த்தால் ஜெருசலேம் நகரம் முழுவதும் மிக அழகாகக் காட்சியளிக்கிறது.
புராதன நகரின் தெருக்கள், சாலைகள் முழுவதும் cobble stones என்னும் ஒரு வகைக் கூழாங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கற்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாகக் கூறுகிறார்கள்.
இந்த நகர் கிறிஸ்துவப் பிரிவு, யூதர்கள் பிரிவு, முஸ்லீம்கள் பிரிவு, ஆர்மீனியர் பிரிவு என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. அதிகபட்சமாக எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்களோ அந்த மதத்தின் பெயரால் அந்தப் பகுதி வழங்குகிறது. அதனால் இப்படிப் பல பிரிவுகளாக இருந்தாலும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மதப் பிரிவில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு சிறிய மொரோக்கன் பிரிவும் இருக்கிறது. இந்தப் பிரிவுகள் சம அளவில் இல்லை. டமாஸ்கஸ் (Damascus Gate) வாயிலிலிருந்து ஸயான் வாயில் (Zion Gate) வரை ஓடும் தெரு இந்நகரை கிழக்கு, மேற்காகப் பிரிக்கிறது. ஜாஃபா வாயிலிலிருந்து (Jaffa Gate) சிங்க வாயில் (Lion’s Gate) வரை ஓடும் தெரு நகரை வடக்கு, தெற்காகப் பிரிக்கிறது. நகரின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லீம் பிரிவும் வட மேற்கில் கிறிஸ்தவர்கள் பிரிவும் தென்மேற்கில் யூதர்கள் பிரிவும் தென்கிழக்கில் முஸ்லீம்கள் பிரிவும் இருக்கின்றன.
கிறிஸ்தவப் பிரிவில் 40 தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (Monasteries), கிறிஸ்தவ பயணிகள் தங்குமிடங்கள் ஆகியவை இருக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புண்ணிய தலமாகக் கருதப்படும் Church of the Holy Sepulcher இங்குதான் இருக்கிறது. இயேசு குற்றவாளி என்று ரோமானிய அரசன் பிலாத்து தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை வழங்கிய இடம் முஸ்லீம் பிரிவில் இருக்கிறது. அங்கிருந்து தொடங்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கடைசியாக உயிர் துறந்து அவர் உடல் புதைக்கப்பட்ட இடம் வரை உள்ள பாதையைப் பதினான்கு பிரிவுகளாகக் குறித்திருக்கிறார்கள்.
அவற்றை ஆங்கிலத்தில் stations என்று குறிப்பிடுகிறார்கள். இயேசு தன்னுடைய கடைசி யாத்திரையை நோக்கி நடந்த பாதையை Via Dolorosa என்கிறார்கள். பாதையின் ஆரம்பத்தில் இயேசுவைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டிய இடம், பின் அவர் சிலுவையைத் தூக்கி வருமாறு ஆணையிட்ட இடம், அவர் சிலுவையின் சுமையால் விழுந்த இடம், பின் அவர் தன் தாயைக் கூட்டத்தில் சந்தித்த இடம், அவர் தன் ஆதரவாளர்களோடு பேசிய இடம், ஜெருசலேம் பெண்களைச் சந்தித்த இடம் என்று கூறப்படும் இடங்கள் முஸ்லீம் பிரிவில் இருக்கின்றன.
இயேசு சிலுவையின் சுமையால் மறுபடி விழுந்த இடம், ரோமர் சிப்பாய்கள் அவருடைய ஆடைகளைக் கழைந்த இடம், அவரைச் சிலுவையில் அறைந்த இடம், அவருடைய உடலைக் கீழே இறக்கி வைத்த இடம், அவருடைய கல்லறை ஆகியவை பின்னால் கட்டப்பட்ட Church of the Holy Sepulcher-குள்ளே இருக்கின்றன. இயேசுவை அறைந்த சிலுவையை ஊன்றிய கல் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது. அதில் ஒரு சிலுவையை நட்டு இப்போது வழிபடுகிறார்கள்.
உலகின் பல கோடியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் இங்கு வருகிறார்கள். இயேசுவின் உடல் கிடத்தப்பட்ட இடம் என்று ஒரு கல்மேடை இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதில் தங்கள் தலையை வைத்து வழிபடுகிறார்கள். இயேசுவின் கல்லறையைப் பார்க்க மக்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள்.
ரோமானிய அரசன் கான்ஸ்டாண்ட்டின் (இவன்தான் கிறிஸ்தவ மதத்தை மறுபடித் துளிர்க்கச் செய்தவன்) காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் பல முறை இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டது. இப்போதைய கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். இந்தக் கோவிலின் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதில் பல கிறிஸ்தவ மதப் பிரிவினர்களுக்கிடையே நடந்த சச்சரவால் இதனுடைய பெரிய மரக் கதவுகளுக்கான சாவி ஒரு முஸ்லீம் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்! இப்போதும் பத்து அங்குல நீளமுடைய இதன் சாவி ஒரு முஸ்லீம் கையில் இருக்கிறது. அவர் காலையில் கதவைத் திறந்துவிட்டு மறுபடி இரவு எட்டு மணிக்கு வந்து கதவைப் பூட்டிவிட்டுச் செல்வாராம்.
இயேசுவின் இந்தக் கடைசி யாத்திரை வழியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்போது ஃப்ரான்ஸிஸ்கன் (Franciscan) பிரிவைச் சேர்ந்த குருமார் தலைமையில் பக்தர்கள் பாடிக்கொண்டும் ஜபித்துக்கொண்டும் நடக்கிறார்கள். இப்போது இருக்கும் பாதைதான் இயேசு நடந்த அதே இடம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
இயேசு தன் சீடர்களுடன் கடைசியாக உணவருந்திய இடம் (Last Supper) என்ற ஒரு இடம் இருக்கிறது. இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய தலம் என்று கருதி போப் இதைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடும்படி இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் ஸ்பெயின் நாட்டிலுள்ள யூதக்கோவில் ஒன்றை இஸ்ரேலுக்குக் கொடுத்துவிடுவதாக வாக்களித்திருக்கிறாராம்.
யூதர்கள் பிரிவில் Western Wall என்னும் யூதர்களுடைய இரண்டாவது கோவிலின் இடிபாடுகளில் மிஞ்சிய மேற்குச் சுவர் இருக்கிறது. இந்தச் சுவரின் மிகப் பெரிய கல்லின் எடை பத்து லட்சம் பவுண்டிற்கும் மேலானது. நீளம் 45 அடி, உயரம் 15 அடி, ஆழம் 15 அடி. இந்தச் சுவரின் உயரம் 65 அடி. யூதர்களின் இரண்டாவது கோவில் இடிக்கப்பட்டது கி.பி. 70-இல். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷங்களாக இது இருந்து வருகிறது. தங்களுடைய இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டுவிட்டதால் மூன்றாவது கோவிலை எப்படியும் மறுபடியும் கட்டிவிட வேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள்.
யூதர்கள் பகுதியில் உள்ள ஒரு சதுக்கத்தில் மெனோரா (menorah) என்னும் யூதர்களின் ஏழு தீப விளக்கு ஒன்று இருக்கிறது. இது யூதர்களுக்கு மிக முக்கியமான விளக்கு. இதில் எரிவதற்கு மிகச் சுத்தமான ஆலிவ் எண்ணெய்தான் உபயோகிக்க வேண்டுமாம்.
மிகப் பழங்காலத்தில் ஒரு முறை ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான ஆலிவ் எண்ணெய்தான் இருந்ததாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த எண்ணெயிலேயே ஏழு நாளைக்கு தீபம் எரிந்ததாம்.. அதிலிருந்து இந்த விளக்கை ஏழு முகம் கொண்டதாக அமைத்தார்களாம். யூதர்கள் பகுதியில் இருக்கும் மெனோராவின் அடியில் ‘மூன்றாவது கோவிலை நாம் காலத்திற்குள் கட்டிவிடுவோம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
1948-இல் நடந்த இஸ்ரேல்-அரேபிய யுத்தத்தில் ஜெருசலேம் ஜோர்டனின் கீழ் வந்தது. ஜோர்டானிய அரசு இங்கு வாழ்ந்துவந்த யூதர்களை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டது. மறுபடி 1967-இல் நடந்த சண்டையில் ஜெருசலேம் முழுவதையும் பிடித்துக்கொண்ட இஸ்ரேல் மறுபடி யூதர்களை அங்கு குடியேற்றியது. ஆங்காங்கே யூதர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுடைய யூதக்கோவில்களைக் (synagogues) கட்டிக்கொண்டாலும் பழைய நகரத்தில் உள்ள மேற்குச் சுவர் யூதர்களைப் பொறுத்த வரை மிகவும் புனிதமானது.
கி.பி.70-இல் ரோமானியர்கள் யூதர்களின் இரண்டாவது கோவிலை இடித்தபிறகு இது மட்டும் மிஞ்சியிருக்கிறது. ரோமானியர்கள் கோவிலை இடித்த போது இது கோவிலின் சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும் என்றும் இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று நினைத்து அதை இடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று இடிக்காமல் விடப்பட்ட இந்தச் சுவரே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறதென்றால் கோவில் எத்தனை பிரமாண்டமானதாக இருந்திருக்க வேண்டும்! நவீன கட்டடக் கலை உத்திகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கற்களைக் கொண்டே இப்படி ஒரு பிரமாண்டமான மதில் சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இப்போது இது யூதர்களின் தலைசிறந்த புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.
உலகிலுள்ள யூதர்கள் எல்லோரும் இதைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 1948-லிருந்து 1967 வரை இது பாலஸ்தீனர்களின் கையில் இருந்தபோது பல யூதர்களால் இதைத் தரிசிக்க முடியவில்லையாம். அதனால் பலர் மிகவும் சோகப்பட்டார்களாம். எங்கள் அமெரிக்க யூத நண்பர் ஒருவர் அவருடைய தாத்தாவும் பாட்டியும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறியவர்கள் என்றும் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பிறகு அங்கு சென்று இந்தப் புண்ணிய இடத்தைப் பார்க்க விரும்பியதாகவும் ஆனால் அது அப்போது ஜோர்டனின் கீழ் இருந்ததால் அதைப் பார்க்க முடியாமல் போனதாகவும் அதனால் மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் கூறினார்.
இந்த மேற்குச் சுவரை (Western Wall), Wailing Wall என்று கூறுவோரும் உண்டு. இந்தச் சுவரின் முன்னே நின்று யூதர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தப் பகுதி ஆண்களுக்கு ஒரு பெரிய பிரிவாகவும் பெண்களுக்கு ஒரு சிறிய பிரிவாகவும் ஒரு வேலி மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சுவரின் அருகில் நின்று பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு சிறு தாளில் தங்கள் வேண்டுகோளை எழுதிச் சுவரில் உள்ள இடுகல்களில் சொருகிவிடலாம். இறைவன் அந்த வேண்டுகோள்களை நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள். அவர்கள் உருக்கமாகப் பிரார்த்திப்பதால் Wailing Wall என்று இதற்குப் பெயர் வந்ததாம். நாங்களும் எங்கள் வேண்டுதல்களை ஒரு தாளில் எழுதி சுவரில் செருகிவிட்டு வந்தோம். குறை தீர்க்கும் கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன?
இதை அடுத்து இருக்கும் இடத்திற்குப் பெயர் கோவில் குன்று (Temple Mount). இதில் அல்-அக்ஸா (Al-Aksa) என்னும் மசூதியும் குன்றின் மேல் கூண்டு (Dome of the Rock) என்னும் மசூதியும் இருக்கின்றன. இவை இரண்டும் அழிக்கப்பட்ட யூதர்களின் கோவிலின் இடத்தில் கட்டப்பட்டது என்று யூதர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டு மசூதிகளிலும் முஸ்லீம்களின் ஐந்து பிரார்த்தனை நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாது. இந்த இரண்டு மசூதிகளுக்குள்ளும் முஸ்லீம் அல்லாதவர்கள் உள்ளே செல்லவே முடியாது. ஆனால் இந்த மசூதிகளின் வளாகத்திற்குள் முஸ்லீம் அல்லாதவர்களும் போகலாம்.
கோவில் குன்று என்று அழைக்கப்படும் Temple Mount-இல் தான் யூதர்களின் இனத்தை ஸ்தாபித்த ஆபிரகாம், இறைவனின் ஆணைக்கு இணங்கி தன் மகன் ஐஸக்கைப் பலியிடத் தயாரானாராம். இதே இடத்தில்தான் முஸ்லீம் மத ஸ்தாபகரான முகம்மது தன் குதிரையின் மீது ஏறி சொர்க்கத்தை நோக்கிச் சென்றாராம்.
இந்த இரண்டு புராணச் சம்பவங்களாலும் யூதர்களும் முஸ்லீம்களும் இதற்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். புராதன காலத்தில் இவை யூதர்களுக்குச் சொந்தமான இடமாக இருந்தன என்றும் மசூதி இருக்கும் இடத்தில்தான் யூதக் கடவுள் ஒரு கல்லிலிருந்து உலகைப் படைத்தார் என்றும் யூதர்கள் நம்புவதால், அவர்கள் அல்-அஸ்கா மசூதிக்குள் எப்படியாவது சென்று அங்கு வழிபட விரும்புகிறார்கள். அப்படி சிலர் நுழைய முயலும்போது கலவரங்கள் வெடிக்கின்றன.
இவற்றைத் தவிர்க்க இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் யாரும் அங்கு போகாதவாறு அந்த இடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இஸ்ரேல் காவலர்கள் அங்கு போகும் எல்லோரையும் அவர்கள் இஸ்ரேல் பிரஜைகள் அல்ல என்று சரிபார்த்துக்கொள்கிறார்கள். (1967 சண்டைக்குப் பிறகு இந்த இடம் இஸ்ரேலின் கீழ் இருந்தாலும் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த இடங்களின் பராமரிப்பு இப்போது ஜோர்டன் கையிலும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடு இஸ்ரேல் கையிலும் இருக்கின்றன.) எங்களிடமும் எங்கள் பாஸ்போர்ட் பற்றிக் கேட்டார்கள். நாங்கள் எங்கள் பாஸ்போர்ட்டுகளை எடுத்துச் சென்றிருக்கவில்லையாதலால் என் கணவருடைய அமெரிக்க டிரைவர் லைசென்சைச் சரிபார்த்துவிட்டு எங்களை உள்ளே விட்டார்கள்.
கோட்டைச் சுவரில் ஒரு ஒலி-ஒளிக் காட்சி உண்டு. இது கோட்டைச் சுவரின் பின்னணியில் காட்டப்படுகிறது. இஸ்ரேலின் வரலாற்றை ஆதிகாலத்திலிருந்து இயேசு காலம் வரை யூதர்களின் பார்வையில் இக்காட்சி காட்டுகிறது. அந்தச் சூழ்நிலையும் பிரமாண்டமான காட்சியமைப்பும் நம்மை புராதன காலத்திற்கே கொண்டுசெல்கின்றன. இந்தக் காட்சி இரவில் நடக்கிறது.
பகலில் சுவரில் உள்ள பல அறைகளில் இஸ்ரேலின் வரலாற்றுக்கால நிகழ்ச்சிகளை காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள். இவற்றில் ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களின் மீது யார், எப்போது, எதற்குப் படையெடுத்தார்கள் என்பதை விளக்கமாகக் காணலாம். ஒரு அறையில் வரலாற்றைத் திரைப்படமாகக் காட்டுகிறார்கள். கோட்டைச் சுவரின் உச்சியில் ஒரு தொலைநோக்கிக் கருவி இருக்கிறது. ஜெருசலேமின் முக்கியமான இடங்களை விளக்கும் ஒலிப் பேழையை வைத்துக்கொண்டு தொலைநோக்கி மூலம் பார்த்தால் ஜெருசலேமின் வரலாறும் சிறப்பும் நம் கண் முன்னே நிற்கும்.
நாகேஸ்வரி அண்ணாமலை
(தொடரும்)