இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் – பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே வெறும் 67 வார்த்தைகள்தான் என்றால் நம்புவீர்களா?
ஆம், அந்த ஆவணத்தில் இருந்த ஒரு பக்கத்தில் 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே தற்போது நடைபெறும் மோதலில் இருதரப்பும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 1,400 பேரும், காஸா பகுதியில் 8,500க்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளம்பரம்
தற்போது மட்டுமின்றி, பல ஆண்டுக்காலமாக நிலவும் இந்த மோதல் போக்கிற்கு அடித்தளமே 106 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட ஒரு பிரகடனம்தான். அதன் பெயர் பால்ஃபோர் பிரகடனம்.
இந்த வரலாற்று ஆவணம் தான் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாவதற்கே வழிவகுத்தது. இந்த ஒற்றை ஆவணம்தான் மத்திய கிழக்கின் வரலாற்றையும் மாற்றி எழுதியது.
பாலத்தீனத்தில் உள்ள யூத குடியிருப்பைப் பார்வையிட்ட ஆர்தர் பால்ஃபோர். (Arthur Balfour)
அந்நாள் நவம்பர் 2, 1917. முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். அன்றைய தினம், யூத மக்களுக்கு பாலத்தீனத்தில் தாயகம் அமைப்பதை பிரிட்டன் ஆதரித்தது.
பாலத்தீன பகுதியை பிரிட்டன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டம் அது. அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியின் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருந்தது.
ஒருபுறம், பால்ஃபோர் (Balfour Declaration) பிரகடனத்தை இன்றைய நவீன இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான அடித்தளமாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பலர் பார்த்தனர். ஆனால், மற்றொருபுறம் இந்த பிரகடனம் தங்களுக்கு துரோகம் செய்வதாக அரபு உலகின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.
அவர்கள் அப்படி நினைப்பதற்கும் காரணம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டோமன் பேரரசுக்கு எதிரான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போரில் அரேபியர்கள் பிரிட்டிசாருக்கு ஆதரவளித்தனர்.
பால்ஃபோர் பிரகடனத்திற்குப் பிறகு, சுமார் ஒரு லட்சம் யூதர்கள் அந்தப் பகுதியை அடைந்தனர்.
பால்ஃபோர் பிரகடனம் என்ன சொல்கிறது?
பால்ஃபோர் பிரகடனம்
அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஆர்தர் பால்ஃபோர் (Arthur Balfour)இந்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் பரோன் லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்டுக்கு அனுப்பினார். அந்த நேரத்தில் பிரிட்டனில் குடியேறிய யூத சமூகத்தின் உயரிய தலைவராக பரோன் லியோனல் இருந்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புள்ள ரோத்ஸ்சைல்ட்,
யூத மக்களின் விருப்பங்களுக்கு ஆதரவான இந்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மாட்சிமை பொருந்திய அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
“யூத மக்களுக்கு பாலத்தீனத்தில் தாயகம் அமைக்கப்படுவதற்கு பிரிட்டனின் மாட்சிமை பொருந்திய அரசாங்கம் ஆதரவாக உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்துகொடுக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது.
ஆனால், அதே நேரத்தில் ‘பாலத்தீனத்தில் வாழும் யூதர் அல்லாத மக்களின் மத மற்றும் சமூக உரிமைகள் அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் யூத மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் நிலை எதையும் மோசமாகப் பாதிக்கக் கூடாது’ என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”
இந்த அறிக்கை பற்றிய தகவல்களை நீங்கள் சயனிச (யூதவாதம்) (Zionist) கூட்டமைப்புக்கு அனுப்பினால் நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் (Arthur Balfour)
ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் யார்?
பால்ஃபோர் பிரகடனத்திற்கு ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோரின் பெயரிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜ் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்தார் பால்ஃபோர்.
பிரிட்டனின் மேல்தட்டு வகுப்பில் இருந்து வந்த ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்தவுடன், பழமைவாத கட்சியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் 1902 முதல் 1905 வரை பிரிட்டனின் பிரதமராகவும் இருந்தார்.
பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை திட்டங்களுக்கு வடிவம் கொடுப்பதில் அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி செலவிடப்பட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்ற வாதத்தை ஆதரித்தவர் பால்ஃபோர். சயனிசம் ஒரு அரசியல் சித்தாந்தமாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் தோன்றியது.
பாலத்தீன பகுதியில் யூதர்களுக்காக ஒரு நாடு உருவாக வேண்டும் என்று இந்த சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் விரும்பினர்.
இந்த அறிக்கைக்காக போர்க்கால ((War cabinet) )அமைச்சரவையை சமாதானம் செய்த பெருமை ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர்டை சேரும்.
இதற்காக, பால்ஃபோர் பிரிட்டனின் செல்வாக்குமிக்க யூத தலைவர்களான சாய்ம் வெய்ஸ்மேன் மற்றும் லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்ட் ஆகியோரின் ஆதரவையும் பெற்றார்.
அவர் ஒரு கிறிஸ்தவ சயனிஸ்ட் என்று சிலர் நம்புகின்றனர். பைபிளின் பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள யூதர்களின் வரலாற்றில் அவர் கொண்டிருந்த ஆர்வத்திலிருந்து இந்த பிரச்னையில் அவர் ஆர்வம் காட்டினார்.
இருப்பினும், அரசியல் ஆதாயத்திற்காக இஸ்ரேலின் திட்டத்தை ஆதரிப்பதிலும் பால்ஃபோர் ஆர்வம் காட்டியதாக சிலர் நம்புகின்றனர்.
லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்ட் யார்?
Lionel Walter (Walter) Rothschild (1868-1937)
லண்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்ட் இந்த கடிதத்தைப் பெற்றார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தை வால்டரின் வீட்டு முகவரிக்கு அனுப்பியிருந்தார் பால்ஃபோர்.
வால்டர் அந்த நேரத்தில் பிரிட்டனில் அதிகாரமிக்க வங்கி சார்ந்த வணிக குடும்பத்தின் தலைவராக இருந்தார். மேலும் பிரிட்டனில் வாழும் யூத சமூகத்தின் முக்கியத் தலைவராகவும் இருந்தார்.
இந்த பணக்கார – ரோத்ஸ்சைல்ட் சர்வதேச வங்கி குடும்பம் பாலத்தீனத்தில் யூத அரசு உருவாவதற்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வழங்கியது.
அதே குடும்பத்தைச் சேர்ந்த எட்மண்ட் ரோத்ஸ்சைல்ட் என்பவர், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாலத்தீனத்தில் ஏராளமான நிலங்களை வாங்கி, அங்கு யூதர்களின் குடியேற்றங்களை நிறுவ பெரும் தொகையை முதலீடு செய்தார்.
அந்த நேரத்தில் ரோத்ஸ்சைல்ட் குடும்பம் உலகின் பணக்கார வணிக நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. சயனிசத்தின் நோக்கத்திற்காக இந்த குடும்பம் செய்த பொருளாதார உதவி மிகப் பெரியது. இதன் காரணமாக, எட்மண்ட் ரோத்ஸ்சைல்ட் ‘கொடை வள்ளல்’ என்று அழைக்கப்பட்டார்.
பால்ஃபோர் பிரகடனத்தை நினைவுகூரும் இஸ்ரேலிய சிறப்பு தபால் தலை.
இந்த குடும்பம் இஸ்ரேலிய தேசத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது.
பால்ஃபோர் பிரகடனம் பற்றிய தகவல்களைக் கொண்ட கடிதம் 1917 இல், லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்டுக்கு அனுப்பப்பட்டது என்பதிலிருந்து ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.
இந்தக் கடிதம் ஸ்டூவர்ட் சாமுவேலுக்கு அனுப்பப்படாமல் லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்டுக்கு அனுப்பப்பட்டது ஏன் என்றும் பலர் ஆச்சரியப்படுகின்றனர்.
ஸ்டூவர்ட் சாமுவேல் (Sir Stuart Samuel Dies) பிரிட்டிஷ் யூதர்களின் ‘பிரதிநிதிகள் வாரியத்தின்’ தலைவராக இருந்தார். இந்த அமைப்பு பிரிட்டனில் யூதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
பாலத்தீனத்தில் யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பகுதியிலிருந்து வெளியேறும் யூத போலீசார், 1938இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆனால், இதில் இன்னொரு அம்சம் என்னவெனில், அக்காலத்தில் பிரிட்டிஷ் யூதர்களின் ‘பிரதிநிதிகள் வாரியத்தில்’ சயனிசம் தொடர்பாக எதிர் கருத்துகள் இருந்தன. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
இதில், வால்டர் ரோத்ஸ்சைல்டின் நிலை நடுநிலையானது. அதே நேரத்தில், சைம் வெய்ஸ்மானுடன், வால்டர் சயனிச சார்பு தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோருடன் ரோத்ஸ்சைல்ட் நேரடித் தொடர்பு கொண்டிருந்தார். எனவே, பால்ஃபோர் இந்த கடிதத்தை ரோத்ஸ்சைல்டுக்கு அனுப்ப முடிவு செய்தார்.
இந்த அறிக்கையை உருவாக்குவதில் ரோத்ஸ்சைல்ட் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்றை ஆதரிக்க எந்த உண்மை தகவல்களும் இல்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1925இல், ரோத்ஸ்சைல்ட் பிரிட்டிஷ் யூதர்களின் ‘பிரதிநிதிகள் வாரியத்தின்’ தலைவரானார்.
கடிதத்தின் நோக்கம் என்ன?
இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் வாழும் யூதர்களை உலகப் போரின் போது நேச நாடுகளின் பக்கம் நிற்கச் செய்ய முடியும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பியது.
பிரிட்டிஷ் தலைவர்களும் சில வரலாற்றாசிரியர்களும், யூத சமூகம் பண பலத்தால் போரில் அவர்களை ஆதரிக்கும் அளவுக்கு பொருளாதார சக்தியைக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள்.
போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் தங்களது பிடிப்பைத் தக்க வைத்துக்கொள்ள பிரிட்டன் விரும்பியதாகப் பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
கடிதம் எழுதுவதற்குப் பின்னால் உள்ள நோக்கம் எதுவாக இருந்தாலும், 1948இல் இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்களின் வெளியேற்றம் ஆகியவற்றில் ஒரு திட்டவட்டமான தாக்கத்தை நிச்சயமாக அக்கடிதம் ஏற்படுத்தியது.
இஸ்ரேலியர்கள் கொண்டிருந்த தேசத்தின் மீதான கனவுக்கு இந்த பிரகடனம் சிறகுகளை வழங்கியது. ஆனால், இது பாலத்தீனியர்களுக்கு பிரச்னையான நாட்களின் ஆரம்பம்.
ஜெருசலேமில் யூத மக்களுக்கு எதிராக பாலத்தீனியர்கள் நடத்திய போராட்டம், 1937க்கு முந்தைய படம்.
பாலத்தீனியர்கள் கூட அந்த ஆவணத்தில் அவர்கள் யூதர்கள் அல்லாத சமூகம் என்று விவரிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
முதல் உலகப்போரில் ஓட்டோமன் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, பால்ஃபோர் பிரகடனம் நேச நாடுகளின் ஆதரவைப் பெற்றது. மேலும் அது லீக் ஆஃப் நேஷன்ஸால் அங்கீகரிக்கப்பட்டது. லீக் ஆஃப் நேஷன்ஸ் என்பது ஐக்கிய நாடுகள் சபையைப் போன்ற ஓர் அமைப்பு.
இந்த ஒப்புதலின் மூலம், இப்பகுதியின் நிர்வாகப் பொறுப்பை பிரிட்டன் பெற்றது.
உள்ளூர் அரேபிய மக்கள் 1930களில், இப்பகுதியில் அதிகரித்து வரும் யூத மக்கள்தொகை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். இரு சமூகத்தினருக்கும் இடையே தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத அரசை அமைப்பதற்கான கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனியில் என்ன நடந்ததோ அது இந்தக் கோரிக்கைக்கு மேலும் வலுவூட்டியது.
பாலத்தீனத்திற்கான பிரிட்டிஷ் ஆணை, 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நள்ளிரவில், முடிவுக்கு வந்தது. மேலும், பிரிட்டன் முறையாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியது. அதே நாளில் இஸ்ரேல் தனது சுதந்திரத்தை அறிவித்தது.
பலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது எப்படி?