தற்போது பெய்து வருகின்ற கடும் மழையுடனான வானிலையை அடுத்து ஏற்பட்ட மண்சரிவில், இரண்டு யுவதிகள் சிக்குண்டு மரணமடைந்துள்ளனர் என ஹாலி-எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹாலிஎல உடுவர 6, மைல்கல் கண்டகொல்ல பத்தனை பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று (22) பிற்பகல் மண்மேடு வீழ்ந்துள்ளது.
அதில் சிக்குண்ட இரண்டு யுவதிகளும், மீட்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தனர் என ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதான ஏ.கீர்த்தினா (21) மற்றும் 22 வயதுடைய மற்றுமொரு யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனமழை பெய்து வரும் நிலையில், இந்த இரண்டு இளம்பெண்களும் வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் படுத்திருந்தபோது, திடீரென வீட்டின் மீது மண்மேடு விழுந்து, அதன் கீழ் இருவரும் புதையுண்டனர்.
வீட்டார் வந்தபோது, வீட்டின் படுக்கையறைக்குள் மண் மேடு விழுந்து கிடந்ததையும், அறை முழுவதும் மண்ணால் மூடப்பட்டிருப்பதையும் பார்த்தார்.
அதன்பின்னர், அக்கம்பக்கத்தினருடன் இணைந்து இவ்விருவரையும் மீட்டு வைத்திசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். எனினும், அவ்விருவரும் மரணமடைந்துவிட்டனர்.