ஓட்டுநர் கியரை மாற்றி, பேருந்தைப் பின்னோக்கிச் செலுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாகப் பயணிகள் காத்திருந்த நடைமேடைமீது பேருந்து ஏறி, அங்கிருந்த பயணிகள்மீது மோதியது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவிலுள்ள பண்டித நேரு பேருந்து நிலையத்தில், குண்டூருக்குச் செல்லும் ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்துக் கழக மெட்ரோ சொகுசு ஏ.சி பேருந்து, காலை 8:30 மணியளவில் நின்றது.

அப்போது சுமார் 20 பயணிகள் பேருந்தில் ஏறினர். குண்டூருக்குப் புறப்படவிருந்த பேருந்தை, ஓட்டுநர் எம்.பிரகாசம் இயக்கினார்.

பேருந்து கியரை மாற்றிப் பேருந்தைப் பின்னோக்கிச் செலுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாகப் பயணிகள் காத்திருந்த நடைமேடைமீது பேருந்து ஏறி, அங்கு காத்திருந்த பயணிகள்மீது மோதியது.

இதில், நடத்துநர் யட்லபள்ளி வீரைய்யா, பயணி மோட்டானி குமாரி (45), அவரின் 10 மாத பேரன் காதி ஆயன்ஷ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்துக் கழக துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான துவாரகா திருமலா ராவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நிலைமையை ஆய்வுசெய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்து நல்ல நிலையில் இருப்பதால், விபத்துக்கான உண்மையான காரணங்களை நிபுணர்கள்குழு கண்டறியும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதோடு, காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவையும் ஏற்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

இந்த விபத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஓட்டுநர் எம்.பிரகாசம் 30 ஆண்டுகளுக்கு முன்பு டெக்னீஷியனாகப் பணியில் சேர்ந்ததாகவும், பின்னர் ஓட்டுநரானதாகவும் கூறப்படுகிறது.

61 வயதான இவர் சமீபகாலமாக விஜயவாடா – பெங்களூரு இடையே அதி சொகுசு பேருந்துகளை ஓட்டிவந்திருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கும் பிரகாசத்தின்மீது எந்த விபத்துப் பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகின்றன.

Share.
Leave A Reply