உலகையே பெரும் அச்சத்தில் சிக்கவைத்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக இன்று (23) நிறுத்தப்பட்டுள்ளது.

பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இஸ்ரேலுடனான நான்கு நாட்கள் போர் நிறுத்தம் இன்று காலை 10 மணி முதல் அமுலுக்கு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போர் 40 நாட்களை கடந்து தீவிரமாக நடந்து வந்தது. மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்பு என்று மொத்த காசாவும் இஸ்ரேலின் தரைவழி, வான் வழி தாக்குதல்களினால் பேரழிவினை சந்தித்துள்ளமையால் இந்த போரை நிறுத்துமாறு உலகம் முழுவதிலும் இருந்து பலத்த குரல்கள் எழுந்தன.

ஆனால், ஹமாஸை முற்றாக அழித்தொழிப்பதாக சபதம் எடுத்த இஸ்ரேல் பிரதமர் காசா மீதான தன் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளார்.

இதற்கு மேற்கத்தேய நாடுகளின் தலைமைகள் ஆதரவு வழங்கினாலும், ஐ.நா. போரை நிறுத்துமாறு தொடர்ந்து குரல் எழுப்பியது.

அதேபோல உலகம் முழுவதிலும் இருந்து இந்த போரை நிறுத்துமாறு மக்களும் பல போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தனர். இந்நிலையில், இன்று காலையில் இருந்து யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி, காஸாவில் இருந்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

300 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இவர்களில் 121 பேர் சிறுவர்கள்.

இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை 10 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இருப்பினும், இது போர் நிறுத்தம் அல்ல என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.

இது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.

ஆனால், சில தலைவர்கள் இன்னும் நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போர்நிறுத்தம் சற்று மன நிம்மதியை காசா மக்களுக்கு வழங்கினாலும், ‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும்.

ஹமாஸை முழுவதுமாக அழித்து, பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு.

அதேநேரம், அனைத்து பிணைக் கைதிகளை திரும்பப் பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும்’’ என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த போர் நிறுத்தம் என்பது உலகை பொறுத்தவரையில், மிகவும் அவசியமானது. காரணம், பிணை கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தால், அது, மேலும் தீவிரமானதாவே இருக்கும். அது மொத்த காசாவையும் உரு தெரியாமல் அழித்துவிடக்கூடும். அது பெரும் பேரழிவாகவே இருக்கும்.

எனவே, அது நடப்பதற்கு உலக நாடுகள் உறுதுணையாக இருக்கக் கூடாது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிரந்தர போர் நிறுத்தமாக்கி காசாவில் மீண்டும் அமைதி துளிர் விட உலக நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவா!

 

 

 

Share.
Leave A Reply