திருமணம் மீறிய உறவில் இருந்த ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள தேங்காய் பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், வயது 40.

இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

குடும்பத்தை உள்ளூரிலேயே விட்டுவிட்டு, சந்திரசேகர் மட்டும் கட்டடக் கூலி வேலைக்காக பெங்களூருக்குச் சென்று தங்கியிருந்தார்.

மாதத்துக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து மனைவி, பிள்ளைகளைப் பார்த்துவிட்டுச் செல்வதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த பூஜா என்ற 26 வயது பெண்ணுடன் சந்திரசேகருக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில், இருவரும் நெருங்கிப் பழகியதால், திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கின்றனர். பூஜாவுக்கும் திருமணமாகி, கணவரும், 6 வயதிலும், 4 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், பூஜாவின் நடத்தையில் அவரின் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பூஜாவை அவர் கண்டித்திருக்கிறார்.

ஆனாலும், திருந்தாத பூஜா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவருக்குத் தெரியாமல், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு திருமணம் மீறிய உறவில் இருந்த சந்திரசேகருடன் தலைமறைவானார்.

பூஜாவை அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவந்த நிலையில், கடந்த வாரம் காதலன் சந்திரசேகருடன் அவரது சொந்தக் கிராமமான வாணியம்பாடி தேங்காய் பட்டறை கிராமத்துக்கு வந்திருக்கிறார். கணவன் இன்னொரு பெண்ணுடன் ஊருக்கு வந்திருப்பதைப் பார்த்து, சந்திரசேகரின் மனைவி அதிர்ந்துபோனார்.

சந்திரசேகரின் குடும்பத்தினரும், அவரின் உறவினர்களும் ‘இது தவறானச் செயல்’ எனக் கண்டித்திருக்கின்றனர்.

ஆனாலும், யார் சொல்லையும் கேட்காமல், எந்தக் கவலையுமின்றி சந்திரசேகர் தன்னுடைய காதலி பூஜாவை அழைத்துக்கொண்டு அதே பகுதியிலுள்ள தென்னந்தோப்பு வீட்டில் வாடகைக்குத் தங்கி, குடும்பம் நடத்தத் தொடங்கினார். மனைவி பூஜா, சந்திரசேகருடன் ஊரில் இருப்பதைத் தெரிந்துகொண்ட பூஜாவின் கணவர், நேற்றைய தினம் உறவினர்களுடன் தேங்காய் பட்டறை கிராமத்துக்கு வந்தார்.

பிள்ளைகள் தாய்ப் பாசத்துக்கு ஏங்குவதைத் தெரியப்படுத்தி, அறிவுரை கூறி மனைவியை உடன் வருமாறு அழைத்திருக்கிறார்.

கணவருடன் செல்ல மறுத்த பூஜா, ‘காதலன் சந்திரசேகர்தான் வேண்டும்’ என்று பிடிவாதமாக இருந்தாராம். பூஜாவை விட மறுத்து, சந்திரசேகரும் தகராறு செய்திருக்கிறார்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த சந்திரசேகரின் மனைவியும், குடும்பத்தினரும் ‘உனக்கு அசிங்கமாக இல்லையா, இன்னொருவரின் மனைவிக்காக இப்படித் தகராறு பண்றே…’ என்று கொதித்திருக்கின்றனர்.

இதனால், விரக்தியடைந்த சந்திரசேகர் வீட்டின் அருகேயுள்ள கிணற்றுப் பகுதிக்கு ஓடிப்போய், அதில் குதித்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனாலும், சந்திசேகர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.

இதை கவனித்துக்கொண்டிருந்த அவரின் காதலி பூஜாவும் ஓடிப்போய், அருகேயிருந்த மற்றொரு கிணற்றில் குதித்து, தனது உயிரை மாய்த்துகொண்டார்.

இது பற்றி, வாணியம்பாடி தாலுகா போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீஸார், கிணறுகளில் மூழ்கிக்கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

 

Share.
Leave A Reply