தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன்.
இவருக்கு 27 வயதாகிறது. சென்னையில் லொறி சாரதியாக பணியாற்றி வந்த அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் திகதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்.
அசோக்ராஜன் சென்னைக்கு சென்று சேர்ந்துவிட்டாரா எனக் கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது மொபைலுக்கு உறவினர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டுள்ளார்.
ஆனால், அசோக்ராஜன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஊருக்கு போன அசதியில் உறங்கிக்கொண்டிருப்பார் என நினைத்த பாட்டி, சிறிது நேரம் கழித்து மீண்டும் உறவினர் மூலம் அசோக்ராஜ் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போதும், அவரது எண் ஸ்விட்ச் ஆஃப்பிலேயே இருந்துள்ளது.
தன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை.
இதனால், பயந்துபோன பாட்டி பத்மினி சோழபுரம் பொலிசில் கடந்த 15 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.
பாட்டி பத்மினி கொடுத்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் சோழபுரம் கடைத் தெருவில் உள்ள சி.சி.டி.வி., கெமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர், மீண்டும் திரும்பாதது தெரியவந்தது.
இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை என அசோக்ராஜன் எழுதியதாக இருந்தது. இதுவரை இதுபோன்ற சிக்கல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறிய குடும்பத்தாரும் நண்பர்களும், அசோக்ராஜன் ஊருக்கு வந்தபோது சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தி என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக பொலிசாரிடம் கூறியுள்ளனர்.
இதன் அடிப்படையில், பொலிசார் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்திக்கும் அசோக்ராஜனுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொலிசார் கடந்த 17ம் திகதி, கேசவமூர்த்தியை அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி என்னிடம் அழுதார். பின்னர், நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதுதான் நடந்தது எனத் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து சலித்துப்போன பொலிசார், தங்கள் பாணியில் விசாரணையைத் துவக்கியுள்ளனர். அப்போது, பொலபொலவென நடந்ததை கொட்டி பொலிசாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. அவர் சொல்வதைக் கேட்கும்போதே குமட்டும் அளவுக்கு கொடூரம் வெளிப்பட்டுள்ளது.
கேசவமூர்த்தியிடம் பொலிஸ் நடத்திய விசாரணையில், ஆண்மை குறைபாட்டைப் போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளாக தயாரித்து விற்பனை செய்திருக்கிறார்.
மூலிகை செடிகளை வைத்து ‘கிறுக்கி முறுக்கி’ என்ற மருந்தைத் தயாரித்து, அதை தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கேசவமூர்த்தியிடம் அழுதார்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய கேசவமூர்த்தி, இதையே காரணமாக வைத்து அவரை மசியவைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். ஆனால், அசோக்ராஜன் இதை மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த அசோக்ராஜன், நாட்டு மருத்துவர் கேசவமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது, அசோக்ராஜனுக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்த கேசவமூர்த்தி, அந்த மருந்தை சாப்பிட வைத்துள்ளார்.
அதன் பிறகு, அசோக்ராஜனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
பிறகு அசோக்ராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதில், எங்கே நாம் சிக்கிக்கொள்வோமோ என அஞ்சிய கேசவமூர்த்தி, அசோக்ராஜின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் உள்ளே புதைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், அசோக்ராஜனின் பிறப்புறுப்பை வெட்டி தனியாகப் புதைத்துள்ளார்.
மேலும், அவரது உடலில் இருந்த இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து அதனை சமைத்து சாப்பிட்டும், தான் வளர்க்கும் நாய்க்கும் விருந்தாகப் படைத்துள்ளார் கேசவமூர்த்தி.
இதனை எல்லாம் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் கேசவமூர்த்தி சொன்னதைக் கேட்டு பொலிஸார் அதிர்ந்துள்ளனர்.
நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டில் இருந்து பொலிஸார் ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர்.
அதில் 190க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் இருக்கிறது.
அதில் உள்ளவர்களை என்ன செய்தார். அதில் யாரையேனும் கொலை செய்துள்ளாரா என பொலிஸ் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆர்.டி.ஓ., பூர்ணிமா, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர் சித்திக், தடயவியல் நிபுணர்கள் மற்றும் பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜனின் உடலை வெளியில் எடுத்து, அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.
மேலும், அப்பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் சிலர் மாயமானது தொடர்பாக, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் பொலிசார், அவரது வீட்டின் உள்ளே ஏதேனும் உடல் புதைக்கப்பட்டுள்ளதா எனத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு காணாமல் போனதாகத் தேடப்பட்டு வரும் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த அனஸ் என்ற இளைஞரை இதேபோல் அதிக அளவில் மருந்து கொடுத்துக் கொன்று புதைத்ததை கேசவமூர்த்தி ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், கேசவமூர்த்தி வீட்டில் தோண்டிப் பார்த்தபோது அனஸ் காணாமல் போனபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் உடன் கூடிய தாடை பகுதி ஒன்று கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
அதனால் அனஸ் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
நாட்டு வைத்தியர் இத்தனை நாட்களாக செய்திருக்கும் செயலைக் கேட்டு அப்பகுதியினர் நடுக்கத்தில் உறைந்துள்ளனர்.