பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்துச்செல்லாததால் கோபத்தில் மனைவி குத்தியதில் கணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பதிகள் எவ்வளவுதான் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சிறுசிறு பிரச்னையில் அவர்களுக்குள் சண்டை வராமல் இருப்பதில்லை.
அதுவும் திருமண நாள் மற்றும் மனைவியின் பிறந்தநாளை மறந்துவிடும் கணவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.
மகாராஷ்டிராவில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்துச்செல்லாத கணவன் தனது மனைவியின் தாக்குதலில் உயிரை பறிகொடுத்துள்ளார்.
புனேயில் உள்ள வனவ்டி என்ற இடத்தில் வசித்தவர் நிகில் கண்ணா(36). ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிகில் சொந்தமாக பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவரின் மனைவி ரேணுகா(38). இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ரேணுகாவின் பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரேணுகா தனது பிறந்தநாளை துபாய் அழைத்துச்சென்று கொண்டாடவேண்டும் என்று தனது கணவரிடம் தெரிவித்தார்.
அதற்கு நிகில் சம்மதிக்கவில்லை. அப்படி முடியாத பட்சத்தில் டெல்லிக்கு தனது சகோதரரின் மகள் பிறந்த நாளுக்கு செல்லலாம் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதற்கும் நிகில் சாதகமான பதில் சொல்லவில்லை. அதோடு ரேணுகாவின் பிறந்த நாளுக்கு நிகில் கண்ணா விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் எதையும் வாங்கிக்கொடுக்கவில்லை.
நிகில் வாங்கிக்கொடுத்த பரிசுப்பொருள் ரேணுகாவிற்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் இப்பிரச்னைகள் தொடர்பாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்நேரம் வீட்டில் யாரும் இல்லை. கோபத்தில் ரேணுகா தனது கணவரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
இதில் நிகில் முகத்தில் சில பற்கள் உடைந்தன. அதோடு மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது. மேலும் நிகில் மயங்கி விழுந்தார்.
உடனே ரேணுகா தனது மாமனாருக்கு தகவல் கொடுத்து அவரை வரவழைத்து தனது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
கையால் வேகமாக குத்தியதில் அளவுக்கு அதிகமாக மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி சிகிச்சை பலனலிக்காமல் நிகில் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து போலீஸார் 302வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபத்தில் ரேணுகா செய்த செயல் அவரது கணவரின் உயிரை குடித்துவிட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சஞ்சய் கூறுகையில்,”ரேணுகா போதையில் எதாவது ஆயுதத்தைக்கொண்டு தாக்கி இருக்கவேண்டும் என்று கருதுகிறோம். இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.