உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 14ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பே மீட்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், சற்று நேரத்தில் அவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஏன் தாமதமாகிறது? மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள தடங்கல் என்ன? விரிவாக பார்க்கலாம்..
வெளியே இருந்து சுரங்கப்பாதைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் வரையிலும் 53மீ நீளம் கொண்ட 6 இன்ச் குழாய் கடந்த 20ஆம் தேதியன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இரவு பகலாக 9 நாட்கள் நடந்த மீட்புப் பணியில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. இந்த குழாய் ஊடாகவே உணவு, ஆக்சிஜன், குடிநீர் உள்ளிட்டவை தற்போது அனுப்பப்படுகின்றன.
இத்தகைய சூழலில் கடந்த 23ஆம் தேதி மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டின. 60 மீட்டர் இடிபாடுகளுக்கு ஊடாக இன்னும் ஒரு சில மீட்டர்களே துளையிட வேண்டி இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக துளையிடும் இயந்திரத்தில் (Auger) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, குழாய்களுக்கு ஊடாக பொருத்தப்பட்டிருந்த துளையிடும் இயந்திரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டி இருந்ததால் மீட்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது.
மீட்புப் பணி முடிய ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆக வாய்ப்பு
துளையிடும் இயந்திரத்திற்கு பதிலாக வேறு முறையில் துளையிடுவது குறித்து தற்போது சிந்தித்து வருவதாக சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, மனிதர்களைக் கொண்டு துளையிட திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தற்போது செங்குத்தாக துளையிடும் யோசனை பரிசீலனையில் இருப்பதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதற்காக 12 பேர் கொண்ட குழு தயார் நிலையில் இருப்பதாகவும் ஏ.என்.ஐ. கூறுகிறது.
செங்குத்தான துளை என்பது சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து 85 முதல் 90 மீட்டர்களுக்கு துளை இடப்படும். இதற்கு 5 முதல் 6 நாட்கள் வரை காலம் எடுக்கலாம் என அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிகிறது.
அதே நேரம், ஊடகங்களிடம் பேசிய சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ், கிறிஸ்துமஸுக்குள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவசரம் காட்டினால் அது வேறு பிரச்னைக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து
அர்னால்ட் டிக்ஸ், மீட்புப் பணியில் உள்ள சர்வதேச நிபுணர்
தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து வழிகளிலும் மீட்புக் குழுவினர் முயற்சித்து வருவதாக உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதிக்கு மிக அருகில் சென்றபோது ஆகர் எந்திரம் சேதமடைந்துவிட்டது.
அதற்கு மாற்றாக ஐதராபாத்தில் இருந்து ப்ளாஸ்மா கட்டர் எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது என புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறினார். ப்ளாஸ்மா கட்டர் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 4 மீட்டர் வரை துளையிடும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
தொழிலாளர்களின் முதல் வீடியோ
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட குழுவினர், ஆறு இன்ச் குழாயை நிறுவுவதில் வெற்றி கண்டுள்ளதாகக் கூறியிருந்தனர்.
அந்தக் குழுாயின் மூலம் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் வழங்க முடியும் என்றும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையும் நடத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் அன்ஷு ம் கல்கோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, “சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பல்வேறு முயற்சிகளில் நாங்கள் முதல் வெற்றியை அடைந்துள்ளோம்.
இதற்காக நாங்கள் கடந்த ஒன்பது நாட்களாக பணியாற்றி வருகிறோம். இதுவே அவர்களை மீட்கும் முயற்சியின் முதல்படி, இதுவே எங்கள் முன்னுரிமை,” என அவர் கூறியுள்ளார்.
சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சேகரிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் அங்கு வந்து சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் புதிதாக நிறுவப்பட்ட குழாய் வழியாக கேமராவைச் செலுத்தி சிக்கியிருப்பவர்களை படம்பிடித்திருக்கிறார்கள். அந்த வீடியோவை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்கப் பாதை
இந்த குழாய் மூலமாக உணவுப் பொருள்களைப் பெற்று உண்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் புதிய நம்பிக்கை பிறந்தது.
“பிஆர்ஓ நிறுவனம் உத்தரகாசி பக்கத்திலிருந்தும் மற்றும் பர்கோட் தளத்தில் இருந்தும் சாலை அமைக்கிறது. இயந்திரங்கள் மிகவும் கனமாக உள்ளதால், அவற்றை விமானத்தில் கொண்டு வர முடியாது. அவற்றை சாலை வழியாக மட்டுமே கொண்டு வர வேண்டும். இப்போது நாங்கள் இயந்திரங்களுக்காக காத்திருக்கிறோம்,” என்றார் அன்ஷு ம் கல்கோ.
இதைத் தவிர, டிஆர்டிஓ சார்பில் 20 கிலோ மற்றும் 50 கிலோ எடையுள்ள இரண்டு ரோபோக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக கல்கோ தெரிவித்தார்.
“இந்த ரோபோ நிலத்தின் மேற்பரப்பில் நடந்து முன்னோக்கி நகர்கிறது, ஆனால் சுரங்கப்பாதையில் உள்ள தரையில் மணல் இருப்பதால், ரோபோ அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பதில் சந்தேகம் உள்ளது” எனக்கூறினார்.