ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது என்று தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் எனப் பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகளால் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று உலகம் முழுவதும் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா எனக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது :- மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது.

”ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என கூறிய எந்த நாடும் இதுவரை உதவவில்லை.” மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது.

தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது, என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோவில் பேசியது தமிழீழ தலைவர் பிரபாகரனின் உண்மையான மகள் தானா..? என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply