2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் முதற்கட்டமாக 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதேபோன்று ஓய்வூதியக்காரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டதுடன், அதில் 5,000 ரூபாவை ஏப்ரல் மாதத்திலும் மீதித் தொகையை ஒக்டோபர் மாதத்திலும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஓய்வூதியக்காரர்களுக்கு ரூ.2,500 வழங்கவும் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அரச வருமானப் பிரிவின் கூட்டத்தில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உரிய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் ஒரு பகுதியை வழங்குவது குறித்தும், ஜனவரி மாதம் முதல் 5,000 ரூபாவும், ஏப்ரல் மாதம் 10,000 ரூபாயும் வழங்குவது குறித்தும் அங்கு விவாதிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் 2003ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் நிதி நிலை அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, சம்பள அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த முடியுமெனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் கடந்த 23ஆம் திகதி அரசாங்க வருவாய் பிரிவு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

2023 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான வருவாய் சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்து வரி வருவாய் வசூல் மதிப்பீடும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தின்படி, நவம்பர் 21 ஆம் திகதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,457 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

சுங்க வருமானம் 842 பில்லியன் ரூபாவாகவும், கலால் வருமானம் 70 பில்லியன் ரூபாவாகவும், இந்த நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட மொத்த வருமானம் 2,446 பில்லியன் ரூபாவாகும். மற்றைய நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் 29 பில்லியன் ரூபாவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply