இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே, பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா-தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதையை அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், நவம்பர் 12ஆம் திகதி சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டு, உள்ளே பணியிலிருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர். பின்னர், பல்வேறு குழுக்களின் 17 நாள்கள் பெரும் போராட்டத்துக்குப் பின்னர், ஒருவழியாக அவர்கள் அனைவரும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இதில், முழுக்க முழுக்க இயந்திரங்களின் உதவியுடன் சுரங்கத்துக்குள் துளையிட்டு, சிக்கியிருந்த சுரங்கப் பணியாளர்கள் மீட்கப்பட்டாலும்கூட, கடைசி நேரத்தில் கைகொடுத்தவர்கள் என்னவோ எலித்துளைச் சுரங்கப்பணி நிபுணர்கள்தான். மீட்புப்பணியின் 13ஆம் நாளிலேயே முக்கால்வாசிப் பணிகள் முடிந்துவிட்டதாக, மீட்புக்குழுக்கள் நம்பிக்கை தெரிவித்தன.
ஒருகட்டத்தில், சிக்கியிருக்கும் சுரங்கப் பணியாளர்களை மீட்க இன்னும் 12 மீற்றர்தான் துளையிட வேண்டும் என்ற சூழலில், அதற்கான பணியிலிருந்த ஆகர் (Auger) இயந்திரத்தின் ஒரு பகுதி சுரங்கத்தில் சிக்கிக்கொண்டது. அதை வெட்டி எடுத்தால்தான் அடுத்தகட்ட மீட்புப் பணியைத் தொடங்க முடியும் என்று மீட்புக்குழுக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் அவ்வளவு எளிதல்ல. காரணம், மனிதர்கள் மட்டுமே இறங்கி அதைச் சரிப்படுத்த முடியும் எனக் கூறப்பட்டது.
இத்தகைய நெருக்கடியான சூழலில்தான், `எலித்துளை’ முறையைப் பயன்படுத்தலாம் என மீட்புக்குழு கூறியது. அதைத் தொடர்ந்து டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த `எலித்துளை’ நிபுணர்கள் அழைத்துவரப்பட்டு, ஒருவழியாக மிச்சமிருந்த தூரத்தையும் துளையிட்டு, பின்னர் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் மூலம், சுரங்கப் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், இத்தகைய எலித்துளை சுரங்கப்பணிக்கும், இதில் ஈடுபடக் கூடாது எனத் தொழிலாளர்களுக்கும், இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டிருப்பது கவனிக்கப்படவேண்டியது. இதன் காரணமாகத்தான், தற்போது இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் எலித்துளை சுரங்கப்பணி நிபுணர்கள் என்று உத்தரகாண்ட் அரசின் நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறியிருந்தார்.
எலித்துளைப் பணியும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களும்!
பொதுவாக, இந்த எலித்துளை சுரங்கப்பணி என்பது நிலக்கரிச் சுரங்கங்களில் இயந்திரங்களின் உதவி எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க மனிதர்களால் நிலக்கரியை வெட்டியெடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறை. இதில் ஈடுபடும் தொழிலாளர்கள், இயந்திரங்களால் நிலக்கரியை வெட்டி எடுக்க முடியாத பகுதிகளில், எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், மண்வெட்டி, கூடையுடன் ஓர் ஆள் செல்லுமளவுக்குத் துளையிட்டுக்கொண்டே சென்று, நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள்.
எலித்துளை சுரங்கப்பணி
இதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று, மலைச் சரிவுகளில் தொழிலாளர்கள் பக்கவாட்டு வெட்டு முறையில் குறுகிய அளவில், நிலக்கரிப் படிமங்கள் வரும்வரை சுரங்கங்களைத் தோண்டி உள்ளே சென்று, அங்கிருக்கும் நிலக்கரியை மண்வெட்டியால் வெட்டி, கூடைகளில் எடுத்துவருவார்கள்.
எலித்துளை சுரங்கப்பணி
மற்றொரு முறை, 10 முதல் 100 சதுர மீற்றர் அளவில், 100 முதல் 400 அடி ஆழம் வரை செங்குத்தாகக் குழி தோண்டப்பட்டு, நிலக்கரி படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் தொழிலாளர்கள் கிடைமட்டமாக எலிவளைபோல குறுகிய அளவிலான சுரங்கங்களைத் தோண்டி நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள். இப்படியான ஆபத்தான முறையில், எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் நிலக்கரியை வெட்டியெடுக்கும் எலிவளை சுரங்கப்பணித் தொழிலாளர்களின் உயிருக்கு, இதில் எந்த உத்தரவாதமும் இல்லை.
எலித்துளைச் சுரங்கப்பணி தடைசெய்யப்பட்டது ஏன்?
இது தடைசெய்யப்பட்டதற்கான காரணங்கள், இதில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத ஆபத்தான வேலைமுறையும், சுற்றுச்சூழல் பாதிப்பும்தான். சுற்றுச்சூழல் பாதிப்பைப் பொறுத்த அளவில், எலித்துளை சுரங்கம், ஆறுகளின் அமிலமயமாக்கல், காடழிப்பு, மண் அரிப்பு, உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீர்க்குலைவு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும், எலிவளை சுரங்கப்பணியிலிருக்கும் தொழிலாளர்கள், மழைக் காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளம் போன்றவற்றால் உயிரிழந்த பதிவுகளும் இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுகிறது.
எலித் துளை சுரங்கப்பணி
அந்த வரிசையில், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள், பாதுகாப்பற்ற தொழிலாளர்களின் நிலைமைகளை கவனத்தில்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், 2014இல் எலித்துளை சுரங்கப்பணிக்குத் தடைவிதித்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுத்தல், தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்துதலை நோக்கமாகக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டாலும்கூட, பொருளாதாரக் காரணிகள், உள்ளூர் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரக் காரணிகள் இல்லாததால், சில பகுதிகளில் இந்த நடைமுறை நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மேகாலயாவில் இன்றும் இந்த எலித்துளை சுரங்கப்பணி நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
நன்றி – விகடன்