ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று மாலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழீழ போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

வீடியோவில் என்ன இருந்தது?

நேற்று வெளியான வீடியோவில், ஒரு நாள் தமிழீழ தாயகம் திரும்பி, அங்கு அவர் மக்களோடு இருந்து, அவர்களுக்கான பணி செய்வதற்கு காலம் வாய்ப்பளிக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியிருந்தார்.

குரல் வளை நசுக்கப்பட்ட மக்களாகவே ஈழத்தீவில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் எனக் கூறிய துவாரகா, “ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றலாம் என போர் நிகழ்ந்த காலங்களில் ஆசை வார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், இன்று வரை எமது மக்களுக்கு ஒரு காத்திரமான ஒரு அரசியல் தீர்வை வழங்கவில்லை,” என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

“சிங்கள இனவெறி கொண்ட அரசியல் இயந்திரத்தினாலும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்ட வகையில் பொய்யான கருத்துகள் விதைக்கப்பட்டு, அப்பாவி சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாக தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும் நான் அறிவேன்,” என்றும் அவர் கூறினார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் பதில்

கேணல் நலின் ஹேரத்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி வெளியிட்ட வீடியோ குறித்து, பிபிசி தமிழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தை தொடர்புக் கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் பதிலளித்தார்.

செயற்கை நுண்ணறிவு வேலையா?

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவை, செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) மூலம் வடிவமைத்துள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி, இலங்கையின் ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

செயற்கை நுண்ணறிவின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள யுவதி, துவாரகாவை போன்று, மாவீரர் தினத்தன்று உரை நிகழ்த்த உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நார்வே உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் பணம் திரட்டும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பிலும் பிபிசி தமிழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத்திடம் வினவியது.

”இந்த விடயம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.” என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் பதிலளித்தார்.

வீடியோவில் தோன்றியது துவாரகாவா? முக அசைவுகளில் சந்தேகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை என நேற்றைய தினம் வெளியிடப்பட்ட காணொளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளமை உறுதி என தமிழகத்தின் பத்திரிகையாளரும், இணைய குற்றத் தடுப்பு வல்லுநருமான முரளிகிருஷ்ணன் சின்னதுரை தெரிவிக்கின்றார்.

”துவாரகாவின் மொழி சரியாக இருந்த போதிலும், வாய் அசைவுகள், முக அசைவுகள், சதை அசைவுகள் பொருத்தமற்றவையாக காணப்படுகின்றன.

காணொளியின் வெளிச்சம் முகத்திற்கு அதிகமாக இருக்கின்றது. கண்களின் அசைவுகள் வரையறுக்கப்பட்டிருக்கும். கைகளை காணக்கூடியதாக இல்லை. குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட ஒன்றாகவே இதனை பார்க்க முடிகின்றது” என அவர் கூறுகின்றார்.

இணைய வழியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு அடையாள திருட்டாகவே, தான் இதனை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவசரமாக வெளியிடப்பட்ட காணொளியாகவே தான் இதனை பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், தமிழகத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், அதனை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை கூறுகின்றார்.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை

 

துவாரகா வீடியோ போலி – சேப்தெம் இந்தியா பௌன்டேஷன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என சேப்தெம் இந்தியா பௌன்டேஷன் அமைப்பின் நிறுவுநரும், தலைவருமான பிரவீன் கலைச் செல்வன் தெரிவிக்கின்றார்.

துவாரகாவின் வீடியோ வடிவமைக்கப்பட்ட ஒன்று என சமூகத்தில் எழுந்த கருத்துகளை அடுத்து, பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ மிகவும் துல்லியமாக தயாரிக்கப்பட்டது என அவர் கூறுகின்றார்.

தமிழ் மக்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தவறான தகவல் மற்றும் பிரசாரத்திற்காக தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றமை, பாரிய சவால்களை எடுத்துக் காட்டுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சேப்தெம் இந்தியா பௌன்டேஷன் அமைப்பின் நிறுவுநரும், தலைவருமான பிரவீன் கலைச் செல்வன் தெரிவிக்கின்றார்.

பிரவீன் கலைச் செல்வன், சேப்தெம் இந்தியா பௌன்டேஷன்

“மொழிநடையில் சந்தேகம்”

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முயற்சியாகவே, துவாரகா என்ற போர்வையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக பத்திரிகையாளரும், ஊடக விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தெரிவிக்கின்றார்.

”2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இன்று வரையான 14 வருடங்களில் இலங்கை அரசாங்கம் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்கவில்லை. இந்தச் சூழலில் மாவீரர் தினம் மிகவும் எழுச்சியாக நடந்துள்ளது.

அனைத்து மாவீரர்கள் துயிலும் இல்லங்களையும் மக்கள் தாமாகவே முன்வந்து, துப்பரவு செய்து, அங்கு மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளனர்.

எந்தவொரு நபரும் இதனை ஏற்பாடு செய்யவில்லை. மக்கள் தாங்களாகவே முன்வந்து, இந்த நிகழ்வை செய்துள்ளார்கள்.

மக்களின் எழுச்சி இயல்பாக வளர்ந்து வருகின்ற நேரத்தில், இந்த மக்களின் எழுச்சியை கொச்சைப்படுத்தும் வகையில் துவாரகாவின் வீடியோ வெளிவந்துள்ளது,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர்,”இது மிகவும் பொய்யான ஒரு விடயம். ஏனென்றால், வாரிசு அரசியலை ஒரு நாளும் பிரபாகரன் அறிமுகப்படுத்தவில்லை.

பிரபாகரன் ஒரு நாளும் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை. இந்த சமூகத்தின் அரசியல் விடுதலை என்றே அவர் சொல்லி வந்தார்.

ஒவ்வொரு மாவீரர் தின உரையை பார்த்தால் தெரியும், சிங்கள மக்களுடன் கூட பகைமை இல்லை என்று தான் அவர் சொல்கின்றார். தங்களின் உரிமையை நாங்கள் கேட்கின்றோம். உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்று தான் சொல்கின்றார்,” என்றார் நிக்ஸன்.

 

அ.நிக்ஸன், மூத்த பத்திரிகையாளர்

துவாரகா பேசியதாக வெளியான வீடியோ பொய் எனக் கூறிய நிக்ஸன், ” அந்த பிள்ளை பயன்படுத்திய மொழிநடை, ஈழத் தமிழர்கள் பயன்படுத்தும் மொழிநடை அல்ல. உச்சரிப்பு பிழைகள் காணப்படுகின்றன.

அடுத்தது மாநிலம் என்ற வசனம் வருகின்றது. நாங்கள் ஒரு நாளும் மாநிலம் என்று பாவிப்பதில்லை. அரசியலுக்கு பதிலாக அறசியல் என வருகின்றது. இது மொழி வடக்கு கிழக்கு மக்களின் மொழி உச்சரிப்பு கிடையாது. இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களிடையே தான் இப்படியாக வசனங்கள் வரும்,”என்றார் அவர்.

மேலும், இந்த வீடியோ வெளியானதற்கு பின் இலங்கை அல்லது இந்தியாவின் புலனாய்வுத்துறைகள் இருக்கலாம் என அவர் சந்தேகித்தார்.

“இதற்கு பின்னால் யாரோ ஒரு சக்தி இருக்கின்றது. அந்த சக்தி யார் என்று தெரியாது. இலங்கை புலனாய்வு துறையாகவும் இருக்கலாம், இந்திய புலனாய்வு துறையாகவும் இருக்கலாம். 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான உணர்வையும், அறிவையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஒரு திட்டமாகவே இதனை பார்க்கலாம்,” என்றார்.

Share.
Leave A Reply