ஆலங்கட்டி மழை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பணமழை கேள்விப்பட்டதுண்டா என்றால் இருக்க முடியாது. இந்தியாவின் டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

நொய்டாவில் உள்ள வீதியில் திடீரென நாணயத்தாள் மழை பொழிந்தது.

மக்கள் ஆரம்பத்தில் போலி நாணயத்தாள் என்று நினைத்தனர். ஆனால் அதனை எடுத்துப் பார்த்தபோது அவை உண்மையான நாணயத்தாள்களாக இருந்தன. இதனால் வீதியில் கிடந்த நாணயத்தாள்களை எடுக்க மக்கள் முண்டியடித்தனர். வீதிகளை மக்கள் அடிக்கடி கடந்தனர்.

வாகனங்களில் சென்றவர்கள் கூட தங்களது கார், முச்சக்கர வண்டி, இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க ஓடினர். அனைவரும் பணமழை பொழிகிறது என்றுதான் நினைத்தனர்.

ஆனால் அதன் பிறகுதான் திருமணத்திற்கு ஆடம்பர கார்களில் சென்ற இளைஞர்கள் கார்களில் இருந்து பணத்தை வீசி எறிந்துவிட்டு சென்றது தெரிய வந்தது. பணத்தை எடுக்க முயன்றத்தில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். பணமழை குறித்து கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்து விசாரணை நடத்தி வீதியில் பணத்தை வீசி எறிந்த 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு காருக்கும் தலா 33 ஆயிரம் ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) அபராதம் விதித்தனர்.

வீதியில் பணம் வீசப்பட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. வீதியில் இது போன்று பணத்தை வீசுவது இது ஒன்றும் புதிதல்ல.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட நொய்டாவில் இருந்து ஆடம்பர காரில் சென்ற ஒரு சிறுவன் கார் யன்னல் வழியாக பணத்தை வீதியில் வீசி எறிந்தார்.

அச்சிறுவனும் திருமணம் ஒன்றுக்கு சென்றபோதுதான் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply