கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாதளவு சீரற்று காணப்படுகிறது.

குறிப்பாக, மழைக் காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் இந்த வீதி கால்வாய் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மேலும் கூறுவதாவது :

நாளாந்த தேவைகளுக்காக இந்த வீதியூடாக பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

பாடசாலை மாணவர், வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய தேவையுடையோர், ஏனைய அவசர தேவைக்காக பயணிப்போர் இவ்வீதியில் நடந்து செல்வதோ அல்லது வாகனத்தில் பயணம் செய்வதோ கடினமாக உள்ளது.

இதனால் வெளியிட தேவைகளுக்காக செல்ல முடியாமல் வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பெய்து வரும் அடை மழை காரணமாக பாடசாலை மாணவர்கள் கூட பாடசாலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருக்கின்றனர்.

பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வதாயின் ஒரு நாளைக்கு மாத்திரமே பாடசாலை சீருடையை பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதனால் பிள்ளைகள் முற்றும் முழுதாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் ‘இந்த வீதியை புனரமைத்து தருகிறோம், எமக்கு வாக்களியுங்கள்’ என்று கூறினார்கள்.

பொதுவாக இதுபோன்ற அரசியல்வாதிகள் எமது வீடு தேடி வருவார்கள். வருகின்றபோது வீதியை புனரமைத்து தருவதாக கூறி எமது வாக்குகளை பெற்றுச் செல்கின்றனர்.

“வாக்களியுங்கள்; நாங்கள் வீதியை புனரமைத்து தருகிறோம்” என்று சொல்லிச் செல்பவர்களை  பின்னர் மீண்டும் அடுத்த தேர்தல் காலங்களில்தான் காணக்கூடியதாக உள்ளது.

தற்போது இவ்வீதியில் இரவு வேளைகளில் விஷப் பூச்சிகள் அதிகமாகிவிட்டதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கார்பட் வீதியோ அல்லது கொங்கிரீட் வீதியோ கேட்கவில்லை. வீதியில்  தண்ணீர் தேங்கி நிற்காமல், வடிந்து ஓடக்கூடியவாறு ஒரு சீரான பாதையை அல்லது கால்வாயையேனும் அமைத்துத் தருமாறு கேட்கிறோம் என தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பாக முன்பு பல தடவைகள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

Share.
Leave A Reply