கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் உள்ள மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் ஆயுத முனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று (2) காலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த இந்த ஆயுதக் கும்பல் முதலில் அங்கிருந்த தொழிலதிபரையும் , அவரது மனைவி உட்பட குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.

இவ்வாறு, குறித்த வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவினர், அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணம் என்பனவற்றை கொள்ளையடித்த ஆயுதக் குழுவினர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply